நெடுஞ்சாலையில் பயணித்த லொறியுடன் பஸ் மோதியதால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில பரேலி நெடுஞ்சாலையில், தலைநகர் புது டில்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநில கோன்டா மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்தமையால், எதிரில் வந்த லொறியுடன் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.  

மேலும் குறித்த விபத்தின் காரணமாக பஸ் மற்றும் லொறி என்பவற்றில் வேகமாக தீ பரவியதால் பஸில் பயணித்தவர்களில் 17 சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததுடன், 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 20 பேர் வரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.