கில் அபார சதம், கொஹ்லி, ஐயர் அரைச் சதங்கள் குவிப்பு; இங்கிலாந்தை 3 - 0 என வீழ்த்தியது இந்தியா

Published By: Vishnu

13 Feb, 2025 | 06:17 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக அஹமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற 3ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாகக் கைப்பற்றியது.

ஷுப்மான் கில் குவித்த அபார சதம், விராத் கோஹ்லி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு தங்களை தயார்படுத்தும் கடைசிப் போட்டியாக அமைந்தது.

இந்தப் போட்டியை இந்திய அணியினரே சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர்.

முதல் இரண்டு போட்டிகளில் முறையே 87 ஓட்டங்களையும் 60 ஓட்டங்களையும் பெற்ற ஷுப்மான் கில், கடைசிப் போட்டியில் அபார ஆற்றலை வெளிப்படுத்தி 102 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார்.

18 மாதங்களில் கடந்த 14 இன்னிங்ஸ்களில் சதம் குவிக்காமல் இருந்த ஷுப்மான் கில்லுக்கு இந்த சதம், சம்பியன்ஸ் கிண்ணத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவவுள்ளது.

ரோஹித் ஷர்மா ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்த பின்னர் (6 - 1 விக்.) விராத் கோஹ்லியுடன் 2ஆவது விக்கெட்டில் 116 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயருடன 3ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

விராத் கோஹ்லி 52 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 78 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட கே.எல். ராகுல் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஆதில் ராஷித் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் ஆதில் ராஷித் பதிவுசெய்த அதிசிறந்த பந்துவிச்சுப் பெறுதி இதுவாகும்.

மார்க் வூட் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

357 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 34.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதிலும் மத்திய வரிசை பிரகாசிக்கவில்லை.

பென் டக்கெட் (34), பில் சோல்ட் (23) ஆகிய இருவரும் 38 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்த சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

18ஆவது ஓவரில் இங்கிலாந்து 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், கடைசி 8 விக்கெட்கள் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

டொம் பென்டன் 38 ஓட்டங்களையும் ஜோ ரூட் 24 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் கஸ் அட்கின்சன் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷித் ராணா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் இரண்டு விருதுகளையும் ஷுப்மான் கில் வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 11:05:52
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45