(நா.தனுஜா)
சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள் ஒன்றுகூடுவதற்கான அடிப்படை உரிமையைப் பாதிப்பதுடன் மாத்திரமன்றி சிவில் சமூகத்துக்கும், அரசுக்கும் இடையிலான உறவில் மிகமோசமான விரிசலை ஏற்படுத்தும்.
இந்நிலையில் சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்பான புதிய சட்ட உருவாக்கத்தின்போது, அச்செயன்முறையில் சிவில் அமைப்புக்கள் முழுமையாக உள்வாங்கப்படவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து கொள்கை ஆய்வுக்கான அடையாளம் நிலையம், அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, சிறுவர் பாதுகாப்பு அமைப்பு, கிழக்கு சமூக அபிவிருத்தி நிதியம், முல்லைத்தீவு பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு, சட்ட மற்றும் சமூக நிதியம், யாழ் சட்ட மற்றும் மனித உரிமைகள் நிலையம், ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா, பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டிணைவு உள்ளிட்ட 24 சிவில் அமைப்புக்களும், கலாநிதி சகுந்தலா கதிர்காமர், மிராக் ரஹீம், அம்பிகா சற்குணநாதன், சரளா இம்மானுவேல், தமித் சந்திமல் உள்ளிட்ட 11 சிவில் செயற்பாட்டாளர்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவுக்கு கூட்டாக அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் சிவில் சமூக அமைப்புக்களை சந்தேகக்கண்கொண்டு நோக்கி வந்திருப்பதுடன், அவை தொடர்பில் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றன.
அதுமாத்திரமன்றி வெளிநாட்டு நிதி பெறும் சிவில் சமூக அமைப்புக்களுக்கு எதிராக வலுவான கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் குறிப்பாக கொழும்புக்கு வெளியில் இயங்கிவரும் அநேகமாக சிவில் சமூக அமைப்புக்களை அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான செயலகத்தில் தன்னார்வ சமூகசேவை அமைப்புக்கள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்துகொள்ளுமாறு அச்செயலகத்தினால் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.
இருப்பினும் இவ்வமைப்புக்கள் ஏற்கனவே கம்பனிச்சட்டத்தின்கீழ் இலாபநோக்கற்ற வரையறுக்கப்பட்ட கம்பனிகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான செயலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில், சிவில் சமூக அமைப்புக்கள் முன்னரே சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டிருப்பினும், அவை செயலகத்தின்கீழ் பதிவுசெய்யப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு அப்பதிவானது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இருப்பின் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவ்வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வனுமதிக்கான விண்ணப்பம் பாதுகாப்பு அமைச்சினால் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் என்பது பற்றியோ அல்லது அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் குறித்த சிவில் சமூக அமைப்பு எவ்வாறு மேன்முறையீடு செய்வது என்பது பற்றியோ அதில் தெளிவுபடுத்தப்படவில்லை.
அதுமாத்திரமன்றி சிவில் சமூக அமைப்புக்களைக்கண்காணிப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் இராணுவத்தினருக்கு இடமளிக்கப்படுவதானது பொதுநிர்வாகக்கட்டமைப்பு இராணுவமயமாக்கப்படுவதற்கும், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்குமே வழிகோலும்.
நிதி நடவடிக்கை பணிக்குழுவின் நியமங்களுக்குரிய பங்களிப்பை வழங்கும் நோக்கிலேயே அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவுசெய்வதற்கும், கண்காணிப்பதற்குமான சட்டவரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன தெரிவித்திருந்தார்.
ஆனால் இச்செயலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் நியமங்களுக்கு முரணானவையாகவே காணப்படுகின்றன.
அரசாங்கமானது சிவில் சமூக அமைப்புக்களைப் பாதிக்கக்கூடியவாறான தன்னிச்சையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை விடுத்து, அவற்றுக்கான நிதியளிப்பு தொடர்பான அச்சுறுத்தல் மதிப்பீட்டை உரியவாறு மேற்கொள்ளவேண்டும்.
சிவில் சமூக அமைப்புக்கள் மீதான இத்தகைய அழுத்தங்கள் ஒன்றுகூடுவதற்கான அடிப்படை உரிமையைப் பாதிப்பதுடன் மாத்திரமன்றி சிவில் சமூகத்துக்கும், அரசுக்கும் இடையிலான உறவில் மிகமோசமான விரிசலை ஏற்படுத்தும்.
இவ்வாறானதொரு பின்னணியில் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதுடன், சிவில் சமூக அமைப்புக்களுக்கான நிதியளிப்பைத் தடுப்பதற்கான அதிகாரம் நிதியியல் கட்டமைப்புக்களுக்கு இல்லை என்பது பற்றி விழிப்புணர்வூட்டுவதற்குஅரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதிதாகத் தயாரிக்கப்படும் சட்டங்களும், கொள்கைகளும் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதுகுறித்த பேச்சுவார்த்தைகளில் சிவில் சமூக அமைப்புக்களை உள்வாங்கவேண்டும்.
அத்தோடு சிவில் சமூக அமைப்புக்களைப் பதிவுசெய்தல் மற்றும் கண்காணித்தலுடன் தொடர்புடைய விடயங்களில் பாதுகாப்பு அமைச்சின் பங்கேற்பை முற்றாக நீக்கவேண்டுமென அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM