(நா.தனுஜா)
நாட்டுமக்களால் செலுத்தப்படும் வரிப்பணம் வீண்விரயம் செய்யப்படாமல், நாட்டின் அபிவிருத்திக்காக உரியவாறு பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, நாட்டின் எதிர்காலத்தை தனிநபரரொருவரால் தீர்மானிக்கமுடியாது என்பதால், தாம் முன்னெடுத்திருக்கும் முயற்சிக்கு சகல தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் குறித்த இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் வருடாந்த பட்ஜெட் கருத்தரங்கு செவ்வாய்கிழமை (18) கொழும்பில் அமைந்துள்ள இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அங்கு விசேட உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும,
மக்கள் கோரிய மாற்றம் நாட்டில் ஏற்பட்டிருப்பதாகவும், தாம் எவ்வித பாதுகாப்பு வாகனத்தொடரணியுமின்றி, வழமையாக மக்கள் பயணிக்கும் அதே வீதியில் வாகனநெரிசலுக்கு மத்தியிலேயே பாராளுமன்றத்துக்குச் சென்றுவருவதாகவும், தமது அரசாங்கம் இதுபோன்ற அநாவசிய செலவினங்களைப் பெருமளவுக்குக் குறைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மொத்த அரச வருமானத்தில் நேர் வரிகள் மூலமான வருமானம் குறைந்தளவில் காணப்படுவதாகவும், இருப்பினும் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது அதிக வரிச்சுமையை சுமத்தாமல் இந்நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதில் தாம் அவதானம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு செலவு, பாதுகாப்பு வாகனம், அதிசொகுசு வாகனம் என்பன குறைக்கப்பட்டும், நிறுத்தப்பட்டும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எனவே நாட்டுமக்கள் செலுத்தும் வரிப்பணம் வீண்விரயம் செய்யப்படாமல், நாட்டின் அபிவிருத்திக்காக உரியவாறு பயன்படுத்தப்படும் என உத்தரவாதமளித்தார்.
'நாம் ஒன்றிணைந்து முன்னெடுத்திருக்கும் இம்முயற்சிக்கு நீங்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என நம்புகிறேன். நாட்டின் எதிர்காலத்தைத் தனிநபரொருவரால் தீர்மானிக்கமுடியாது.
மாறாக அதற்கு சகல தரப்பினரதும் அபிப்பிராயங்கள் உள்வாங்கப்படவேண்டும். அதனூடாக நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவாறான தேசிய கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும்' என்றும் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும வலியுறுத்தினார்.
அதேவேளை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையாக வரவு, செலவுத்திட்டம் காணப்படுவதாகவும், அதன்படி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் உத்தேசித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 'தற்போது கடன்மீள்செலுத்துகை என்பது நாம் முகங்கொடுத்திருக்கும் பிரதான சவாலாகும். இருப்பினும் அதனை சீரான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறோம். கொள்கை மற்றும் வரிவிதிப்பு சார்ந்த மாற்றங்களுக்கு அப்பால், அவற்றை சரியாக அமுல்படுத்துவதற்கான கட்டமைப்பு ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
அதுமாத்திரமன்றி பொருளாதாரத்தின் செயற்திறனை மேம்படுத்துவதற்குப் பெரிதும் பங்களிப்புச்செய்யக்கூடியவாறான இலத்திரனியல் மயமாக்க நடவடிக்கைகளில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்' என்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM