அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச்சங்கம் சேகரித்த 18,000 கையெழுத்துக்களுடனான மகஜர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது
சிறைகளிலும், தடுப்புக்காவல் நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள சகல தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை எவ்வித சட்டச்சிக்கல்களுமின்றி விரைவில் விடுவிக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு வட, கிழக்கை சேர்ந்த சுமார் 18,000 பேரின் கையெழுத்துடன்கூடிய கடிதத்தின் ஊடாக போராளிகள் நலன்புரிச்சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
இக்கடிதம் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் மற்றும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் பிரதிநிதிகளால் செவ்வாய்கிழமை (18) ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:
இலங்கை மக்களாக, தமிழின சமூகமாக இங்கு கையொப்பமிட்டுள்ள நாம் நீண்டகால இனமோதல்களுடன் தொடர்புடைய வன்முறைகள் மற்றும் இன்னும் பிற சிக்கல்களினால் சட்ட நடவடிக்கைகள் ஊடாகவும், சட்ட நடவடிக்கைகள் இன்றியும் சிறைகளிலும், ஏனைய தடுப்பு நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்.
எமது துயரத்தின் ஆழத்தை உங்களுக்குச் சொல்லித்தான் புரியவைக்கவேண்டிய அவசியமில்லை என நாம் உறுதியாக நம்புகிறோம். இந்நாட்டின் ஆளுகை முறைமையினை மாற்றியமைக்க புரட்சிகர பாரம்பரியத்தை வளர்த்த நீங்கள் இருமுறை ஆயுதம் ஏந்தி, ஆயுதப்போராட்டத்தின்போது ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்து, அதன்பின்னர் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட மிகக்கொடூரமான சட்டங்களின்கீழ் ஒடுக்கப்பட்ட சோகமான வரலாற்று அனுபவத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
தமிழர்களான நாம் வன்முறை கலாசாரம் மற்றும் ஆயுதமோதலை ஒருபோதும் விரும்புவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இருப்பினும் பேராசை கொண்ட அரசியல் சித்தாந்தவாதிகளினாலும், ஆட்சியாளர்களினாலுமே அவ்வாறானதொரு போராட்டத்தின் வழிக்குத் தள்ளப்பட்டோம். எமது இளைய தலைமுறையினர் அரசியல் காரணங்களுக்காக மாத்திரமே போராட முன்வந்தனர். மாறாக குடும்ப வளம் மற்றும் முன்னேற்றம் ஆகிய பேராசைகளுக்காகவோ அல்லது நீண்ட பாரம்பரியம் மற்றும் கலாசார வரலாற்றைக்கொண்ட பிற சமூகங்களை அடிபணிய வைப்பதற்கோ அல்ல.
இவ்வாறானதொரு பின்னணியில் சிறைகளிலும், தடுப்புக்காவல் நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள சகல தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை எவ்வித சட்டச்சிக்கல்களுமின்றி விரைவில் விடுவிக்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பல வருடகாலமாக தமது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைவதற்காகக் காத்திருக்கும் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரின் கண்ணீரை உங்களது முடிவு மாத்திரமே நிறுத்தும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM