(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெறவுள்ளது.
இந்தியாவின் ஹைதராபாத்தில் மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய 2023 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கடைசியாக சந்தித்த இந்த இரண்டு அணிகளும் ஐசிசி கிரிக்கெட் போட்டி ஒன்றில் மீண்டும் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந்தியாவுக்கு எதிராக ஹைதராபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆரம்ப வீரர் ட்ரவிஸ் ஹெட் குவித்த 137 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவை உலக சம்பியனாக்கி இருந்தது.
ஐசிசி கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடர்கின்ற நிலையில் 2023 தோல்விக்கு பதிலடி கொடுத்து இன்றைய போட்டி முடிவை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள இந்தியா முயற்சிக்கவுள்ளது.
இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் 2010க்குப் பின்னர் ஐசிசி நொக் அவுட் போட்டிகளில் சந்தித்துக்கொண்ட நான்கு சந்தர்ப்பங்களில் ஒரு முறை மாத்திரமே இந்தியா வெற்றிபெற்றுள்ளது.
எட்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடத்தப்படும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் அதிசிறந்த பதினொரு வீரர்களைக் களம் இறக்கவுள்ளன.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி விஜயம் செய்வதை இந்திய அரசு அனுமதிக்க மறுத்ததால் இந்தியா தனது சகல போட்டிகளையும் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் விளையாடிவருகிறது. இது அவ்வணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஒன்பதாவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண அத்தியாயத்தில் இந்தியா தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியீட்டி ஏ குழுவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளை தலா 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் நியூஸிலாந்தை 44 ஓட்டங்களாலும் இந்தியா வெற்றிகொண்டிருந்தது.
இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் ஷுப்மான் கில் ஒரு சதம் உட்பட 149 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி ஒரு சதம் உட்பட 133 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டு அரைச் சதங்களுடன் 150 ஓட்டங்களையும் பெற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பந்துவீச்சில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் மாத்திரம் விளையாடிய சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அவரைவிட மொஹம்மத் ஷமி, குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 3 போட்டிகளில் விளையாடி தலா 5 விக்கெட்களையும் ஹர்ஷித் ராணா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
இம்முறை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக சாதனைமிகு வெற்றியுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியா, அதன் பின்னர் இரண்டு போட்டிகள் மழையினால் தடைப்பட்டதை அடுத்து 4 புள்ளிகளுடன் பி குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் விளையாட முன்னேறியது.
தனது ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 352 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து 356 ஓட்டங்களைக் குவித்து 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இதன் மூலம் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமல்லாமல் ஐசிசி கிரிக்கெட் வரலாற்றிலும் மிகப் பெரிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த அணி என்ற சாதனையை அவுஸ்திரேலியா நிலைநாட்டியது.
அதற்கு முன்னர் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 345 ஓட்டங்களை பாகிஸ்தான் விரட்டிக் கடந்த இலக்கே ஐசிசி கிரிக்கெட் போட்டி ஒன்றில் முந்தைய மிகப் பெரிய வெற்றி இலக்காக இருந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக முழுமையாக விளையாடப்பட்ட போட்டியில் சதம் குவித்த ஜொஷ் இங்லிஸ், 2 போட்டிகளில் மொத்தமாக 120 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட அலெக்ஸ் கேரி, ட்ரவிஸ் ஹெட், மெத்யூ ஷோர்ட் ஆகியோர் தலா ஒரு அரைச் சதம் பெற்றனர்.
பந்துவீச்சில் பெஞ்சமின் ட்வார்ஷுய்ஸ் 6 விக்கெட்களையும் அடம் ஸம்பா 4 விக்கெட்ளையும் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலிய அணியில் உபாதைக்குள்ளான மெத்யூ ஷோர்ட்டுக்கு பதிலாக இளம் சகலதுறை வீரர் கூப்பர் கொனலி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இதுவரை 151 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 84இல் அவுஸ்திரேலியாவும் 57இல் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. பத்து போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.
இந்த முடிவுகள் என்னவாக இருந்தாலும் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை விட இந்தியாவே திறமையாக விளையாடி ஜமாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள்
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சார் பட்டேல், கே.எல். ராகுல், ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.
அவுஸ்திரேலியா: ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் இங்லிஸ், மானுஸ் லபுஸ்ஷேன், அலெக்ஸ் கேரி, க்லென் மெக்ஸ்வெல், கூப்பர் கொனலி, பென் ட்வார்ஷுய்ஸ், நேதன் எலிஸ், அடம் ஸம்ப்பா, ஸ்பென்சர் ஜோன்சன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM