கட்டாரின் அயல் நாடுகள், அந்நாட்டுடனான சகல தொடர்புகளையும் துண்டித்தமையால் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் தட்டுப்பாடுகளை தீர்ப்பதற்காக ஈரான் ஒருதொகை உணவுப்பொருட்களை 5 விமானங்கள் மற்றும் 3 கப்பல்களில் அனுப்பியுள்ளது.

கட்டாரின் அயல் நாடுகளான சவுதிஅரேபியா, ஏமன், ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, ஜோர்தான் மற்றும் லிபியா உள்ளிட்ட நாடுகள், கட்டார் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோவதாக குற்றம் சுமத்தி, தமது நாட்டுடனான அரசியல், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொடர்புகளை முழுமையாக நிறுத்தியுள்ளன.

இதனால் கட்டாரில் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் எழுந்துள்ளதாக அந்நாடு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து ஈரான் கட்டாரிற்கு சுமார் 440 டன் உணவுப்பொருட்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அத்தோடு கட்டரிற்குள் பிரவேசிக்கும் விமானங்கள் குறித்த 6 நாட்டு வான்பரப்புகளில் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டாரிற்குள் பிரவேசிக்கும் சுமார் 100 விமானங்களுக்கு தினமும் ஈரான் வழியாக பிரவேசிப்பதற்கு அனுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வளைகுடா பிராந்தியத்தில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பதற்கு, குவைத் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஈரான் கட்டாரிற்கு பாதுகாப்பு உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமை வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.