(மா.உஷாநந்தினி)
ஒரு முறை ஜெர்மனியில் இசைக் கச்சேரியொன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. வீணையை மீட்டியவாறு அமிர்தவர்ஷினி ராகத்தில் லயித்தபடி பாடிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அமிர்தவர்ஷினி ராகத்தை பாடினால் மழை பொழிந்தே தீரும் என்பது இசை பக்தர்களின் ஒருவித நம்பிக்கை.
அவர் பாடி முடித்தபோது, கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்று “எங்கே மழையை காணோம்” என்று கேலியாக சொல்லிச் சிரித்தார். அந்த சங்கீதப் பெண்மணியின் முகத்தில் எந்த தளர்வும் இருக்கவில்லை.
ஆனால், சிறிது நேரத்திலேயே மழை பெய்தது. எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பின், அந்தப் பெண்மணியை வியந்து பாராட்டினார்கள். கேலி செய்த நபரோ பேச வார்த்தையின்றி அரங்கத்தை விட்டு வெளியேறினார்.
சரியாக, அந்த சில நிமிடங்களில் மழை பொழிந்தது எப்படி?! அமிர்தவர்ஷினி ராகம் பாடிய அருந்ததி ஸ்ரீரங்கநாதனுக்கே ஏதும் புரியாத நிலை! இருந்தபோதிலும், இசையில் அவர் கொண்ட பக்தி, தக்க சமயத்தில் பலனளித்தது என்றே அவர் உட்பட பலரும் எண்ணிக்கொண்டனர்.
ஆம்... அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் சங்கீத அர்ப்பணம் அத்தகையது.
இலங்கையில் கலைகள் நலிவடையாமல் கட்டிக் காப்பதற்காகவென காலத்துக்கு காலம் பணி செய்து பிரகாசித்தவர்களில் முக்கியமானவர் அருந்ததி.
நுண்கலைகளின் மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய சாதனைகள், தனது கலைப் பயணத்தில் இளம் சந்ததிக்காக அவர் விட்டுச் சென்ற காற்தடங்கள் பலப்பல.
இசை, நடனம், நாடகமென எந்தக் கலையாயினும் இவரது பங்கேற்பு இல்லாத நிகழ்வுகளை பார்ப்பது அன்றைய நாட்களில் அரிது என பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
அவ்விதமாக, உள்ளூர், வெளியூர் என எங்கெல்லாம் இசைக் கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் மேடையேறினவோ, அங்கெல்லாம் அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பெயரும் குரலும் தொடர்ச்சியாக ஒலித்த காலகட்டத்தை, பலரும் ஏக்கமாக நினைத்துப் பார்க்கும் சூழ்நிலையை காலம் இன்று ஏற்படுத்தியிருக்கிறது!
சில ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்துவந்த அவர், கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை மறைந்துவிட்டதாக வெளிவந்த செய்தி ஒட்டுமொத்த கலையுலகினரையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் கலையை மட்டுமன்றி, கலையோடு சேர்த்து வாழ்க்கையையும் நேசித்தவர். கலையோடு வாழ்க்கையையும் இணைத்துப் பயணித்தவர். தனக்கு கலை பயிற்றுவித்தவர்களையும் தன்னிடம் கலை பயின்று வளர்ந்தவர்களையும் தனது கலையால் மனம் மகிழ்ந்த ரசிகர்களையும் ஒரே நேர்கோட்டில் வைத்து மதிக்கத் தெரிந்த பண்பாளர், அவர்.
இலங்கையின் வெவ்வேறு இன, மத, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியங்களையும் கலைகளால் ஒன்றிணைத்து அரும்பணி ஆற்றிய இந்த கலையாளுமையின் மரணம், தமிழ், சிங்கள இன பேதமின்றி அனைத்து கலைஞர்களிடத்திலும், அனைத்தின ரசிகர்களிடத்திலும் ஒருவித வெறுமையை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
இவரிடம் தமிழ், சிங்கள மொழிகளின் மூலமாக கலைகளை பயின்ற பலர் தற்போது விரிவுரையாளர்களாகவும் பிரபல கலைஞர்களாகவும் வலம் வருகின்றனர். அவர்கள் அனைவருக்குள்ளும் இவரைப் பற்றிய பதிவுகள், நினைவலைகள் ஆயிரமாயிரம்!
முக்கியமாக, அருந்ததி ஸ்ரீரங்கநாதனிடம் கர்நாடக குரலிசை பயின்ற முதல் சிங்கள மாணவர் என்ற ரீதியில் கலாநிதி நிஷங்க அபேரத்ன, இரண்டு நாட்களுக்கு முன் தனது குருவைப் பற்றி உறுக்கமாக என்னிடம் பகிர்ந்துகொண்டதை இங்கே சொல்லியாகவேண்டும்.
தற்போது கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய இசைத்துறை தலைவராகவும் அப்பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் சேவையாற்றி வரும் கலாநிதி நிஷங்க அபேரத்ன தனது ஆசிரியை அருந்ததி ஸ்ரீ ரங்கநாதனை பற்றிய நினைவுகளை பெருமையோடும் வேதனையோடும் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.
"இன மோதல்கள் நிறைந்த காலகட்டத்தில் எனக்கு கர்நாடக இசையை கற்றுக்கொடுத்தவர்; வழிகாட்டி; எனக்கு இன்னொரு தாய்!" - கலாநிதி நிஷங்க அபேரத்ன
“எனது ஆசிரியை திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதனை முதன்முதலில் 2000ஆம் ஆண்டு கொழும்பில் சந்தித்தேன். அப்போது எனக்கு 20 வயது.
அந்த இள வயதில் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாசார மத்திய நிலையத்தில் அருந்ததி ஆசிரியையிடம் கலை பயிலத் தொடங்கினேன்.
அந்த முதல் நாள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.
அப்போது இந்திய கலாசார மத்திய நிலையம் கொழும்பு 7, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்திருந்தது. அன்றைய தினம் மத்திய நிலைய வளாகத்துக்குள் நுழைந்ததும் எனக்குள் பெரிய எதிர்பார்ப்பு தோன்றியது.
அங்குள்ள வகுப்பறையொன்றில் எனது குருவை முதன்முதலாக பார்த்தபோது அவரிடத்தில் மிகுந்த மரியாதையுணர்வு ஏற்பட்டது.
அவருடைய வழிகாட்டலின் கீழ் நான் கர்நாடக குரலிசை பயின்றேன்.
ஆம். கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதனிடம் கலை பயின்ற முதல் சிங்கள மொழிமூல மாணவன் நான் என்பதை பெருமையோடும் கௌரவத்தோடும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இலங்கையில் இன மோதல்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் அவர் எனக்கு கர்நாடக இசையை கற்றுக்கொடுத்தார். அது மட்டுமன்றி, எனக்கொரு வழிகாட்டியாகவும் எனக்கு “இன்னொரு தாயாகவும்” விளங்கினார்.
எனது இசைப் பயணத்தை வடிவமைக்கவும் ஒரு கலைஞராக என்னை நிலை உயர்த்துவதற்கும், தனக்கே உரிய சேவை நோக்கத்தோடு எனது குரு முழு மனதுடன் தன்னை அர்ப்பணித்தார்.
எமது குரு - சீட உறவு நிலையில் நாங்கள் பல அறிவார்ந்த விடயங்களை பகிர்ந்துகொண்டோம்.
அவரது உன்னதமான அர்ப்பணிப்பும் இடைவிடாத முயற்சிகளும் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தின.
இலங்கையின் கலைத்துறையில் ஒரு வலிமையான, ஆற்றல்கள் பொருந்திய ஆளுமையாக அவர் அறியப்பட்டார். இசையில் தேர்ச்சி பெற்ற ஒருவராக மட்டுமன்றி, அனுபவம் மிக்க நிர்வாகியாகவும் அவர் விளங்கினார்.
கலைஞர், சிறந்த நிர்வாகி என இரு வேறு பாத்திரங்களையும் சமமாக தனக்குள் ஏற்று, சிறப்பாக செயற்பட்ட விதம், அவரது திறன் உண்மையிலேயே எனக்கு ஊக்கமளித்தன.
அவரது இசையாற்றல், தலைமைத்துவப் பண்பு இரண்டிலுமிருந்து நான் விலைமதிப்பற்ற பல பாடங்களை கற்றுக்கொண்டேன்.
இன்று தென்னிந்திய இசைத்துறையை மென்மேலும் முன்னேற்றுவதற்கு நான் உழைத்து வரும் இத்தருணங்களில், என்னை நெறிப்படுத்துவது, எனது குருவின் வழிநடத்தலின் கீழ் நான் பெற்ற அனுபவமும் ஞானமுமே ஆகும்.
இலங்கையின் கலைத்துறை வளர்ச்சிக்கு திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பங்களிப்பு அசாதாரணமானது.
பாடகி, இசைக்கலைஞர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், இசையமைப்பாளர், ஒலிபரப்பாளர், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராக அவர் ஆற்றிய சேவைகளினூடாக நாட்டின் இசைத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
தனது ஆரம்ப காலத்தில் நடனக்கலையினை பயின்ற அவர் நடனம் தொடர்பான கலைத் தயாரிப்புகளை உருவாக்கியதன் மூலம் இலங்கையின் கலைப் பாரம்பரியத்தை பேணுவதிலும் பங்காற்றினார்.
அனைத்துக்கும் பின்னணியில் நின்று, இசைக்கலைஞர்களையும் நடனக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கலை வடிவங்களையும் பல்வேறு கலையம்சங்களையும் உருவாக்கி, நாடு முழுவதும் கலையை கொண்டு சேர்த்தார்.
ஒரு தமிழ்ப் பெண்மணியான அவர், என்னை போன்ற ஒரு சிங்கள மாணவருக்கு கர்நாடக இசையை கற்பித்ததன் மூலம் நல்லிணக்கத்தை ஊக்குவித்து முன்னுதாரணமாகவும் விளங்கினார்.
கலைகளின் மூலம் ஒற்றுமையை காண்பிக்கும் இந்த உன்னதமான செயலால் இலங்கை வரலாற்றில் ஓர் அழியாத முத்திரையை பதித்தார்.
இலங்கையின் கலைச் சமூகத்தில் அவரது இழப்பு நீண்ட காலத்துக்கு ஆழ்ந்துணரப்படும்.
வயதான, ஓய்வுநிலை ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற சேவையை அடிக்கடி மறந்துவிடக்கூடிய இந்த காலத்தில், நான் அவரது இழப்பை இன்னும் ஆழமாக உணர்கிறேன்.
அவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற பின்னரும் கூட, இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு வரை என்னுடன் தொடர்பில் இருந்தார்!
அவர் எனது ஆசிரியர் மட்டுமல்ல, என் வாழ்க்கையில் வழிகாட்டும் ஒளியாகவும் திகழ்ந்தார்.
எனது மதிப்புக்குரிய ஆசிரியை நித்திய அமைதியையும் பேரின்பத்தையும் அடையட்டும்!” என தெரிவித்தார்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதன்....
1946 பெப்ரவரி 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சிவசுப்பிரமணியம் - வீரலட்சுமி தம்பதிக்கு ஐந்து மகள்களில் இளையவராக அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பிறந்தார்.
கல்வியும் கலைகளும் நிரம்பிய குடும்பத்தில் பிறந்த இவர், இயல்பாகவே வித்தைகளில் சிறந்தவராக வளர்ந்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையில் சிறப்பு பட்டம் பெற்ற இவர், தனக்குள் ஏற்பட்ட கலைத்தாகத்தால் பின்னர், இந்தியாவில் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புகழ்பெற்ற மேதைகளிடம் தென்னிந்திய இசை, நடனம், வீணை, குரலிசை என பல்வேறு கலை வடிவங்களை கற்றுத் தேர்ந்தார்.
பின்னர் 1973ஆம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இசைத் தயாரிப்பாளராகவும், பி்ன்னர், தமிழ் சேவை பணிப்பாளராகவும் கடமையாற்றினார். வானொலி கலைஞராகவும் வலம் வந்தார்.
பல பரதநாட்டிய அரங்கேற்றங்களுக்கு குரலிசை பங்களிப்பு வழங்கினார். உள்ளூர், சர்வதேச ஆசிரியர்களுக்கு இசை, நடனம் போன்றவற்றை கற்பித்தார்.
பின்னர், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தில் முழுநேர விரிவுரையாளராக பணியாற்றினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக விரிவுரையாளராக கடமையாற்றியபோது தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து வந்தார். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்தில் “டாக்டர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம்” இயங்கி வருகிறது.
அதுமட்டுமன்றி, அருஸ்ரீ கலையகத்தை அமைத்து அதனூடாக பல இளம் கலைஞர்களை ஊக்குவித்து, வெளிக்கொண்டுவந்து, புதிய மாணவக் குழுக்களை உருவாக்கி வழிநடத்தினார்.
தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இசை, நடனம் முதலான கலைகளை பயிற்றுவித்த இவர், கலைகளினூடாக சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் பாத்திரமாக விளங்கினார்.
இவரது கலைச் சேவையை கௌரவிக்கும் வகையில் “கலாசூரி”, “தேச நேத்ரு”, “விஸ்வ பிரசாதினி”, “கலை செம்மல்”, இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் “Award of Excellence” விருது என பல்வேறு விருதுகள், பட்டங்களை பெற்றுவிட்ட மனநிறைவோடு “எனது கடின உழைப்புக்கு வெகுமதி அளிக்கப்பட்டேன். அதுவே வெற்றிக்கு முக்கியம்” என்று தன்கடனில் நிறைவு கண்ட இந்த கலையுலக ஆளுமையின் ஆன்மா நிறைவில் அமைதி கண்டுவிட்டது!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM