(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஏ குழுவுக்கான இரண்டாவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.
பங்களாதேஷ் சார்பாக மிகவும் இக்கட்டான நேரத்தில் தௌஹித் ரிதோய் குவித்த சதம் அணியை சிறப்பான நிலையில் இட்ட போதிலும் ஷுப்மான் கில் குவித்த சதம் அதை வீணடித்து விட்டது.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 229 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
9ஆவது ஓவரில் அக்சார் பட்டேலின் ஹெட் - ட்ரிக் பந்தில் ஜாக்கர் அலியின் நெஞ்சுக்கு நேரே வந்த மிக இலகுவான பிடியை ஸ்லிப் நிலையில் தவறவிட்ட அணித் தலைவர் ரோஹித் ஷர்மா பெரும் ஏமாற்றம் அடைந்தபோதிலும் இறுதியில் ஈட்டிய வெற்றியினால் ஆசுவாசம் அடைந்தார்.
இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 59 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ரோஹித் ஷர்மா 41 ஓட்டங்களைப் பெற்றதுடன் தனது 269ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 11000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார். அவர் இதுவரை 11029 ஓட்டங்களைப் பெற்று இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது இந்திய வீரரானார்.
சச்சின் டெண்டுல்கர் (18426), விராத் கோஹ்லி (13985), சௌரவ் கங்குலி (11363) ஆகியோரே 11000 ஓட்டங்களைக் கடந்த மற்றைய மூன்று இந்தியர்களாவர்.
ரோஹித் ஷர்மா ஆட்டம் இழந்த பின்னர் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
விராத் கோஹ்லி 22 ஓட்டங்களுடன் வெளியேற அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 15 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். (144 - 4 விக்.)
அதன் பின்னர் ஷுப்மான் கில், கே.எல். ராகுல் ஆகிய இருவரும் சிறந்த நுட்பத்திறனுடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
ஷுப்மான் கில் 129 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்களாக 101 ஓட்டங்களுடனும் கே.எல். ராகுல் 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
தனது 51ஆவது போட்டியில் விளையாடிய கில் குவித்த 8ஆவது சதம் இதுவாகும். அத்துடன் கடந்த நான்கு போட்டிகளில் அவர் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதுடன் இதில் 2 சதங்கள் அடங்கியுள்ளன.
பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்ளாதேஷ் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் முதலாவது ஓவரிலிருந்து விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்தது. 9ஆவது ஓவரில் அதன் 5ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது மொத்த எண்ணிக்கை வெறும் 35 ஓட்டங்களாக இருந்தது.
9ஆவது ஓவரில் 2ஆம், 3ஆம் பந்துகளில் முறையே தன்ஸித் ஹசன் (25), முஷ்பிக்குர் ரஹிம் (0) ஆகிய இருவரையும் ஆட்டம் இழக்கச் செய்த அக்சார் பட்டேல் அடுத்த பந்தில் துரதிர்ஷ்டவசமாக ஹெட் - ட்ரிக்கை தவறவிட்டார்.
ஜாக்கர் அலியின் துடுப்பில் பட்டு ரோஹித் ஷர்மாவை நோக்கிச் சென்ற பந்து அவரது கைகளிலிருந்து நழுவி தரையில் வீழ்ந்தது.
இதனை சாதகமாக்கிக் கொண்ட ஜாக்கர் அலி திறமையாகத் துடுப்பெடுத்தாடி தௌஹித் ரிதோயுடன் 6ஆவது விக்கெட்டில் 154 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.
ஜாக்கர் அலி நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 114 பந்துகளை எதிர்கொண்டு 68 ஓட்டங்களைப் பெற்றார்.
மறுபக்கத்தில் பொறுமையும் வேகமும் கலந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தௌஹித் ரிதோய் 118 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் கடைசியாக ஆட்டம் இழந்தார். தனது 34ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ரிதோய் குவித்த கன்னிச் சதம் இதுவாகும்.
பந்துவீச்சில் மொஹமத் ஷமி 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹர்ஷித் ராணா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன்: ஷுப்மான் கில்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM