(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கத்தை இணங்கச்செய்வதற்குரிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அவ்வாறு இணங்காத பட்சத்திலேயே இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவேண்டியிருக்கும் எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (18) கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சுமந்திரனுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் பற்றியும், குறிப்பாக வட மாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பற்றியும் சுமந்திரனிடம் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார்.
அதற்குப் பதிலளித்த சுமந்திரன், வடக்கில் முக்கிய சில விடயங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உண்மை எனினும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த கட்டமைப்புகளுக்கு அவசியமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று வீதிப்புனரமைப்பு, நீர்வழங்கல் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதனால் ஏற்படக்கூடிய செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் குறிப்பிட்ட சுமந்திரன், ஆகவே இப்போது காணிகளை விடுவிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை போல் தெரிகிறது என விசனம் வெளியிட்டார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்தும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சுமந்திரன் விரிவாகக் கலந்துரையாடினார்.
அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கத்தை இணங்கச்செய்வதற்குரிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அவ்வாறு இணங்காத பட்சத்திலேயே இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவேண்டியிருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடரின்போது தான் இவ்விடயத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்த தீர்மானங்கள் பற்றித் தெரியவரும் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகினாலும், ஏற்கனவே அமெரிக்காவினால் ஒருங்கிணைத்துத்தரப்பட்ட ஆதரவு தமக்கு இன்னமும் இருப்பதாகவும், எனவே புதிய தீர்மானத்தை நிறைவேற்றவேண்டுமாயின் அந்த ஆதரவினைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் அன்ட்ரூ பற்ரிக் நம்பிக்கை வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM