கருப்பு பணம் தூய்மைப்படுத்தலுக்கு எதிரான செயலணி நியமனம் - இலங்கை மத்திய  வங்கி

13 Feb, 2025 | 01:03 PM
image

கருப்பு பணம் தூய்மைப்படுத்தலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிக்கும் மேம்பட்ட செயலணியின் நியமனம் மற்றும் இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடுகளுக்கான தயாரிப்புகள் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய பசுபிக் குழுமத்தினால் ஒருங்கிணைக்கப்படும் கருப்பு பணம் தூய்மைப்படுத்தலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிக்கும் கட்டுப்பாடு தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு எதிர்காலத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நிதியியல் நடுவடிக்கைச் செயலணியின் 40 பரிந்துரைகள் மற்றும் 11 உடனடி பெறுபேறுகளுடன் தொழில்நுட்ப ரீதியான செயல்பாடுகளையும் மதிப்பீட்டு முறைகளையும் இலங்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பணம் தூய்மைப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிக்கும் கட்டுப்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை சரிசெய்வதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் பங்குதாரர் நிறுவனங்கள், குறிப்பாக சட்ட மா அதிபர் திணைக்களம், இலங்கை பொலிஸ், இலங்கைச் சுங்கம், லஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு, நீதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு, கம்பனிகள் பதிவாளர் திணைக்களம், உள்நாட்டு வரி திணைக்களம், மதுவரித் திணைக்களம், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய ரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை ஆகியவை தொடர்புபட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் செயல்திறனை கண்காணித்து முன்னெடுப்பதற்காக, 2023 ஆம் ஆண்டில் பணம் தூய்மைப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிக்கும் செயலணியை அமைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மேலும், இலங்கையில் ஊழல் ஒழிப்பதற்கான அரசாங்க முயற்சிகளுடன் இணைந்து, இது உயர் மட்ட அமைச்சரவை பிரதிநிதிகளின் மேற்பார்வையில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உயர் மட்ட பணம் தூய்மைப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழிக்கும் செயலணியின் உறுப்பினர்களாக: ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் புவணேக அலுவிகார, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அணில் ஜயந்த பர்ணாந்து, – நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கி மூத்த துணை ஆளுநர்  நெலுமனி தவுலகல  மற்றும்  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி.டி.டி. அரந்தர ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

2025 ஜனவரி 29 அன்று நடைபெற்ற முதலாவது கூட்டத்தில், பரஸ்பர மதிப்பீட்டின் முக்கியத்துவம் தொடர்பாக செயலணியின் தலைவரும் உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தனர். இந்த மதிப்பீட்டை வெற்றிகரமாகச் சந்திக்க, ஒவ்வொரு பங்குதாரரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதற்கான வேண்டுகோள்  இதன் போது விடுக்கப்பட்டது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right