(நமது அரசியல் நிருபர்)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான கூட்டிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
கூட்டிணைந்தால் தன் 'தலை'மை தப்பாது என்று ஆரம்பித்திலிருந்தே சஜித்துக்கு காணப்பட்ட அச்சமும், ஜனாதிபதி நிதியத்திலிருந்து இழப்பீடு பெற்றுக்கொண்டமை தொடர்பான விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க உட்பட 43பேரின் மீது ஏற்பட்டுள்ள விமர்சனமும் இறுதி நேரத்தில் அவரை கூட்டிலிருந்து சறுக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது.
முன்னதாக, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் ஏற்பட்ட பாரியதோல்விகளுக்குப் பிறகு, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டிணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே சஜித் பிரேமதாச ஆர்வத்துடன் பங்களிப்பு செய்யவில்லை. தனது கட்சியை பிளவுப்படுத்தி விடுவார் என்ற அச்சம் அவருக்குள் வெகுவாக காணப்பட்டது.
மேலும், கண்டியிலுள்ள ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் இல்லத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தலைமையில் அணியிருக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையிலான தரப்பினருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற அனைவரும் இருதரப்பு இணைவை ஆதரித்திருந்தனர். எனினும், அச்சந்திப்பின் பின்னர் உரையாடப்பட்ட விடயங்களை சஜித்திடம் விபரித்தபோது, சஜித்துக்கு தனது கட்சியின் சார்பில் பங்கேற்றவர்கள் மீது சந்தேகமே எழுந்தது.
அவர்கள் ரணிலுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறி குறிப்பிட்டு அத்தீர்மானத்தினை மீளாய்வு செய்வதற்கு முனைந்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளையும் சஜித் ஆர்வத்துடன் முன்னெடுக்கவில்லை.
இதற்கிடையில் சுஜீவ சேரசிங்க தலைமையிலான அணியினர், ‘சஜித்தைப் பாதுகாப்போம்’ என்ற கோசத்துடன் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு நகர்வுகளைச் செய்திருந்ததோடு, இருதரப்பினரும் கூட்டிணைந்தால் எற்படும் நெருக்கடிகளையும் வெளிப்படுத்தினார்.
இவ்வாறான பின்னணியில், சஜித் பிரேமதாச தனது பக்கத்தில் நிபந்தனைகளை வெளிப்படுத்தினார். விசேடமாக, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை வேட்பாளராக களமிறக்க வேண்டும், கூட்டணியின் தலைமைப்பதவியை தனக்கு தரவேண்டும், தொலைபேசிச் சின்னத்திலேயே தொடர்ச்சியாக தேர்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பவை மிகவும் முக்கியமானவையாக இருந்தன.
இந்நிலையில், ஜனாதிபதி நிதியத்திலிருந்து இழப்பீட்டுத்தொகையைப் பெற்றுக்கொண்ட 43 உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் வெளியாகியிருந்தன. அதற்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கியிருந்த ஒத்துழைப்பு பற்றிய தகவல்களும் அம்பலமாகின.
இச்சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய சஜித் பிரேமதாச, கட்சிக்குள்ளும், பங்காளிக்களுக்கும் ரணிலுடன் தரப்புடன் இணைந்தால் அடுத்து வரவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் பாரிய பின்னடைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து தனது பக்க நியாயங்களை அடுக்கிச் சென்றிருந்தார்.
அதில் நியாயங்கள் இருப்பதை உறுப்பினர்களும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் அரைமனதுடன் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு பல நிலைமைகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சஜித் பிரேமதாச, கூட்டுக்கான பேச்சுக்களை தவிர்த்து இறுதி நேரத்தில் சறுக்கியுள்ளார்.
ரணில்-மைத்திரி ; சந்தித்து பேச்சு
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் நேற்று முன்தினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ராஜித்த சேனாரத்ன உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, “ஆளும் தரப்பின் சின்னச் சின்ன விடயங்களை நாம் பேசுவதில் பயனில்லை. கொள்கலன்கள் விடயத்தில் ஆளும் தரப்பு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது” என்று கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அப்போது, “அரிசி விடயத்தினை கையில் எடுத்தால் அதற்குள் பாரிய ஊழல், மோசடிகள் உள்ளன” என்று ராஜித்த தெரிவித்துள்ளார். அச்சமயத்தில் அமரவீர, “நாங்கள் இப்படி கூடிக்கதைப்பதை திருடர்கள் ஒன்று சேர்கின்றார்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. அதேநேரம், முன்னிலை சோசலிசக் கட்சியினருக்கு அடிப்பதற்கு வருகை தந்தவர்கள் கிராமத்து மக்கள் மட்டுமல்லர். அதற்குள் ஆளும் தரப்பும் இருக்கின்றது. புரட்சியின் போது ஜே.வி.பியில் செயற்பட்ட ஒருவரும் அந்த அணியில் இருந்தார்” என்றும் கூறினார்.
அதன்போது குறுக்கீடு செய்த மைத்திரிபால, பொதுத்தேர்தல் காலத்தில் “எனது புதல்வருடன் இணைந்து பிரசாரத்துக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தபோதும் அச்சுறுத்தலால் பல பிரசார கூட்டங்களை தவிர்த்திருந்தேன்” என்று சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பாசனைகளை புன்னகையுடன் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக்கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 30ஆம் திகதி கொழும்பில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிரணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
எனினும் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் பங்கேற்றிருக்கவில்லை. சஜித் பிரேமதாசவின் அன்புக்கட்டளை தானாம் இதற்கு காரணமென்கிறார்கள் விடயமறித்தவர்கள்.
உள்ளூராட்சி தேர்தலில் தனித்திறங்கும் தமிழரசு
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் கூட்டிணைந்து செயற்படுவதை நோக்கிய சில நகர்வுகள் செய்யப்பட்டன.
எனினும், இலங்கைத் தமிழரசுக்கட்சி தனித்து களமிறங்குவதற்கே தீர்மானித்துள்ளது. தனித்து களமிறங்குவதன் ஊடாக தமது கட்சியின் நிலைமையை நாடிபிடித்துப் பார்க்க முடியும் என்ற எண்ணம் அந்தக் கட்சிக்கு உள்ளது.
அத்துடன், ஏனைய தரப்பினருடன் இணைந்தால் ஆசன ஒதுக்கீடு முதல் பல்வேறு பிரச்சினைகளுக்க முகங்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் அக்கட்சிக்கு உள்ளது.
எனினும், தேர்தல் முடிவுகளின் பின்னர் தேவைப்பட்டால் ஏனைய தரப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்து கூட்டணியாக ஆட்சியை அமைக்கலாம் என்ற சிந்தனைகளும் தமிழரசுக்குள் உள்ளது.
வீணானது எதிர்பார்ப்பு
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டில் செய்யப்பட்ட தெரிவுகளுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த 13ஆம் திகதி இணக்கப்பட்டுடன் முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்ற எதிர்பார்ப்பு சிறிதரன் அணி உள்ளிட்ட பலருக்கு காணப்பட்டது.
அவர்கள் 324பேருடன் மீண்டும் தெரிவை நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்து இணக்கப்பாட்டை வெளியிட்டிருந்தனர். எனினும், இப்போது சுமந்திரன் அதனை நிராகரித்துள்ள நிலையில் 153பேருடன் மீண்டும் புதிய தெரிவுகள் நடைபெற வேண்டும் என்று வாதிட்டமையால் சுமூகமான நிலைமைகள் ஏற்படவில்லை.
இந்நிலையில் வழக்கு விசாரணைகள் ஜுன் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்த தலைமை விவகாரம்
ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைமைப்பதவியை ரெலோ பெற்றுக்கொள்வதற்கு முனைப்புக்களைச் செய்திருந்த நிலையில் தற்போது அந்த விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அக்கூட்டணியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆரம்பத்தில் கூட்டணியின் தலைமைப்பதவியை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் பின்னர், கிழக்குக்கு தலைமையை வழங்கும் வகையில் கோவிந்தன் கருணாகரத்துக்கு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
எனினும், தற்போதைய சூழலில் கட்சியின் உரிமத்தினைக் கொண்டிருக்கும் புளொட் தலைவர் சித்தார்த்தனே அதற்கு தலைமை தாங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைவரும் வந்துள்ளனர்.
விசேடமாக, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா, தலைமைப்பதவி ரெலோவிடம் செல்வதை விரும்பிருக்கவில்லை. அதனால் அவர் கூட்டணிக்குள் போர்க்கொடி தூக்கியதாகவும் தகவல்கள் உள்ளன.
எவ்வாறாயினும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.
மரணச்சடங்கு உரையாடல்
காஞ்சன விஜயசேகரவின் தாயாரின் மரணச்சடங்கில் நாமல் ராஜபக் ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதன்போது “அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் எமக்குள் காணப்படுகின்ற நட்பு மாறாது” என்று நாமல் கூறியுள்ளார். அப்போது, “நாங்கள் கடந்த காலங்களில் இந்த வீட்டில் உண்டு களித்துள்ளோம். அவையெல்லாம் மறக்க முடியாத நினைவுகள். நாங்கள் மீண்டும் ஒன்றாக பயணிக்கும் காலம் கனிந்து விட்டது” என்று ஜோன்ஸ்டன் கூறியுள்ளார்.
அதன்போது அவ்விடத்துக்கு சாமர சம்பத் வருகை தரவும், அங்கிருந்த ஒருவர் “எதிர்க்கட்சியின் வீரன் வருகின்றார்” என்று கூறியபோது சாமர சம்பத், “அரசாங்கம் தொடர்ச்சியாக தவறுகளை விடுகின்றபோது பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
“நானும், தயாசிறியும், நாமலும், டி.வி.சாணக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியில் சிலரும் தான் அதிகமாக பேசுகின்றோம். ஏனையவர்கள் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்” என்று சமார மேலும் ஒருபடிசென்று பதிலளித்துள்ளார்.
கிளீன் ஸ்ரீலங்காவுக்கு புதுவிளக்கமளித்த சமிந்த
ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜயசிறி, நளின்பண்டார உள்ளிட்டவர்கள் உரையாடலொன்றை மேற்கொண்டிருந்போது, “திடீரென்று குரங்குகள் பற்றிய விடயம் வந்துள்ளது. அப்போது சமிந்த விஜயசிறி, ஜே.வி.பி. முன்னர் இந்திய இராணுவத்தை குரங்குப் படைகள் என்று அழைப்பார்கள். அதனால் தான் அவர்களின் ஆட்சிக்காலத்தில் குரங்குகள் முழு நாட்டுக்குமான மின்சாரத்தை நிறுத்திவிட்டன போல” என்று கூறியுள்ளார்.
அச்சமயத்தில், “அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தது முதல் விலங்குகளின் பிரச்சனைகளுக்கே முகங்கொடுகின்றது. முதலில் ரிலவ், பின்னர் யானை, பின்னர் குரங்குகள், பின்னர் வீட்டில் இருக்கும் நாய்கள் என்று பட்டியல் நீளுகின்றது” என்று நளின் பண்டார கூறியுள்ளார்.
அப்போது, “ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் விலங்குகளை மையப்படுத்தி தப்பித்துக்கொள்கின்றார்கள். இதனால் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையிலும் 'குளிக்கின்றார்கள்'. அதனால் அவர்கள் கிளீன் ஸ்ரீலங்கா அரசாங்கம்” என்று சமந்த விஜயசிறி நகைச்சுவையாக கூறவும் அங்கிருந்தவர்கள் புன்னகையுடன் விடைபெற்றுக்கொண்டனர்.
'அநுரவின்' தவறுகள்
லண்டன் விஜயத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, செவ்வாய்க்கிழமை (04) நாடு திரும்பினார். இதன் பின்னர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்கள் குறித்து பங்காளி கட்சிகளின் தலைவர்களை, கொழும்பு -7இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
கோப்பி கடை தொலைக்காட்சி நாடகத்தில் 'அப்புவா' என்ற கதாபாத்திரம் உலக தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கூற அனைவரும் பேரொலியுடன் சிரித்தனர்.
“என்ன கூறுகின்றீர்கள். இந்த கதை புரியவில்லை” என்று வஜிர அபேவர்தன கேள்வியெழுப்பினார். “பெரிதாக ஒன்றும் இல்லை. சேர்ட்டின் பொத்தானை ஒழுங்காக அணியாத அரச தலைவரை புகைப்படத்தில் கண்டேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கூற அனைவரும் மீண்டும் பேரொலியுடன் சிரித்தனர்.
“அது தவறுதலாக நடந்த விடயமாக கருதி மறந்து விடுவோம். ஆனால், அத்தகைய அரச தலைவர்கள் மாநாடுகளுக்கு செல்லும் போது, உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்துவதை விட ஏனைய நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவது மிகவும் முக்கியமாகும். இவ்வாறு இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதன் மூலம் தான் முதலீடுகள் உள்ளிட்ட பொருளாதார ரீதியிலான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும். பாக்கிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் பிரதமர்களை மாத்திரமே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார். இவர்கள் எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப போகின்றனர்” என்று வஜிர அபேவர்தன கேள்வியெழுப்பினார்.
“மேலும் பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்பட கூடிய வாய்ப்புகள் ஜனாதிபதி அநுரவுக்கு காணப்பட்டன. ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. வெளிவிவகார அமைச்சின் தவறாகவே இதனை கருத முடிகிறது. ஐக்கிய அரபு இராச்சயத்தின் அனுபவம் வாய்ந்த இலங்கை தூதுவரான உதய இந்திரரத்ண நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார். எனவே திறமையானவர்களை நீக்குவதனால் நாட்டிற்கு ஏற்பட கூடிய தீமைகள் ஏராளம் ஆகும்” என்று அனுராத ஜயரத்ன குறிப்பிட்டார்.
“அந்த அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பு 2024 ஆம் ஆண்டிலேயே கிடைக்கப்பெற்றது. அப்போதைய ஜனாதிபதி என்ற வகையில் அதனை நான் ஏற்றுக்கொண்டேன். இந்திய பிரதமர் மோடியும் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்திருந்தார். ஆனால் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாடு இடம்பெற்றமையினால் பிரதமர் மோடி அங்கு சென்று விட்டார். நான் பதவியில் இருந்திருந்தால் பிரான்ஸ் சென்றிருப்பேன். ஏனெனில் உலகின் பலவந்த நாடுகள் தலைவர்கள் அந்த மாநாட்டிற்கு வருகை தருவார்கள். அவர்களை சந்திப்பது இலங்கை போன்ற நாட்டிற்கு முக்கியமான பலன்களை தரும்” என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
“மாநாட்டை தெரிவு செய்வதில் செய்த தவறை போன்று உரையிலும் பல தவறுகளை செய்துள்ளார். இந்திய துணைக்கண்டத்தின் முடிவில் இலங்கை அமைந்துள்ளதாக அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார உரையாற்றியுள்ளார். அத்துடன் கோள்கள் பூமியை ஒளி ஆண்டுகள் வேகத்தில் நெருங்கி வருகின்றன, மேலும் அணு ஆயுத தாக்குதல்களை விட சைபர் தாக்குதல்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
ஒளி ஆண்டு என்பது வேகத்தை அல்ல, தூரத்தை அளவிடும் ஒரு அளவுகோல் என்பதை ஜனாதிபதி அநுர ஏன் அறியவில்லை? மற்றது இந்திய துணைக்கண்டம் என்று ஒன்று எங்கே இருக்கிறது?” என வஜிர கூர, ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்காதிருந்தார்.
அதானி நிறுவனம் விலகல்
“அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாடுகள் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கையில் தற்போது நாட்டில் மின் துண்டிப்பை முன்னெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் குரங்கிடம் கையளித்துள்ளது. மின்சாரத்தை முறையாக வழங்க முடியாத அரசாங்கம் கோமாளித்தனமாக செயல்படுகிறது” என காஞ்சன விஜேசேகர இதன்போது குறிப்பிட்டார்.
காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து அதானி நிறுவனம் விலகியுள்ளது. இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கை முதலீட்டு சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள அதானி நிறுவனம் அனைத்து விடயங்களையும் நிறைவு செய்திருந்தது. ஆனால் அரசாங்கத்தின் செயல்பாடுகளினால் திட்டத்தை அந்த நிறுவனம் இரத்து செய்துள்ளது. இந்த நிலைமை இலங்கை - இந்திய உறவில் நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம் என ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி அங்கிருந்த தலைவர்கள் கூறினார்.
மதவாதம் வேண்டாம்
புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்ற பெரஹரா நிகழ்வில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றிய ரணில், “பௌத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு இடையிலான உறவுகளை நாம் பாதுகாக்க வேண்டும். அரசியல் கொள்கைகள் எதுவாக இருந்தாலும் நாட்டின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும்” என குறிப்பிட்டார். அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் வகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டதுடன், இதனை தொடர்ந்து கங்காராம விகாரையின் பெரஹர வரலாற்றை கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM