எயிற்கின் ஸ்பென்ஸ் அதன் புதிய தவிசாளராக ஸ்டஷானி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதை அறிவிக்கிறது

11 Feb, 2025 | 06:03 PM
image

யிற்கின் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு தனது தொலைநோக்கான தலைமைத்துவம் மற்றும் தளராத அர்ப்பணிப்பின் மூலம் வழிகாட்டிய அதன் மதிப்பிற்குரிய தவிசாளர் தேசமான்ய டீ.எச்.எஸ். ஜயவர்தன (ஹரி ஜயவர்தன) அவர்களின் மறைவினால் நிறுவனம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. தேசமான்ய டீ.எச்.எஸ். ஜயவர்தன அவர்களின் மகத்தான பங்களிப்பிற்கு கௌரவபூர்வமான நன்றியறிதலைத் வெளியிடும் நிறுவனம், அதே சமயத்தில் இக்கஷ்டமான நேரத்தில் ஜயவர்தன குடும்பத்தினருக்குத் தனது இதயபூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மாபெரும் இழப்பின் பின்னணியில்,  எயிற்கின் ஸ்பென்ஸ் நிறுவனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதன் புதிய தவிசாளராக செல்வி டீ.எஸ்.ரீ. ஜயவர்தன (ஸ்டஷானி ஜயவர்தன) நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. செல்வி ஜயவர்தன நிறைவான அனுபவத்தையும் தனது தந்தையும் முன்னோடியுமான ஹரி ஜயவர்தன அவர்களின் அதிசிறந்த பாரம்பரியத்தைத் தொடர்வதற்கு வலுவான அர்ப்பணிப்பையும் தன்னுடன் கொண்டுவருகிறார்.

செல்வி ஜயவர்தன 10 ஆண்டுகளுக்கு மேலாக எயிற்கின் ஸ்பென்ஸின் ஒரு முக்கிய பகுதியாக இருந்து பல்வேறு தலைமைத்துவப் பதவிகளை வகித்ததுடன், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். வயதில் மிகவும் இளைய சபை உறுப்பினர் மற்றும் சபையில் இடம்பெறும் முதலாவது பெண் உறுப்பினர் என்ற வகையில் எயிற்கின் ஸ்பென்ஸ் பி.எல்.சி.யின் வரலாற்றில் பல முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார். எயிற்கின் ஸ்பென்ஸ் நிறுவனத்தை தொடர்ச்சியான வெற்றி மற்றும் புத்தாக்கப் பாதையில் வழிநடத்த அவருக்குள்ள ஆற்றலின் மீது நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கையை அவரது புதிய நியமனம் எடுத்துக்காட்டுகின்றது.

செல்வி ஜயவர்தன, அவரது காலஞ்சென்ற தந்தை தேசமான்ய டீ.எச்.எஸ். ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலில் கம்பனிகளின் முகாமைத்துவத்தில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் எயிற்கின் ஸ்பென்ஸ் குழுமக் கம்பனிகள் பலவற்றை நிர்வகித்ததுடன், அவற்றிற்கான மூலோபாய வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார். 

காலஞ்சென்ற தேசமான்ய டீ.எச்.எஸ். ஜயவர்தன அவர்களின் தொலைநோக்கைப் பின்பற்றி எயிற்கின் ஸ்பென்ஸ் குழுமக் கம்பனிகளை வளர்ச்சிப் பாதையில் தொடர்ச்சியாக வழிநடத்த செல்வி ஜயவர்தன அவர்களின் அறிவும் அனுபவமும் உதவும் என்பதில் ஐயமில்லை.

எயிற்கின் ஸ்பென்ஸ் ஹொட்டேல் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. மற்றும் பிறவுண்ஸ் பீச் ஹொட்டேல்ஸ் பி.எல்.சி. ஆகியவற்றின் தவிசாளராகவும் செல்வி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லங்கா மில்க் ஃபூட்ஸ் (CWE) பி.எல்.சி.யின் பிரதித் தவிசாளராகவும் பதவியேற்றுள்ள அவர், மெல்ஸ்டாகோர்ப் பி.எல்.சி., டிஸ்டிலரீஸ் கம்பனி ஒப் ஸ்ரீலங்கா பி.எல்.சி.யின் பணிப்பாளர் பதவிகளையும் தொடர்ந்து வகிக்கின்றார்.

செல்வி ஜயவர்தன ஐக்கிய இராச்சியத்திலுள்ள சென். ஜேம்ஸ் மற்றும் லூஸி அன்ட் லூஸி கிளேட்டன் கல்லூரி மற்றும் கீல் பல்கலைக்கழகம், சிங்கப்பூரிலுள்ள எமரிட்டஸ் முகாமைத்துவக் கல்வி நிலையம் ஆகியவற்றின் பட்டதாரியும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்களைக்கழகத்தின் (ஜட்ஜஸ் வணிகக் கல்லூரி) முன்னாள் மாணவரும் ஆவார். 

2003ஆம் ஆண்டில் அவர் ஐக்கிய அமெரிக்க செனட்டர் ஹிலரி ரோடம் கிளிட்டன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் கீழ் பணியாற்றிய வயதில் மிகவும் இளைய பயிலுநராக இருந்தார்.

அவரது பணி மற்றும் ஊக்கமளிப்பதற்கான அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதத்தில் அவருக்கு பல உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்குகளில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

செல்வி ஸ்டஷானி ஜயவர்தன பன்முகப்படுத்தப்பட்ட பல்வேறு கூட்டு நிறுவனக் கட்டமைப்புகளில் பெற்றுள்ள விரிவான தலைமைத்துவ அனுபவம், எயிற்கின் ஸ்பென்ஸ் நிறுவனத்தை ஒரு புதிய வெற்றிச் சகாப்தத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய அவரது திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right