(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை 174 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்யது.
இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை முழுமையாகத் தனதாக்கிக்கொண்டது.
ஆரம்பத்தில் பொறுமையாகவும் கடைசியில் அதிரடியாகவும் ஓட்டங்களைக் குவித்த இலங்கை, பந்துவீச்சிலும் மிகத் திறமையாக செயற்பட்டு அவுஸ்திரேலியர்களை திக்குமுக்காட வைத்தது.
சமபியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சம்பியனாக பங்குபற்றவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு இந்தத் தொடர் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பது நிச்சயம்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை ஈட்டிய இந்த வெற்றியானது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்கள் ரிதியில் மிகப் பெரிய வெற்றியாகும்.
அவுஸ்திரேலியாவை 2016இல் 82 ஓட்டங்களால் வெற்றிகொண்டதே ஒருநாள் போட்டிகளில் இதற்கு முன்னர் இலங்கையின் மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.
இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை முழுமையாகக் கைப்பற்றியது.
குசல் மெண்டிஸ் குவித்த நிதானமான சதம், அணித் தலைவர் சரித் அசலன்கவின் அதிரடி அரைச் சதம், துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, அசித்த பெர்னாண்டோ இலக்கை நோக்கிய திறமையான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 281 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. இந்தத் தொடரில் இரண்டாவது தடவையாக பெத்தும் நிஸ்ஸன்க (6) ஒற்றை இலக்கத்துடன் ஆட்டம் இழந்தார்.
அவிஷ்க பெர்னாண்டோவுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக விளையாடிய நிஷான் மதுஷ்க மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 51 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரும் குசல் மெண்டிஸும் இரண்டாவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நிஷான் மதுஷ்க ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் கமிந்து மெண்டிஸ் 4 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். (121 - 3 விக்.)
ஆனால், குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 104 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 215 ஓட்டங்களாக உயர்த்தினர்.
தனது ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதத்தைக் குவித்த குசல் மெண்டிஸ் 115 பந்துகளில் 11 பவுண்டறிகளுடன் 101 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (215 - 4 விக்.)
அதனைத் தொடர்ந்து சரித் அசலன்க, ஜனித் லியனகே ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
சரித் அசலன்க 66 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 78 ஓட்டங்களுடனும் ஜனித் லியனகே 21 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்
282 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 24.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலிய அணியைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் அதிரடிக்கு பெயர் பெற்ற ட்ரவிஸ் ஹெட், க்லென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் இரண்டாவது போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். ஆனால், இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை.
ட்ரவிஸ் ஹெட் (18), ஸ்டீவன் ஸ்மித் (29), ஜொஷ் இங்லிஸ் (22) ஆகிய மூவரே அவுஸ்திரேலியா சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்.
தொடர்நாயகன்: சரித் அசலன்க.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM