எம்மில் பலருக்கு திடீரென்ற தலைவலி, நெஞ்சு வலி, படபடப்பு,மூச்சிரைப்பு, இயல்பற்ற இதயத்துடிப்பு, மயக்கம், வாந்தி,மூக்கில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது என்பதை தெரிவிக்கும் அறிகுறிகள் என்பதை உணரவேண்டும்.

யாரெல்லாம் அதிக உடலுழைப்பு இல்லாமல் இருக்கிறார்களோ அல்லது புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அல்லது சாப்பிடும் சாப்பாட்டில் அதிகளவிலான உப்பை சேர்த்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்படும். இதனைத் தவிர்த்து மன அழுத்தம், ஹோர்மோன் சுரப்பியின் அளவு மாறுபாடுதல், சிறுநீரக கோளாறு, பாரம்பரியமான மரபணு கோளாறுகள் உள்ளவர்களுக்கும் இரத்த அழுத்த பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

இரத்த அழுத்தத்தின் அளவை கவனித்து கண்காணித்து அதனை இயல்பான அளவில் பராமரிக்கவில்லை எனில், இரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் உள்ள இரத்த குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி பக்கவாதத்தை உண்டாக்கிவிடும்.

கவனிக்கப்படாத இரத்த அழுத்தம் அதிகரித்து, இரத்த உறைவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும். இப்பிரச்சினையால் இதயத்தில் உள்ள தமனிகள் சுருங்கிவிடுகின்றன. இதன் காரணமாக இரத்தவோட்டம் பாதிக்கப்பட்டு இரத்த உறைவு ஏற்படுகிறது. இந்நிலையில் மூளையில் ஏற்படும் பாதிப்புகளை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்தத்தில் பற்றாகுறை ஏற்பட்டால் அதனை ischemic stroke என்றும், மூளையில் உள்ள இரத்தகுழாய்களில் இரத்த கசிவு  மூலம் பாதிப்பு ஏற்பட்டால் அதனை hemorrhagic stroke என்றும் குறிப்பிடுவார்கள்.

இதனை குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளை விட உடனடியாக நிவாரணமளிக்கக்கூடிய சிகிச்சைகளே அதிகம். இருப்பினும் இதனை தவிர்க்கவேண்டும் என்றால் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைக்கவேண்டும். அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை தொடர்ந்து பின்பற்றினால் இவை கட்டுக்குள் இருக்கும். அதே சமயத்தில் உடல் எடையையும் சீராக பேணி பராமரிக்கவேண்டும்.

Dr.அனில்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்