(எம்.நியூட்டன்)
ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்று உணவுப் பண்பாடும் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது. ஆனால், மதப் பண்பாட்டில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற நாம், உணவுப் பண்பாட்டில் நிகழும் ஆக்கிரமிப்புகள் குறித்துக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அண்மைக்காலமாக வெளிநாட்டு உணவகங்கள் பல இங்கு கிளைகளைத் திறந்துகொண்டிருக்கின்றன. எமது உணவுப் பண்பாட்டில் திணிக்கப்படும் மாற்றங்கள் பற்றி நாம் விழிப்படையாவிட்டால் வெளிநாட்டு உணவகங்கள் எமது பாரம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் எமது ஆரோக்கியமும் மேலும் வீழ்ச்சியடையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சிறுதானியப் பொங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) ஊரெழு வளர்பிறை சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நெல் அரிசிச் சோற்றின் வருகையுடனேயே எமது உணவுத் தட்டுகளில் இருந்து சாமை, வரகு, கம்பு, குரக்கன், குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் ஓரங்கட்டப்பட்டன. நெல் அரிசியுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அதிக கலோரிப் பெறுமானம் கொண்டவை அதிக நார்ச்சத்து உடையவை. அதிக அளவில் மாப்பொருளையும் புரதத்தையும் விற்றமின்களையும் கனியுப்புகளையும் கொண்டவை. மேலதிகமாக, புற்றுநோய் எதிர்ப்புச் சேர்வைகளையும் கொண்டிருக்கின்றன. இவற்றால்தான் எமது முன்னோர்கள் தேக ஆரோக்கியத்துடன் நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்தார்கள்.
சூழலியல் நோக்கிலும் நெல்லைவிட சிறுதானியங்களே முதன்மை பெறுகின்றன. நெல் பயிரிடுவதற்கு ஈரமான தரையும் அதிகளவில் நீர்ப்பாசனமும் தேவைப்படுகிறது. ஆனால், சிறுதானியங்கள் வறண்ட சூழலிலும் குறைந்த நீர்த்தேவையுடன் வளரக்கூடியவை. நெல் நோய்களினதும் பீடைகளினதும் தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாகும்போது சிறுதானியங்கள் இவற்றுக்கு எதிராகத் தாக்குப் பிடிக்கின்றன. காலநிலை மாற்றம் எம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சிறுதானியங்களை நோக்கி நாம் திரும்புவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
எமது இளைய தலைமுறை பாரம்பரிய உணவுகளை நாகரிகமற்றதொன்றாகக் கருதும் மனப்பாங்கைக் கொண்டிருக்கின்றது. துரித உணவகங்களையே அதிகம் நாடுகிறார்கள். கொத்து ரொட்டியையும், பிஸ்ஸாவையும், ப்ரைட் றைஸ்சையுமே விரும்புகிறார்கள். மென்பான நிறுவனங்களின் விளம்பரங்களில் மயங்கி இந்த உணவுகளோடு சேர்த்து ஆபத்தான மென்பானங்களையும் அருந்தி வருகிறார்கள். தேசியம் என்பது வெறும் அரசியல் சொல்லாகியுள்ள இன்றைய சூழ்நிலையில் உணவுப் பண்பாட்டுத் தேசியம் பற்றிய புரிதலை எமது மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM