தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது பொதுவான குறிக்கோள் எதுவென்று தீர்மானிக்கவேண்டும். அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். அக்கூட்டமைப்பில் உள்ளடங்கும் பிரதிநிதிகள் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
கேள்வி - பதில் பகுதியில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் தற்போதைய நிலை மிகப்பரிதாபகரமாக இருக்கிறது எனவும், தமிழ்த்தேசியம் மீண்டும் வலுப்பெற என்ன செய்யவேண்டும் எனவும் எழுப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ்த்தேசியம் எனும் பதத்துக்கு பலவிதமான அரசியல் வியாக்கியானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. உருத்திரகுமாரனின் நாடு கடந்த தமிழீழ அரசு ஜனநாயக, மதச்சார்பற்ற தமிழீழ அரசாங்கமொன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் அதற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களது தமிழ்த்தேசியம் பிரிவினை சார்ந்தது.
அவர்கள் இனிமேல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் இயங்கிவரும் வேறுபல தமிழர் அமைப்புக்களும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானமும் தமிழீழத்தையே வலியுறுத்தியதுடன், அதனையடுத்தே 6 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. பிரிவினை கோருவது சட்டப்படி குற்றமாக்கப்பட்டது.
ஆகவே உள்நாட்டில் இயங்கிவரும் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் இப்போது தமது குறிக்கோள் சமஷ்டியே என்று கூறிவருகின்றன. அவர்கள் அனைவரும் எமது நாட்டுக்கு சமஷ்டி அரசியலமைப்பு அவசியம் எனும் ஒத்த முடிவை எடுத்திருக்கிறார்கள். எனது கட்சி மாத்திரம் கூட்டு சமஷ்டியை வலியுறுத்தியுள்ளது. வட, கிழக்கு மக்கள் வெளியகத்தரப்பினரின் தலையீடின்றி ஒரே நாட்டினுள் தம்மைத் தாமே ஆளும் உரித்தைப் பெறவேண்டும் என்பதே சகல தமிழ்த்தேசியக் கட்சிகளினதும் குறிக்கோளாகும்.
இலங்கையில் தமிழ்மொழி சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்திருக்கிறது. ஆனால் அப்போது சிங்களவர் என்ற மக்கள் கூட்டம் இருக்கவில்லை. மாறாக தமிழ்மொழி பேசிய மக்கள் தான் 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளில் சிங்களமொழி பேச முற்பட்டனர். பௌத்த மொழியான பாளி மொழி தமிழ்மொழியுடன் கலந்தமையினாலேயே சிங்களமொழி உருவானது.
தமிழ்த்தேசியம் என்பது வட, கிழக்கு மாகாணங்கள் பாரம்பரியமாகத் தமிழ்பேசும் இடங்கள், அங்கிருப்பவர்கள் தமிழ்மொழியினால் பரிபாலிக்கப்படவேண்டியவர்கள், அவர்களுக்கு அந்தப் பாரம்பரிய நிலங்களின் தன்னாட்சி வழங்கப்படவேண்டும் என்பதை அடிப்படைக்கொள்கையாகக் கொண்டதாகும். தன்னாட்சி எனும்போது, அது நாட்டைப் பிரிப்பதாக அமையும் என்ற அச்சம் சிங்கள மக்களுக்கு உண்டு.
ஆனால் உண்மையில் வட, கிழக்கில் பெரும்பான்மையினர் தமிழ்மொழி பேசுவோர் என்றதால், இந்தப் பிரிவினை ஏற்கனவே உண்டு என்பது புலப்படும். இதனை சிங்களத் தலைவர்களுக்குப் புரியவைத்து, தமிழ்பேசும் இடங்களும், அங்கு வாழும் மக்களும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படுவதற்கு அரசியல் ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை உணர்த்துவதற்கு எமது அரசியல் பலம் மேம்படவேண்டும்.
எமக்குள் வேற்றுமைகள் இருந்தால் எமது பலம் குன்றிவிடும். ஆனால் உண்மையில் எமக்குள் குறிக்கோளில் வேற்றுமை இல்லை. மாறாக சுயநல சிந்தனைகளில் தான் வேற்றுமை உள்ளது.
இன்றளவிலே தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தமது தனித்துவக்கட்சியின் முன்னுரிமையையே வலியுறுத்தி வருகிறார்கள். வட, கிழக்கு மக்கள் மற்றைய கட்சிகளைப் புறக்கணித்துத் தமது கட்சிக்கே வாக்களிக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் நடைபெற்றுமுடிந்த தேர்தலில் அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக மக்கள் தற்போதைய ஆளுங்கட்சிக்கு வாக்களித்தார்கள்.
தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கு முரணாக ஒற்றையாட்சியை வலியுறுத்திய அக்கட்சிக்கு தமிழர்கள் வாக்களித்தனர். எது எவ்வாறெனினுமு; கடந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகள் தமிழ் வாக்காளர்களின் விரக்தி மனப்பான்மையையே அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றன.
இந்நிலையில் தமிழ்த்தேசியக்கட்சிகள் இணைந்து பேசி தமது அரசியல் குறிக்கோள்கள் எவையென்பதை அறியவேண்டும். அதன்போது தனிப்பட்ட நலன்களைப் புறந்தள்ளி தமிழ் பேசும் மக்களின் நலன்கருதி தீர்மானம் மேற்கொள்ளவேண்டும். யதார்த்தமாக சிந்தித்து, வட, கிழக்கானது இலங்கையின் ஓரங்கமாகத் தொடர்ந்து இருப்பதே அதன் பாதுகாப்புக்கும், வருங்கால வாழ்க்கைக்கும் உசிதமானது என்ற எண்ணம் வேரூன்றிவிட்டால் தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுவானதொரு அரசியல் குறிக்கோளை முன்வைப்பதில் சிக்கல் எதுவும் ஏற்படாது.
அதனடிப்படையில் சகல தமிழ்த்தேசியக்கட்சிகளையும் உள்ளடக்கி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்குவது கடினமானதன்று. அதற்கமைய தமிழ்த்தேசியக்கட்சிகள் அனுபவமுள்ள படித்த, பண்புள்ள, சுயநலமற்ற பிரதிநிதிகளை புதிய கூட்டமைப்பில் உள்வாங்குவதற்கு வழியேற்படுத்தவேண்டும்.
உணர்ச்சிகளுக்கும், சுயலாபத்துக்கும் இடம்கொடுக்காது தமிழ் மக்களின் வருங்காலம் கருதி பேச்சுவார்த்தைகள் அறிவுபூர்வமாக அமையவேண்டும். ஒவ்வொரு கட்சியும் மூன்றுக்கு மேற்படாமல் தமது பிரதிநிதிகளை உடனடியாக சிபாரிசு செய்யவேண்டும். அவர்கள் இணைந்து தமக்குள் இருந்து ஒரு தவிசாளரை நியமிக்கவேண்டும்.
இக்குழு கட்சிகளின் சார்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் அல்லாததால், அரசாங்கமும் விடயம் அறிந்த உறுப்பினர்களை அல்லது அலுவலர்களை நியமிப்பார்கள். அவர்கள் இணைந்து முன்வைக்கும் முன்மொழிவு அனைத்துக் கட்சிகளாலும் பரிசீலிக்கப்படும்.
அதனைத்தொடர்ந்து தமிழ்மக்களுக்கு எவ்வாறான அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்மானிக்கலாம். இதற்குரிய ஆரம்பகட்ட வேலைகளை எமது பல்கலைக்கழகப் புத்திஜீவிகள் ஆரம்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM