உலக மட்ட அரசியல் மாற்றங்களின் விளைவான வெற்றிடத்தை நிரப்புதல்

Published By: Digital Desk 7

14 Feb, 2025 | 11:14 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த புதிய வழிவகைகளை கண்டறிவதற்கு  அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின்  பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான தேவையும் அதில் அடங்கும். இந்த நோக்கத்துக்காக பெரும் எண்ணிக்கையான இலங்கை நிபுணர்களை அணிதிரட்டியிருப்பது குறித்து அரசாங்கம் பெருமைப்படுகிறது. 

மொபைல் தொடர்பு வழங்குநராக டயலொக்கை ஒவ்வொரு வீட்டிலும் பேசுபொருளாக்கிய கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான தனது பிரதம ஆலோசகராக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க நியமித்திருக்கிறார்.

இது தொடர்பில் இலங்கையின் திட்டங்கள் குறித்த ஒரு  சுருக்கமான  விளaக்கத்தை விஜயசூரிய கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்ரெக் டிஜிட்டல் சங்கமம் 2025 இல்  ' சகலருக்கும் பொதுவான சுபிட்சத்துக்கான பொது டிஜிட்டல்  உட்கட்டமைப்பை கட்டியெழுப்புதல் ' (Building Digital Public Infrastructure for Shared prosperity ) என்ற தலைப்பிலான மகாநாட்டில் அளித்தார்.

பிம்ஸ்ரெக் (BIMSTEC -- Bay of Bengal initiative for Multi -- Sectoral Technical and Economic Cooperation ) என்பது வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவின் தலைமையில் ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அமைப்பாகும். பஙகளாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார்,நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன.

சர்வதேச ஆதரவை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் (Belt and Road Initiative )  போன்ற ஏனைய பிராந்திய முயற்சிகளை மனதிற்கொண்டு இந்தியா பிம்ஸ்ரெக்கை பிராந்திய ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய மேடையாக  மேம்படுத்துகிறது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் ஒத்துழைப்பை  மேம்படுத்துவதற்காக இந்தியா கொண்டிருக்கும் ' முதலில் அயலகம்' ( Neighbourhood First)  மற்றும் கிழக்கு நோக்கிய செயற்பாடு ( Act East ) போன்ற கொள்கைகளுடன் பிம்ஸ்ரெக் இசைவானதாக அமைகிறது. பிம்ஸ்ரெக் ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ்  பயங்கரவாத எதிர்ப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் இணையவெளிப் பாதுகாப்பு  ஆகியவை தொடர்பிலான முயற்சிகளுக்கு இந்தியா தலைமை தாங்கி வழிநடத்துகிறது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் விளைவாக சர்வதேச மகாநாடுகளை நடத்துவது இலங்கைக்கு கட்டுப்படியாகாததாக இருக்கின்ற ஒரு நேரத்தில் இலங்கையில் இந்த மகாநாடு நடைபெற்றிருக்கிறது என்பதே அதன் முக்கியத்துவமாகும். இந்தியாவின் நல்லெண்ணம் மற்றும் நிதியுதவியின் விளைவாகவே பல அயல்நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடியதாக இருந்தது.

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, டிஜிட்டல் அடையாளம், டிஜிட்டல் கொடுப்பனவு, வர்த்தகத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் ஆட்சிமுறை ஆகியவை மகாநாட்டில் ஆராயப்பட்ட முக்கியமான  விடயதானங்களாகும். டிஜிட்டல்மயமாக்கத்தினால் பொருளாதார செயற்திறனை மேம்படுத்தவும் ஊழலைக் குறைக்கவும் முடியும் என்பது அதன் அம்சங்களில் முக்கியமானதாகும். டிஜிட்டல்மயமாக்கத்தின் இந்த அம்சத்துக்கு  பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க தனதுரையில் பெருமுக்கியத்துவம் கொடுத்தார்.  ஊழல் ஒழிப்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் பற்றுறுதியை அவர் அழுத்தியுரைத்தார்.

இந்தியாவின் விலகல் 

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் விரிவாக்கத்துக்கும் வலுப்படுத்தலுக்கும் ஆதரவளிப்பதில் இந்தியா வகிக்கும் பாத்திரம், கிடைக்கக்கூடியதாக இருக்கின்ற வளங்களை பெருமளவுக்கு பயனுறுதியுடைய முறையில் பயன்படுத்துதல் மற்றும் அறிவுஜீவித்துவ வளங்களை அதிகரித்தல் ஊடாக நாட்டின் அபிவிருத்தி வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு முக்கியமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

துரிதமாக வளரும் டிஜிட்டல் உட்கட்டமைப்புடன் கூடிய ஒரு பிராந்திய வல்லாதிக்க நாடு என்ற வகையில் இந்தியா, இலங்கையின் டிஜிட்டல்  மாற்றத்தில் ஒரு வகைமாதிரியாகவும் முக்கியமான ஒரு பங்காளியாகவும் செயற்பட முடியும்.

டிஜிட்டல்மயமாக்கத்தில் முன்னரங்கத்தில் இருக்கும் இந்தியா துரித  தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் டிஜிட்டல் நிதிமுறைமை ஊடாக  உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் மத்தியில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது என்று  பிம்ஸ்ரெக் செயலகத்தின் தற்போதைய பணிப்பாளரான கலாநிதி சாய் மெண்டிஸ் சுட்டிக்காட்டினார்.

உலக அரங்கு பெருமளவுக்கு பிராந்திய அணிகளாகவும் தங்களது சொந்த மூலோபாய நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்  முக்கியமான வல்லாதிக்க நாடுகளினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகவும் விளங்குகின்ற ஒரு யுகத்தில், அயல்நாடான இந்தியாவுடன் நல்லிணக்க உறவை ஆழமாக்குவதே இலங்கைக்கு நடைமுறைச் சாத்திரமானதும் பயனுடையதுமாகும்.

2022  இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இது தெளிவாக வெளிக்காட்டப்பட்டது. 

அந்த நேரத்தில் இலங்கைக்கு பெருமளவு நிதியுதவியை வழங்கிய தனியொரு முக்கியமான நாடாக இந்தியா விளங்கியது. இந்தியா வழங்கிய நேரடி வெளிநாட்டு நாணய  பரிமாற்றத்தின் ஊடாக எரிபொருட்கள்,  உணவு வகைகள் மற்றும் மருந்து வகைகள் போன்ற முக்கியமான இறக்குமதிகளைச் செய்யக்கூடியதாக இருந்தது.

சிறிய நாடுகள் ஒதுக்கப்படுகின்ற அல்லது அலட்சியம் செய்யப்படுகின்ற ஒரு புவிசார் அரசியல் பின்புலத்தில் அத்தகைய உதவியும் ஆதரவும் பெறுமதி மதிப்பிட முடியாதவையாகும். இலங்கையின் பிராந்திய பங்காளி என்ற வகையில் இந்தியாவின் பாத்திரம் எதிர்காலத்தில் அதனுடனான நெருக்கமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் தேவையை வலுவாக உணர்த்தி நிற்கிறது.

இலங்கை தொடர்பான  உறவுகளைப் பொறுத்தவரை, இந்தியா அதன் கொள்கைகளை இனத்துவ மற்றும் கலாசாரப் பிணைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை என்ற நிலையில் இருந்து பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டவையாக மாற்றியிருக்கிறது என்பதற்கான அறிகுறிகளை அண்மைக்காலத்தில் காணக்கூடியதாக இருந்தது. இலங்கையின் இனநெருக்கடியில் இந்தியாவின் பாத்திரம் தொடர்பான கடந்த காலச் சர்ச்சைகளை பின்னோக்கிப் பார்க்கும்போது இந்தியாவின் கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இது தெளிவாகத் தெரிந்தது. இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை இரு்நாடுகளும் செய்துகொண்ட அல்லது விரைவில் செய்து கொள்வதற்கு உறுதிபூண்டிருக்கும் வர்த்தக மற்றும் பொருளாதார உடன்படிக்கைகள் மீதே முக்கிய கவனத்தைக் குவித்திருந்தன.

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவ அமைவிடம் தொடர்பிலான பாதுகாப்பு அம்சங்களும் கூட்டறாக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், அதில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொனறைக்  காண்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

சீனா இலங்கையில் அதன் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற முயற்சிகள் மீதே இந்தியா அக்கறையைச் செலுத்துகிறது. தனது பாதுகாப்புக்கு முக்கியமானதாக  தெற்காசியாவையும்  இந்து சமுத்திரத்தையும் இந்தியா கருதுகின்றது.

அந்த பிராந்தியங்களில்  செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் பரந்தளவிலான மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே இலங்கையில் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதற்கு சீனா மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை புதுடில்லி நோக்குகிறது. அந்த முயற்சிகள் மீதே இந்தியாவின் கவனம் குவிந்திருக்கிறது.

சீனாவின் பிரவேசம் 

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் குறித்தோ அல்லது இலங்கையில் இனத்துவ சமூகங்களுக்கு இடையில் ஓரளவுக்கேனும் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிசெய்வதற்கு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுவது குறித்தோ எதுவும் குறிப்பிடப்படாதமை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் ஒன்றாகும்.

1987 ஆம் ஆண்டில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக்கையின் ஒரு விளைவே 13 வது திருத்தமாகும். அந்த உடன்படிக்கையின் ஊடாகவே இலங்கையின்  நீண்டகால இனநெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக இலங்கையில் ஆட்சிமுறையில் செல்வாக்கைச் செலுத்துவதற்கு இந்தியா முயன்றது 

பெரும்பான்மைச் சமூகத்துடன் ஒப்பிடும்போது சனத்தொகையில் சிறியதான தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை,  தேசிய அல்லது உபதேசிய தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைகளில் பஙகாளிகளாக இருப்பதில் அதற்கு இருந்த இயலாமையே இனநெருக்கடியின் மூலவேராகும். இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதலைப் பிரயோகிக்க இந்தியா தவறுவதால் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய தங்களது சுயாட்சிக்கான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பயனற்றுப்போகிறது என்று தமிழ் அரசியல் கட்சிகள் கவலையடைந்திருக்கின்றன.

நீண்டகாலமாக தீர்த்துவைக்கப்படாமல் இருக்கும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீதான வெளி நெருக்குதல் அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருப்பதை அடுத்து தற்போது அமெரிக்க கொள்கைகளில் ஐற்பட்டுவருகின்ற தீவிரமான மாற்றங்களை தொடர்ந்து மேலும் தணிந்து போவதற்கான சாத்தியமே இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.  அரசியல் சீர்திருத்தங்களின் ஊடாக போர்க்கால உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இலங்கையை வலியுறுத்தி மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக தீர்ம்னங்களை நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு  2011 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா தலைதைாஙகி வந்தது என்பது கவனிக்கத் தக்கது. 

இலங்கையில் சர்ச்சைக்குரிவையாக இருக்கும் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம்  தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தின் மீதான நெருக்குதல் குறைவதற்கே சாத்தியம் இருக்கிறது.

அமெரிக்காவின் புதிய  அரசாங்கம் அதன் சொந்த சர்வதேச உதவி நிறுவனமான யூ.எஸ். எயிட் ஊடாக வெளிநாடுகளுக்கு வழங்கிவந்த உதவிகளை இடைநிறுத்தியிருக்கிறது. அந்த நடவடிக்கை பன்முக சமூகம் ஒன்றுக்கு அவசியமான அரசியல் கட்டமைப்புக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நிலைபேறான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட செயன்முறைகளின் அனுபவங்களில் இருந்து  ஊக்கத்தைப் பெறுவதற்கும் பாடுபட்டு வருகின்ற இலங்கையின் சிவில் சமூக அமைப்புக்களை பெரிதும் பாதித்திருக்கிறது.

இலங்கையின் புதிய அரசாங்கம் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் அக்கறை காட்டுகின்ற நிலையில், உறுதிமொழிகள் அர்த்தமுடைய நடவடிக்கைகளாக மாறுவதை உறுதிப்படுத்துவதில் சிவில் சமூகத்தினால் ஒரு பயனுறுதியுடைய பாத்திரத்தை வகிக்க முடியும்.

இந்தியாவினதும் அமெரிக்காவினதும்  அணுகுமுறைகள் காரணமாக  சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும்  தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் ஏற்படுகின்ற வெற்றிடம் அந்த களத்தில் புதிதாக பிரவேசிக்கும் ஒரு நாட்டினால் நிரப்பப்படக் கூடும். சீனாவின் தேசிய இன விவகாரங்கள் ஆணைக்குழுவுக்கு பொறுப்பான அமைச்சர் தலைமையிலான உயர்மட்டத்  தூதுக்குழு ஒன்று பெப்ரவரி 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இனத்துவ விவகாரங்களைக் கவனிக்க சீனாவில் அத்தகைய அமைச்சு ஒன்று இருக்கிறது என்பதை அறியாத இலங்கை மக்களின் கண்களை அந்த தூதுக்குழுவின் விஜயம் திறக்க வைக்கும்.  தூதுக்குழுவின் தலைவரான  அமைச்சர் பான் யூ இன சௌஜன்யம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இலங்கையில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருக்கிறார்.

அதேவேளை, பெருமளவு வாழ்வாதார உதவித் திட்டங்கள் ஊடாக இலங்கையின் வடக்கில் சீனா தொடர்ந்து ஊடுருவல்களைச் செய்கிறது என்றும் புதிய செய்திகள் வருவதும் கவனிக்கத்தக்கது. அமெரிக்காவின் புதிய அரசாங்கம் அதன் வெளிநாட்டு உதவிகள் அதன் தேசிய நலன்களுக்கு இசைவானதாக இருக்க வேண்டியது அவசியம் என்று வெளிப்படையாகவே கூறிவருகின்றது.

தொலைவில் இருக்கின்ற ஒரு தீவு என்ற வகையில் அமெரிக்க அரசாங்கத்தின் முன்னுரிமைப் பட்டியலில்  இலங்கை ஒரு உயர்ந்த இடத்தைப் பெறுவது சாத்தியமேயில்லை. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கை உயர்ந்த முன்னுரிமைக்குரியதாகவே இருக்கும். அதனால், இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா மீண்டும் அக்கறை காட்டக்கூடிய சூழ்நிலை  உருவாகவும் கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07