உபுல் தரங்கவிற்கு விதிக்கப்பட்டுள்ள ஐ.சி.சி.யின் போட்டித் தடைக்கான முழுப்பொறுப்பையும் பயிற்சியாளர் கிரஹம் போர்ட் தான் ஏற்கவேண்டுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால  மேலும் தெரிவிக்கையில்,

உபுல் தரங்கவிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடைக்கான முழுப்பொறுப்பையும் பயிற்சியாளர் கிரஹம் போர்ட் தான் ஏற்கவேண்டும்.

இந்தப்போட்டியில் பயிற்சியாளர் கிரஹம் போர்டின் வழிநடத்தல் குறித்து தான் திருப்தி கொள்ளமாட்டேன். தரங்கவின் தடைக்கான பொறுப்பையும் நிச்சயம் பயிற்சியாளரே ஏற்க வேண்டும்.

அதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறுவுள்ள போட்டிகளில் தரங்கவிற்கு விளையாட முடியாததால் இலங்கை அணிக்கு அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது போட்டியில் மந்தகதியில் பந்துவீசிய குற்றத்திற்காக இலங்கை அணிக்கு அன்றைய போட்டிக்கு தலைவராக செயற்பட்ட உபுல் தரங்கவுக்கு ஐ.சி.சி. இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்க அனுபவமிக்க லசித் மாலிங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் வைத்துக்கொண்டு ஓவர்களை வீச 39 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.