மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை வாரி வழங்கும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம் - சம்பியனுக்கான 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்துள்ள 8 அணிகள்

19 Feb, 2025 | 10:17 AM
image

(நெவில் அன்தனி)

மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவுக்கு மேல் வாரி வழங்கும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் கராச்சியில் புதன்கிழமை (19) நடைபெறவுள்ள நடப்பு சம்பியன் பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் சம்பியன் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் கிடைக்கவுள்ள 71 கோடி ரூபாவுக்கு குறிவைத்து எட்டு முன்னணி அணிகள் இரண்டு குழுக்களில் போட்டியிடவுள்ளன.

துரதிர்ஷ்டவசமாக முன்னாள் சம்பியன்களான இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் இந்த வருட சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறவில்லை.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலிருந்த அணிகளே சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதல் எட்டு அத்தியாயங்களில் விளையாட தகுதி பெற்றன.

ஆனால், 2025 சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றாக 2023 உலகக் கிண்ணப் போட்டி அமையும் என திடீரென ஐசிசி அறிவித்தது.

இதற்கு அமைய இந்தியா, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் முதல் எட்டு இடங்களைப் பெற்று சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

தனது கடைசி நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து ஆகிய அணிகளிடம் இலங்கை தோல்வி அடைந்ததால் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை இழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை.

இந்த சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அகிய அணிகள் ஏ குழுவிலும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் பி குழுவிலும் பங்குபற்றுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் தலா 6 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் முதல் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

இந்த வருடப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக நடப்பு சம்பியன் பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால், இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் யாவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முழு கிரிக்கெட் உலகினாலும் வெகுவாக கவரப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந் நிலையில் பங்குபற்றும் அணிகளின் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

ஏ குழு

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (பங்களாதேஷ்)

ஐசிசி போட்டி ஒன்றில் மூன்றாவது முறையாக பங்களாதேஷ் அணியை 26 வயதான ஷன்டோ வழிநடத்துகிறார். பங்களாதேஷ் தங்கள் முதலாவது சம்பியன் பட்டத்திற்கு குறிவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னேற்றத்தை நோக்கி நகரும்  அணி மீது நம்பிக்கையை ஷண்டோ வெளிப்படுத்தியதுடன் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் தமது அணி பலரை ஆச்சரியப்படுத்தும் எனவும் கூறினார்.

பங்காளதேஷுக்கு இந்தப் போட்டி எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதை விளக்கிய ஷன்டோ, 

'இப் போட்டி மிகவும் முக்கியமானது. நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் இந்த முறை கிண்ணத்தை வெல்ல விரும்புகிறோம். இந்த முறை எங்களுக்கு மிகச் சிறந்த அணி இருப்பதால் கிண்ணத்தை வென்றெடுக்க முடியும் என நினைக்கிறோம்'என்றார்.

'அது கடினமானது என்பது   எங்களுக்கு தெரியும். ஆனால். நாங்கள் எங்களது திட்டத்தை சரியாக செயற்படுத்தினால் உரிய தினத்தில் எங்களால் வெல்ல முடியும்' என ஷன்டோ மேலும் தெரிவித்தார்.

குழாம்: நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), சௌம்யா சர்க்கார், தன்ஸித் ஹசன், தௌஹித் ரிதோய், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முத் உல்லா, ஜாக்கர் அலி ஆனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசெய்ன், தஸ்கின் அஹ்மத், முஷ்தாபிஸுர் ரஹ்மான், பர்வெஸ் ஹொசெய்ன் ஈமோன், நசும் அஹ்மத், தன்ஸிம் ஹசன் ஷக்கிப், நஹித் ராணா.

ரோஹித் ஷர்மா (இந்தியா)

தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் விளையாடும் ரோஹித் ஷர்மா, முதல் தடவையாக இந்திய அணியின் தலைவராக விளையாடுகிறார்.

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டிவரை சிறப்பாக வழிநடத்திய ரோஹித் ஷர்மா, கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை உலக சம்பியனாக உயர்ந்த நிலையில் இட்டார். 

எட்டு அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவரும் சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ஏற்கனவே ரோஹித் ஷர்மா வெற்றியை ருசித்துள்ளார்.

இந்தியா இரண்டாவது முறையாக 2013இல் சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்தபோது இந்தியாவின் துணிச்சல்மிக்க ஆரம்ப வீரராக ரோஹித் தனது வருகையை வெளிப்படுத்தினார். 

இந்த சுற்றுப் போட்டியில் முன்னிலை அடைய அனுகூலமான அணியாக விளங்கும் இந்தியா, தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டியிருந்தது. அந்தத் தொடரில் ரோஹித் உட்பட மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை வேகமாகக் குவித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

'ஆடுகளம் நுழைந்து தங்களது வழியில் விளையாடுவதற்கு தேவையான சிறிது  சுதந்திரம் குழாத்திற்கு இருக்கிறது' என ரோஹித் ஷர்மா கூறினார்.

'உலகக் கிண்ணம் அதற்கு ஒரு சரியான களமாக இருக்கும். அங்கு நாங்கள் அதைத் தொடர்ந்து செய்து அணியை கட்டியெழுப்ப விரும்புகிறோம். சில சமயங்களில் விஷயங்கள் சரியாக அமையாமல் போகலாம், ஆனால் அது பரவாயில்லை' என்றார் ரோஹித் ஷர்மா.  

குழாம்: ரோஹித் ஷர்மா (தலைவர்) ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ரிஷாப் பான்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹமத் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவிந்த்ர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.

மிட்செல் சன்ட்னர் (நியூஸிலாந்து)

மற்றுமொரு ஐ.சி.சி. போட்டியில் அணித் தலைவராக அறிமுகமாகிறார் சென்ட்னர். இந்த அனுபவம் வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர், ஏற்கனவே நேர்மறையான அறிகுறிகளை வெளிப்படுத்தி தலைமைப் பொறுப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடையாத சம்பியன் அணியாக நியூஸிலாந்தை சென்ட்னர் வழிநடத்தியிருந்தார்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வெற்றிபெறுவதற்கு நியூஸிலாந்து வீரர்கள் சிலர் சிறந்த பங்களிப்பை வழங்கி  இருந்தனர். இது அணிக்கு நல்ல சமிக்ஞையாகும்.

'வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது' என மும்முனை தொடரில் நியூஸிலாந்து வெற்றிபெற்ற பின்னர் சன்ட்னர் கூறியிருந்தார்.

'வெவ்வேறு நேரங்களில்  வெவ்வேறு  வீரர்கள் பிரகாசிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் முதலாவது ஆட்டத்தை விளையாடும் வரை அது ஒன்றுமில்லை' என்றார் மிச்செல் சென்ட்னர்.  

குழாம்: மிச்செல் சென்ட்னர் (தலைவர்), மிச்செல் ப்றேஸ்வெல், மார்க் செப்மன், டெவன் கொன்வே, கய்ல் ஜெமிசன், மெட் ஹென்றி, டொம் லெதம், டெரில் மி ச்செல், வில் ஓ'ரூக், க்லென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங், ஜேக்கப் டஃபி.

மொஹம்மத் ரிஸ்வான் (பாகிஸ்தான்)

சொந்த மண்ணில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் அணியை ஐசிசி போட்டியில் முதல் முறையாக அணித் தலைவராக ரிஸ்வான் வழிநடத்தவுள்ளார்.

பாகிஸ்தான் அணித் தலைவராக கடந்த வருடம் பொறுப்பேற்ற ரிஸ்வான், ஏற்கனவே அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் தொடர் வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்பதாக நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை இறுதிப் போட்டிக்கு ரிஸ்வான் வழிநடத்தியிருந்தார். ஆனால், நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ரிஸ்வான்,

'கிரிக்கெட்டை நேசிக்கும் நாடு என்ற வகையில் இந்த வருடம் ஐசிசி சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அண்மைக் காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது, இந்த மெகா போட்டியை நோக்கிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. மேலும் எங்கள் சொந்த மைதானத்தில் நடைபெறும் எட்டு அணிகள் கொண்ட இந்த போட்டியில் திறமையாக விளையாட நாங்கள் ஆவலுடன் உள்ளோம்' என்றார்.  

குழாம்: மொஹமத் ரிஸ்வான் (தலைவர்) பாபர் அஸாம், பக்கார் ஸமான், கம்ரன் குலாம், சவூத் ஷக்கீல், தய்யப் தாஹிர், பாஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் கான், அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹம்மத் ஹஸ்னைன், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. 

 

பி குழு

ஹஷ்மத்துல்லா ஷஹிதி (ஆப்கானிஸ்தான்)

இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெற்றிகரமாக வழிநடத்திய அணித் தலைவர். அவரது வழிநடத்தலில் பலம்வாய்ந்த அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றை அதிரவைத்து ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகும் ஆப்கானிஸ்தானுக்கு கடந்த வருடம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரஙகு வெற்றிகரமாக அமைந்தது.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அறிமுக அணியாக பங்குபற்றுகின்றபோதிலும், நாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நாளில் எத்தகைய அணியையும் வெற்றிகொள்ளும் திறன் கொண்டது என்று ஷஹிதி நம்புகிறார்.

'ஒவ்வொரு வடிவத்திலும் ஒவ்வொரு அணியையும் வெற்றிகொள்ளும் திறமை எங்களிடம் இருப்பதால் நாங்கள் முன்னேற முயற்சிப்போம்,' என்று அவர் அண்மையில் கூறினார்,

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்காக தங்களது திறமையை வளர்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'எங்களது அடுத்த பெரிய சவால் சம்பியன்ஸ் கிண்ணம். இது எங்களுக்கு ஒரு பெரிய போட்டி. எனவே அதனை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என்றார் அவர்.

குழாம்: ஹஷ்மத்துல்லா ஷஹிதி (தலைவர்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், சிதிக்குல்லா அத்தல், ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில், குல்பாதின் நய்ப், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், மொஹமத் நபி, ராஷித் கான், நங்கேயாலியா கரொத், நூர் அஹ்மத், பஸால்ஹக் பாறூக்கி, பரித் மாலிக், நவீத் ஸத்ரான்.

ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணியின் முழுநேர தலைவர் பெட் கமின்ஸுக்குப் பதிலாக, துடுப்பாட்ட நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித் நடப்பு ஒருநாள் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வழிநடத்துகிறார். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் அவர் தலைமை வகிப்பது இது இரண்டாவது தடவையாகும்.

2017 சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட ஸ்மித், ஒரு தலைவராக ஏராளமான அனுபவங்களுடன் சம்பியன் கிண்ணத்தை எதிர்கொள்கிறார்.

அவுஸ்திரேலிய அணியில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெறாதது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், அவர்களுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட வீரர்கள் மீது ஸ்மித் நம்பிக்கை கொண்டுள்ளார்.

'அவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு ஏற்ற தனித்துவமான திறமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நான் அவர்களை வழிநடத்துவது, அவர்களுடன் கலந்துரையாடுவது, சரியான நேரத்தில் அவர்களிடமிருந்து சரியானவற்றைப் பெற முயற்சிப்பது என்பனவே எனது பணி ஆகும். எமது அணியில் அனுபவம்வாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறுவதால் எங்களால் சாதிக்க முடியும் என நம்புகிறேன்' ஸ்மித் கூறினார்.

குழாம்: ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), சோன் அபொட், அலெக்ஸ் கேரி, பென் த்வாஷுய்ஸ், நேதன் எலிஸ், ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க், ஆரொன் ஹாடி, ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜோன்சன், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மெத்யூ ஷோர்ட், அடம் ஸம்ப்பா.

ஜொஸ் பட்லர் (இங்கிலாந்து)

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தை சம்பியனாக்கிய ஜொஸ் பட்லர், 2019 உலகக் கிண்ண வெற்றியில் ஒரு சிறந்த வீரராகத் திகழ்ந்தவர்.

அதிரடி ஆட்டக்காரரான பட்லர், தனது மூன்றாவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்கிறார்.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் முறையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் முழு வீச்சில் இங்கிலாந்து களம் இறங்கவுள்ளது.

இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியடைந்த போதிலும், இந்த சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வாய்ப்புகள் குறித்து பட்லர் நம்பிக்கையுடன் உள்ளார்.

'நாங்கள் இன்னும் எங்களுக்கு இருக்க வேண்டிய திறமையை அண்மிக்கவில்லை. தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறமையாக விளையாடினால் எங்களால் சிறந்த இடத்தில் இருக்க முடியும் என்பதை அறிவோம். சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் நாங்கள் சவால் மிக்க அணியாக இருக்க முடியும் என்று நம்புகிறோம்' என இந்தியாவுக்கு எதிரான தொடருக்குப் பின்னர் பட்லர் கூறியிருந்தார்.

குழாம்: ஜொஸ் பட்லர் (தலைவர்), ஜொவ்ரா ஆச்சர், கஸ் அட்கின்சன், டொம் பென்டன், ஹரி ப்றூக், ப்றைடன் கார்ஸ், பென் டக்கட், ஜமி ஓவர்ட்டன், ஜமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ராஷித், ஜோ ரூட், சக்கிப் மஹமூத், பில் சோல்ட், மார்க் வூட்.

டெம்பா பவுமா (தென் ஆபிரிக்கா)

2023 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்காவை அரை இறுதிக்கு வழிநடத்திய டெம்பா பவுமா, அதனைத் தொடர்ந்து சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடவுள்ளார். அங்குரார்ப்பண சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் 1998இல் சம்பியனான தென் ஆபிரிக்காவுக்கு 27 வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வென்று கொடுக்க டெம்பா பவுமா முயற்சிக்கவுள்ளார்.

உலக கிரிக்கெட் அரங்கில் தென் ஆபிரிக்காவை புகழ்பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ள பவுமா, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தனது அணியை வழிநடத்தியுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சவால்மிக்கதாக இருந்தாலும், தென் ஆபிரிக்காவால் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதில் பவுமா நம்பிக்கையுடன் உள்ளார்.

'உலகக் கிண்ணத்தில் போட்டிகள் அதிகம் என்பதால் திட்டங்களை வகுத்து முன்னேறுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் சுற்றில் 3 போட்டிகள் மாத்திரம் இருப்பதால் அப்படி செய்ய முடியாது. எனினும், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் ஒரு படி முன்னே நகர்வோம் என நம்புகிறோம்' என்று தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா புவுமா தெரிவித்தார்.

குழாம்: டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, மார்க்கோ ஜென்சன், ஹென்றிச் க்ளாசன், கேஷவ் மஹராஜ், ஏய்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, கெகிசோ ரபாடா, ரெயான் ரிக்ல்டன், தப்ரெய்ஸ் ஷம்சி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ரசி வென் டேர் டுசென், கோபின் பொஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-21 18:38:21
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04