சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்; 214 ஓட்டங்களைத் தக்கவைத்து ஆஸி.யை வீழ்த்தியது இலங்கை

Published By: Vishnu

12 Feb, 2025 | 06:57 PM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலரியாவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாடரங்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 214 ஓட்டங்களைத் தக்கவைத்து   49 ஓட்டங்களால்  இலங்கை அபார வெற்றியீட்டியது.

மிகவும் நெருக்கடியான வேளையில் அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அபார சதம், துனித் வெல்லாலகே, ஏஷான் மாலிங்க ஆகியோருடன் முறையே 6ஆவது, 9ஆவது விக்கெட்களில் அவர் பகிர்ந்த மிகவும் பெறுமதிமிக்க இணைப்பாட்டங்கள் என்பன இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன.

அது மட்டுமல்லாமல் மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முன்வரிசை வீரர்கள் கவனக் குறைவு காரணமாக தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்தனர். 15ஆவது ஓவரில் இலங்கை 5 விக்கெட்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

குசல் மெண்டிஸ் (19), ஜனித் லியனகே (11) ஆகிய இருவரே இரட்டை இலக்கங்களைப் பெற்றனர்.

இதன் காரணமாக இலங்கை 100 ஓட்டங்களை அண்மிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் துனித் வெல்லாலகே அனுபவசாலிபோல் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு தெம்பூட்டினார்.. அவர் சரித் அசலன்கவுடன் 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதுவே இலங்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததுடன் 33ஆவது ஓவரில் இலங்கை 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது.

8ஆவது விக்கெட் வீழ்ந்தபோது சரித் அசலன்க 73 பந்துகளில் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அதன் பின்னர் சரித் அசலன்க மற்றையவர்களுக்கு முன்னுதாரணமாக புத்திசாதுரியத்துடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்து அணியை பெரு வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார்.

அவரது இரண்டாவது 50 ஓட்டங்கள் 41 பந்துகளில் பெறப்பட்டது.

சரித் அசலன்க 126 பந்துகளில் 14 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 127 ஓட்டங்களைக் குவித்தார்.

அத்துடன் 9ஆவது விக்கெட்டில் ஏஷான் மாலிங்கவுடன் மிகவும் பெறுமதியான 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மாலிங்க 26 பந்துகளில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சோன் அபொட் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆரொன் ஹார்டி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் எலிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ட்ரவிஸ் ஹெட், க்லென் மெக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்தது தவறு என்பதை இந்தத் தோல்வி அவுஸ்திரேலியர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்பது நிச்சயம்.

இலங்கையைப் போன்றே அவுஸ்திரேலியாவும் ஆரம்பத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அசித்த பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே ஆகியோரின் இலக்கை நோக்கிய துல்லியமான பந்துவீச்சுகளின் காரணமாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (12) உட்பட நால்வர் முதல் பத்து ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (31 - 4 விக்.)

அனுபவசாலிகளான மானுஸ் லபுஷேன் (15), அலெக்ஸ் கேரி (41) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் ஆரோன் ஹார்டி, சோன் அபொட் (20) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 41  ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஹார்டி 32 ஓட்டங்களைப் பெற்றார். 10ஆம் இலக்க வீரர் அடம் ஸம்ப்பா 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2  விக்கெட்களையும் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 11:05:52
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45