(அபிலாஷனி லெட்சுமன்)
பாவம், ராகம் மற்றும் தாளமொடு சேர்த்து உடலும் உள்ளமும் உணர்வும் ஒன்றாகக் கலந்த ஒப்பற்ற கலை நிகழ்வாக அக்ரிதி, மிதுர்த்தி இருவரும் இணைந்த பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் சிறப்புற நிகழ்த்தப்பட்டது.
“நாட்டிய கலா மந்திர்” நடனக் கலாசாலையின் நிறுவுனர் “கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவிகளும் கிருஷ்ணகுமார் - பாரதி தம்பதியின் புதல்விகளுமான அக்ரிதி, மிதுர்த்தி ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு, சென்னையைச் சேர்ந்த பரதநாட்டிய கலை வல்லுநர் “யுவகலா பாரதி” காவ்யா முரளிதரன் பிரதம விருந்தினராகவும் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி.குமாரரட்ணம், “நிர்மலாஞ்சலி” நடனப்பள்ளி இயக்குநர் கலாநிதி நிர்மலா ஜோன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெ. இராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்டர்லிங் மினரல்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் எஸ். பிரேம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
அழிந்து வரும் கலைகளுக்கு மத்தியில், தான் கற்ற கலையினை வளர்க்கப் போராடும் கலைஞர்களின் உணர்வினை எடுத்துக்காட்டும் அரங்கேற்றமாக இந்த இரு சகோதரிகளின் அரங்கேற்றம் காணப்பட்டது.
அக்ரிதி , மிதுர்த்தி ஆகிய இருவரும் நிகழ்த்திய பரதநாட்டிய அரங்கேற்றமானது வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் அமைந்த 151ஆவது அரங்கேற்றமாகும்.
இந்த ஆடல் அரங்குக்கு வாசுகி ஜெகதீஸ்வரன் நட்டுவாங்கம் நிகழ்த்தியதோடு, குரலிசைக் கலைஞராக “இசை முதுமணி” கலாநிதி அருணந்தி ஆருரன், “மிருதங்கம் லய விசாரத” ஸ்ரீ சண்முகலிங்கம் நாகராஜன், வயலின் “நுண்கலைமணி” ஸ்ரீ.எஸ்.நிலோஜன், தாள தரங்கம் “விசாரத” ஸ்ரீ ரத்னம் ரத்னதுரை மற்றும் புல்லாங்குழல் “விசாரத” ஸ்ரீ பிரியந்த தசநாயக்க ஆகியோர் அணிசேர் கலைஞர்களாக இசைப் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.
தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலான பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்திய சகோதரிகளின் ஆடல் இறை பக்தியையும் தான் கற்ற கலையின் மீது கொண்ட ஈடுபாட்டையும் நவரச உணர்வு பாவங்களையும் வெளிக்கொணர்வதாக “புஸ்பாஞ்சலி” உருப்படியை காண முடிந்தது.
நடன உருப்படிகளை அரங்கிலே ஆடும்போது இருவரும் இசைக்கேற்ப தங்கள் உடல் அசைவுகளை வெளிப்படுத்தி ஆடினர்.
ஜதீஸ்வரம் முதல் தில்லானா வரையிலான நடன உருப்படிகளுக்கு நால்வகை அபிநயச் சித்திரிப்புக்களுடன் தங்களது ஆடலை அரங்கேற்றினர்.
ஆடலின் நடுநாயகமாக பரதத்தின் அழகனைத்தையும் எடுத்துக்காட்டும் உருப்படியாக 'வர்ணம்' விளங்கியது. இது மிக நீண்ட உருப்படி என்பதாலேயே பலரால் இரசிக்க முடியாத ஆடலாக மாறிவிடுவதுமுண்டு. ஆனால், இவ்வரங்கில் சகோதரிகள் இருவரும் இணைந்து பார்வையாளர்களை கவரும் வண்ணம் நாட்டியமாடியமை அவர்களது கலை நயத்தை எடுத்துக்காட்டியது.
இறைவனுக்கு சமர்ப்பித்த உருப்படிகளான “பதம், சிவ ஸ்துதி, கீர்த்தனம்” ஆகியவற்றில் இறைவனின் திருவுருவங்களை அரங்கிலே பிரதிபலித்தமை சிறப்புக்குரியது.
தனித்தொருவர் ஆடுவதை விட சகோதரிகள் இருவரும் இணைந்து ஆடியமை அரங்குக்கு மேலும் அழகூட்டியது.
என்னையும் பார்வையாளர்களையும் ஈர்த்த ஆடலாக “கீர்த்தனம்” காணப்பட்டது.
“வேங்கடாசல நிலையம்…” என்ற “கீர்த்தனத்துக்கு அழகிய ஆடலை சகோதரிகள் இருவரும் அரங்குக்கு வழங்கியிருந்தனர். இசையமைப்பு, தாளக்கட்டுக்களுக்கு ஏற்ப வேகத்துடனும் விவேகத்துடனும் தன் ஆடலை முன்னிருத்தினர்.
கீர்த்தனத்துக்கு வழங்கிய ஆடலின் அருமையை பார்வையாளர்களின் கரகோசங்களும் அவர்கள் நடன அரங்கில் ஒன்றித்துப்போன தன்மையும் எடுத்தியம்பியது.
நாட்டிய மங்கைகளின் ஆடை அலங்காரங்கள், ஒப்பனைகள் அவர்களது ஆடலை எவ்வாறு மெருகூட்டியதோ, அதை விட அவர்களது ஆடல் கலையாற்றல் சிறப்புற வெளிப்பட்டது.
அரங்கேற்றத்தில் நாட்டியக் கலைஞர் பார்வையாளர்களின் மனதை கவரும் நொடியே, அந்த அரங்கேற்றம் முழுமையாக வெற்றி பெறும் தருணம் ஆகும்.
அந்த வகையில் குருவின் முறையான நடன அமைப்பு, இசைக் கலைஞர்களின் திறமையான இசை பங்களிப்பு, மாணவியரின் திறமையென யாவும் ஒன்று சேர்ந்து இந்த ஆடலில் தென்பட்டன.
சகோதரிகள் இருவரும் தங்களது சிறு பிராயம் முதல் கற்றுக்கொண்ட நாட்டியக்கலையினை உலகறியச் செய்யும் சந்தர்ப்பமாக நடன மேடையை பயன்படுத்திக்கொண்டார்கள் என்றால் அது ஒருபோதும் பொய்க்காது.
இந்நிகழ்வில் “யுவகலா பாரதி” காவ்யா முரளிதரன் உரையாற்றுகையில், குரு வாசுகி ஜெகதீஸ்வரனையும் ஆடல் மங்கைகளான அக்ரிதி , மிதுர்த்தி ஆகிய இருவரையும் பாராட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பைப் போலவே நடனக் கலைஞரும் நடனமும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெறுவதற்கான பயணத்துக்கு ஆர்வம், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி தேவைப்படுகின்றன.
மேலும், அக்ரிதி மற்றும் மிதுர்த்தி இருவரும் தங்கள் நடன முயற்சிகளில் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் இலட்சியம் என்பன சிறந்ததாகின்றன.
அந்த மைல்கல்லை அடைவதற்கு உறுதுணையாக இருந்த அக்ரிதி, மிதுர்த்தி ஆகியோரின் பெற்றோருக்கும் எனது வாழ்த்துக்கள். இருவரும் கலைப்பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்றார்.
அடுத்ததாக, நாட்டிய மங்கையினால் ஆடப்பட்ட “தில்லானா” உருப்படியில் சொற்கட்டுகளுடனான, விறுவிறுப்பூட்டும், உணர்ச்சி ததும்பும் ஆடலை அரங்குக்கு வழங்கியதை தொடர்ந்து, மங்கலத்துடன் அரங்கேற்றம் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் அக்ரிதி மற்றும் மிதுர்த்தி ஆகிய இருவரும் தங்கள் குரு வாசுகி ஜெகதீஸ்வரனின் கரங்களால் நாட்டிய டிப்ளோமா சான்றிதழினையும் பெற்றுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM