bestweb

ஆப்கானிஸ்தானுடனான போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறியது

Published By: Vishnu

01 Mar, 2025 | 01:20 AM
image

(நெவில் அன்தனி)

லாகூர் கடாபி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டி சீரற்ற காலநிலை காரணமாக இடையில் கைவிடப்பட்டதால் பி குழுவிலிருந்து அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டி கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.

இதனை அடுத்து அவுஸ்திரேலியா 4 புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டது.

ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆனால், தென் ஆபிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி முடிவிலேயே ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறுமா இல்லையா என்பது தெரியவரும்.

பி குழுவில் இடம்பெறும் தென் ஆபிரிக்காவும் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 109 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

மழையினால் ஆட்டம் தடைப்பட்டால் டக்வேர்க் லூயிஸ் முறைமை அமுலுக்கு வரும் என்பதை அறிந்திருந்த அவுஸ்திரேலியா அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது.

மெத்யூ ஷோர்ட் 15 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் விக்கெட்டில் 27 பந்துகளில் 44 ஓட்டங்களை ட்ரவிஸ் ஹெட்டுடன் பகிர்ந்தார்.

தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இரவு 7.00 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது.

ட்ரவிஸ் ஹெட் 40 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 59 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

மழை விட்ட போதிலும் மைதானம் ஈரலிப்பாக இருந்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாது எனத் தீர்மானித்த மத்தியஸ்தர்கள் இரவு  9.00 மணியளவில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.

சிதிக்குல்லா அத்தல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து ஆப்கானிஸ்தானை கௌரவமான நிலையில் இட்டனர். ஆனால் மழை பெய்ததால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

சிதிக்குல்லா அத்தல் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட இப்ராஹிம் ஸத்ரான் 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதி 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கையில் 17 வைட்கள் உட்பட 37 உதிரிகள் அடங்கியிருந்தன.

பந்துவீச்சில் பென் த்வார்ஷுய்ஸ் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

 லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135...

2025-07-14 01:49:56
news-image

இலங்கையை 83 ஓட்டங்களால் வீழ்த்திய பங்களாதேஷ்,...

2025-07-13 23:33:55
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை...

2025-07-13 14:42:53
news-image

இங்கிலாந்து - இந்தியா மூன்றவாது டெஸ்ட்:...

2025-07-13 06:00:42
news-image

ஐ.சி.சி. ஆடவர் இருபதுக்கு - 20...

2025-07-12 09:43:48
news-image

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 7...

2025-07-11 23:46:54
news-image

இங்கிலாந்து 251 - 4 விக்.,...

2025-07-11 05:24:07
news-image

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின்...

2025-07-10 22:30:31
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

2025-07-10 20:43:20
news-image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில்...

2025-07-09 20:27:23
news-image

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இலங்கை -...

2025-07-09 20:22:32
news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46