“ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் நிலைபேறான எதிர்காலத்திற்கான பாராளுமன்ற உத்திகள்” என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் பெப்ரவரி 06ஆம் திகதி முதல் இன்று திங்கட்கிழமை 10ஆம் திகதி வரை மாநாடு நடைபெற்றது.
பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தெற்காசிய பிராந்தியங்களின் முதலாவது ஒன்றிணைந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையிலான இலங்கைப் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் கடந்த 06ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு 2025 பெப்ரவரி 07ஆம் திகதி நடைபெற்றதுடன், இதில் பாகிஸ்தானின் தேசிய சட்டப் பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சித்திக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பிராந்தியங்களில் உள்ள தேசிய பாராளுமன்றங்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய பிராந்தியத்தின் பிராந்திய நிறைவேற்றுக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்றச் செயலாளர் நாயகமும், பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் ஆசிய பிராந்தியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி துஷாரி ஜயசிங்க, கே.இளங்குமரன் மற்றும் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னான்டோ ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் கலந்து கொண்டனர்.
பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான பாராளுமன்ற உத்திகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தும் கலந்துரையாடல்களில் இந்தத் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.
பெண்கள், இளையோர் மற்றும் இயலாமையுடைய நபர்களை வலுப்படுத்தல், காலநிலை சவால்களை எதிர்கொள்ள பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான திறனை உறுதிப்படுத்தல், நிலைபேறான சுற்றுலாக் கட்டமைப்பை வலுப்படுத்தல் மற்றும் அரசாட்சியில் பிரதிநிதித்துவத்தை வளர்த்தல் உள்ளிட்ட பிராந்தியத்தின் முக்கியமான விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடுவதற்கான தளமாக அமைந்தது.
ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன, பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க தடையாக இருக்கும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதில் நாடுகள் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வதன் அவசியம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியின் முக்கியத்துவம் என்பவற்றை வலியுறுத்தினார்.
வெளிப்படையான ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் நெறிமுறையான தலைமைத்துவத்தை வலியுறுத்திய சபாநாயகர், அரசாங்கத் துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான மறுசீரமைப்புக்கள், ஊழலுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்தல், நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார் பங்குடமைகளை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
மேலும், நிலைபேறு தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நெறிமுறைக் கொள்கைகளை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்தும் சபாநாயகர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
“உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்: பயனுள்ள பரவலாக்கத்திற்கான சட்டமன்ற வழிவகைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க குழு உறுப்பினராகக் கலந்துகொண்டார்.
இலங்கையில் காணப்படும் தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி ஆகிய மூன்று நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்வதற்கான கட்டமைப்புக்கள் பற்றி விளக்கமளித்த அவர், சேவைகள் வழங்கல், பொருளாதார மேம்பாடு மற்றும் அரச நிர்வாகம் ஆகியவற்றில் மகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் வகிபாகத்தையும் எடுத்துக் கூறினார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போதைய கட்டமைப்பில் மாற்றங்களை அரசாங்கம் நாடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பைப் பாராட்டிய பாகிஸ்தானின் சபாநாயகர், இது பிராந்தியத்திற்கு ஒரு முன்னுதாரணமான கட்டமைப்பு என்பதையும் அங்கீகரித்தார்.
இந்த மாநாட்டின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக பாகிஸ்தானின் பதில் ஜனாதிபதியும், செனட் சபையின் தலைவருமான செய்யத் யூசஃப் ரசா கிலானி அவர்கள் கலந்துகொண்டார்.
இறுதி நாள் நிகழ்வில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் முலாபர், பிராந்தியம் முகங்கொடுக்கும் முக்கிய சவால்களை எதிர்கொள்ளக் கூட்டாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அத்துடன் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பஞ்சாப் மாகாண சபை, பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் செயலகம் ஆகியவற்றுக்கும், சிறந்த உபசரிப்பை வழங்கிய லாகூர் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதிலும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதிலும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த இந்த மாநாடு இலங்கைக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM