பண்பு நிறைந்த பத்திரிகையாளன் பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம்

Published By: Digital Desk 7

11 Feb, 2025 | 09:19 AM
image

வீரகத்தி தனபாலசிங்கம் 

இலங்கை பத்திரிகை நிறுவனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து  மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஜனவரி 7 ஆம் திகதி இரவு  நடத்திய ' சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் ' வழங்கும் வனப்புமிகு விழாவில்  இறுதியாக நான் பாரதியைச் சந்தித்தேன். நீண்ட நேரமாக அவருடன் பேசி,  மீண்டும் சந்திப்போம் என்று கூறி இருவரும் விடை பெற்றுக் கொண்டோம். ஆனால், அதற்கு பிறகு ஒரு மாதமும் இரு நாட்களும் கடந்த நிலையில் கடந்த ஞாயிறன்று பாரதி எம்மிடமிருந்து நிரந்தரமாகவே விடை பெற்ற துயர்நிறைந்த  செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடந்த சில வாரங்களாக பாரதி சுகவீனமுற்று வைத்தியசாலையால் சிகிச்சை பெற்று வந்தார் என்ற போதிலும், அவர் விரைவில் சுகமடைந்து விடுவார், அவரைச் சென்று பார்க்கலாம் என்று  நம்பிக்கை கொண்டிருந்தோம். உண்மையில், அவர் எம்மத்தியில் இன்று  இல்லை என்பதை நம்புவதற்கு மனம் மறுக்கிறது. பாரதியின் 

மறைவு எம்மிடமிருந்து பண்பும் ஆற்றலும் நிறைந்த ஒரு சிறந்த  பத்திரிகையாளனை அபகரித்துச் சென்று விட்டது. 

பாரதி ஒரு சிறந்த பத்திரிகையாளன் என்பதற்கு அப்பால் ஒரு  சிறந்த மனிதநேயன். அரசியலைப் போன்றே போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்ததாக மாறிவிட்ட ஊடகத்துறையில் பாரதியைப் போன்று முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகலருடனும் இணக்கப் போக்குடன் ஊடாட்டங்களைச் செய்யும் ஒரு பத்திரிகையாளனை இனிமேல் காணமுடியுமா என்று மனம் ஏங்குகிறது. மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்காத ஒரு பிறவி பாரதி.

என்னைப் பொறுத்தவரை,  பத்திரிகைத்துறைச் சகபாடி ஒருவர் என்பதற்கு அப்பால் என்னை நன்கு புரிந்து கொண்டு, நான் இழைத்திருக்கக்கூடிய தவறுகளையும்  கூட பொருட்படுத்தாமல் என்னுடன்  நீண்டகால பழகி நெருங்கிய நண்பனை இழந்து நிற்கிறேன். பாரதிக்கும் எனக்கும் இடையிலான ஊடாட்டம் அவர் 1990 களின் முற்பகுதியில் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டதுடன் தொடங்கியது. எங்களுக்கு இடையிலான நெருக்கத்துக்கு 35 வயது. 

கொழும்பில் இருந்து பணியாற்றிய எங்களைப் போன்றவர்களைப் போலன்றி,  பாரதி பத்திரிகைத் துறையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்தவர். ஆயுமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் தோற்றம் பெறத்தொடங்கிய நாட்களில் அவரின் பத்திரிகைத்துறைப் பிரவேசம் இடம்பெற்றது. முதலில் 1980 களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில்  ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றி பாரதி இந்திய அமைதி காக்கும் படை வடக்கு,  கிழக்கில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் விபத்தொன்றில் சிக்கிய பின்னரே  வீரகேசரியில் இணைந்துகொணடார். 

பாரதியின் பத்திரிகைத்துறை வாழ்வு உள்நாட்டுப்போர் நீடித்த மூன்று தசாப்தங்களையும் போர் முடிவுக்கு வந்ததற்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களையும் உள்ளடக்கியதாகும். அதன் காரணமாக அவர் இயல்பாகவே தமிழ்த் தேசியவாத அரசியல் கோட்பாடுகளில்  நிறைந்த ஈடுபாடு கொண்டவராக, தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும்  பற்றுறுதியுடன் நியாயப்படுத்துவதற்கு தனது எழுத்தை அர்ப்பணித்தவராக வாழ்ந்தார். 

அதன் விளைவாக சிறந்த ஒரு அரசியல் விமர்சகராகவும் அவரால் விளங்க முடிந்தது.  பாரதி வீரகேசரியில் இணைந்த ஆரம்ப நாட்களிலேயே தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான சில ஆய்வு முயற்சிகளுக்கு முகாமைத்துவம் அவரைப் பயன்படுத்தியதை நான் நன்கு அறிவேன். அந்த ஆய்வுகளை ஒரு நூலாக்கும் முயற்சியும் கூட மேற்கொள்ளப்பட்டது. பாரதி அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார். 

பத்திரிகையாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவராக விளங்கிய பாரதி பல தடவைகள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றினார். 

தினக்குரல் பத்திரிகை 1997 ஏப்ரிலில் தொடங்கப்பட்டபோது  அதன் முதல் செய்தி ஆசிரியராக நான் இணைந்து கொண்டேன். என்னுடன் முதலில் கூட வந்தவர்கள் பாரதியும் சீவகனுமேயாவர். புதிய பத்திரிகையில் இணைவதில் உங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லையா என்று நான் இருவரையும் கேட்டபோது" நீங்கள் போகிறீர்கள் ...... எங்களுக்கு என்ன தயக்கம் "  என்று இருவரும் கூறியது இன்றும் என் காதில் எதிரொலிக்கிறது. அந்தளவுக்கு என்மீது பாரதி வைத்திருந்த நம்பிக்கை உணர்வு என்னை நெகிழ வைத்தது. இறுதிவரை என்னுடனான அந்த நெருக்கத்தை அவர் பேணினார். 

தினக்குரலின் பிரதம ஆசிரியராக  2004  ஏப்ரிலில் என்னை பொறுப்பேற்குமாறு முகாமைத்துவம் கேட்டபோது அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். பாரதியை ஞாயிறு தினக்குரலின் பொறுப்பாசிரியராக நியமிப்பதாக இருந்தால் மாத்திரமே நான் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்பேன் என்று கூறினேன். பாரதி போன்ற  அனுபவமும் ஆற்றலும் கொண்ட ஒருவரை அந்த பொறுப்பில் அமர்த்தினால் எனது பணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நான் திடமாக நம்பினேன். முகாமைத்துவமும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பாரதியை ஞாயிறு தினக்குரலுக்கு பொறுப்பாக நியமித்தது. வாரப்பத்திரிகையின் வளர்ச்சிக்கு பாரதியின் பங்களிப்பு மகத்தானது. 

செய்திகளைக் கையாளுவதை விடவும் வாரப்பத்திரிகைக்கு உரிய சிறப்பு அம்ச விடயதானங்களைக் கையாளுவதில் பாரதியின் ஆற்றல் அபாரமானது என்பதை அவர் தனது பணியின் மூலம் நிரூபித்தார். கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களை ஞாயிறு தினக்குரலின் பக்கம் கவர்ந்ததில் பாரதியின் பங்களிப்பு  முக்கியமானது. 

தினக்குரலின் முகாமைத்துவத்தில் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து நாமெல்லோரும் வீரகேசரி காரியாலயத்தில் பணியாற்ற வேணடியிருந்தது. பாரதியின் திறமையைக் கண்ட வீரகேசரி முகாமைத்துவம் பாரதியை தங்களுக்காக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியதை நான் நன்கு அறிவேன். நவீன தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனும் அவர்  தன்னை எளிதாகவே பரிச்சயமாக்கிக் கொண்டார். பாரதி  ஓய்வபெற்று யாழ்ப்பாணம் திரும்பிய பிறகு அங்குள்ள சில ஊடகங்களில் பணியாற்றினார். ஆனால், இறுதியில் வீரகேசரி நிறுவனம் அதன் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் பொறுப்பாசிரியராக நியமிப்பதற்கு ஒருவரை தேடியபோது பாரதியை அதற்கு பொருத்தமானவராக அடையாளம் கண்டு நியமித்தது.

அந்த நியமனம் பாரதியின் வீரகேசரிக்கான மீள்வருகையாக அமைந்தது. ஆனால், அதில் சில மாதங்களே பணியாற்றிய நிலையில் அவர் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். திடீரென்று தாக்கிய பக்கவாத நோய் சில வாரங்களில் அவரைப் பலியெடுத்துவிட்டது.

  ஊடகத்துறையில் இன , மத , பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பல மட்டங்களில்்பாரதிக்கு  பெருமளவில் நண்பர்கள்,அபிமானிகள்  இருந்தார்கள். வெறுமனே அலுவலகத்திற்குள் தன்னை முடக்கிக் கொண்ட ஒரு  பத்திகையாளராக இல்லாமல் வெளித் தொடர்புகளை நிறையவே அவர் ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக புலம்பெயர் தமிழ்ச சமூகத்திலும் அவர் நன்கு அறியப்பட்டவராக விளங்கினார். பல  வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டு தனது அனுபவத்தை வளப்படுத்திக் கொண்டார். புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் இயங்கும் சில ஊடகங்களுக்காக பல தடவைகள்  என்னை நேர்காணல் செய்து என்னையும் அந்த சமூகத்துக்கு அறிமுகம் செய்தார்.

அவரது மறைவை ஈடுசெய்ய முடியாத இழப்பு  என்று கூறுவதை விடவும் நிச்சயமாக ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு  என்றே நான் கூறுவேன். ஏனென்றால், பாரதியைப் போன்ற பரந்த அனுபவமும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்ட  பத்திரிகையாளர் தமிழ் ஊடகத்துறைக்கு வேண்டும். 

எனது தனிப்பட்ட குறிப்பை இந்த சந்தர்ப்பத்தில் கூறவிரும்புகிறேன்.  விரும்புகிறேன். காலஞ்சென்ற முதுபெரும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா ஒரு தடவை என்னை அணுகி தனது மல்லிகை சஞ்சிகையில் அட்டைப்பட பிரமுகராக என்னை பதிவுசெய்ய விரும்புவதாக கூறினார். " அதற்கு யாரிடம் உங்களைப் பற்றி ஒரு கட்டுரையை வாங்கலாம்? " என்று  அவர்  என்னையே கேட்டார். " அவுஸ்திரேலியாவில் வாழும் எனது நெருங்கிய நண்பன்  முருகபூபதி அல்லது பாரதியிடம் என்னைப் பற்றிய கட்டுரையை வாங்கினால் மாத்திரமே எனது புகைப்படத்தை தருவேன் " என்று நான் ஜீவாவிடம் திட்டவட்டமாக கூறிவிட்டேன். 

அவர் உடனே தினக்குரல் அலுவலகத்தில் இருந்த பாரதியின் அறைக்குச் சென்று அவரிடம்  விடயத்தை சொன்னதாக அறிந்தேன். அடுத்த மல்லிகை இதழ் எனது படத்தைத் தாங்கி வந்திருந்தது.  ஜீவாவே அதை கொண்டு வந்து தந்தார்.  உள்ளே பாரதி என்னைப் பற்றி எழுதிய கட்டுரை. அதை வாசித்த பிறகுதான் பாரதி என்னைப் பற்றி எத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார் என்பதையும் என்மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். 

பாரதி தனது அபிப்பாராயங்களை பெரிதாக வெளியில் பேசாத ஒரு பிறவி. ஆனால் ,  நிதானமாக, ஆரவாரமின்றி சகலவற்றையும் அவதானித்து செயற்பட்ட ஒருவர். பரபரப்புக் காட்டுவதில் நம்பிக்கையில்லாத ஒருவர். ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைக் கச்சாதமாகச் செய்வதில் கண்ணாயிருப்பார். வீணான அபிப்பிராயங்கள் குறித்து அக்கறை காட்டமாட்டார்.

அண்மைக்காலமாக நானும் சுகவீனமுற்று சத்திரசிகிச்சைக்கு பிறகு குணமடைந்திருக்கிறேன். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் என்னை  கடந்த மூன்று வருடங்களாக பாரதி வாரம் ஒரு முறை  யாழ்ப்பாணத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு சுகம் விசாரிக்கவும் நாட்டு நடப்புகளைப் பேசவும் தவறுவதில்லை. பத்திரிகைகளுக்கு எழுதும் அரசியல் கட்டுரைகளைப் பற்றி காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களைக் கூறுவார். மனமுவந்து நான் பேசும் பாரதியிடம் இருந்து இனிமேல் தொலைபேசி அழைப்பு வராது. 

பாரதியின் மனைவி தேவகி எனது ஊரான வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்தவர். அதனால் பாரதி எம்மவர் என்று மேலதிக  உறவு கொண்டாடும் உரிமையும் எனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வேன். மனைவிக்கும் , மகன் பார்த்திபனுக்கும் சகோதரிக்கும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

" பாரதி..... உனக்கு அஞ்சலிக் குறிப்பை எழுதும் துரதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று நான் நினைத்ததில்லை. நீ முந்தி விட்டாய். சென்றுவா "

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00