மியன்மாரில் 120 பேருடன் பரந்த இராணுவ விமானம், தொடர்பு எல்லையிலிருந்து காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விமானத்தின் பக்கங்கள் மற்றும் குழந்தை உட்பட மூன்று பேரின் சடலங்கள் அந்தமான் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின் இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில், 120 பேருடன் யாங்கோன் பிராந்தியத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், மேக் பகுதியில் வைத்து ராடார் தொடர்பிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், விமானத்தை தொடர்புகொள்ள தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பயன் கிட்டவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்திருந்த.

இந்நிலையில், காணாமல் போன விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தாவே நகரில் இருந்து சுமார் 136 மைல்கள் தொலைவிலுள்ள கடலில் விமானத்தின் பாகங்கள் மற்றும் மூன்று பேரின் சடலங்களை கண்டுபிடித்திருப்பதாக மேக் சுற்றுலாத்துறை அதிகாரி நாயிங் லின் ஜாவ் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். 

மேலும் அந்நாட்டு கடற்படை வீரர்கள் தொடர்ந்து குறித்த கடற் பகுதியில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

குறித்த விமானத்தில் 15 சிறுவர்கள், 35 இராணுவத்தினர் 14 விமான ஊழியர்கள் உள்ளிட்டவர்களுடன் இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 120 பேர் வரையில் இருந்ததாக மியன்மார் இராணுவ விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அத்தோடு காணாமல் போயுள்ள குறித்த விமானமானது இதுவரை சுமார் 8000 மணித்தியாலங்கள் பறந்துள்ளதுடன், கடந்த வருடம் சுமார் 819 மணித்தியாலயங்கள் பறந்துள்ளதாக மியானமார் விமான தலைமையக தகவல் தெரிவிக்கின்றன. 

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியாவின் -370 விமானம் 239 பயணிகளுடன் அந்தமான் கடற்பரப்பில் வைத்து காணாமல் போயிருந்த நிலையில், குறித்த விமானம் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் குறித்த கடற்பிராந்தியத்தில் தற்போது 120 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.