புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை தற்போதைக்கு மேற்கொள்ளப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த நளிந்த ஜயதிஸ்ஸ, அரசியலமைப்பு திருத்த பணிகளை விட பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காகன வேலைத்திட்டங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
“அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியது அத்தியாவசியமானதாகும். ஆனால், தற்போது அதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கம் பதவியேற்று குறுகிய காலமே கடந்துள்ளது. நாட்டில் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பாரிய சவால் பொருளாதார சவாலாகும். அரசாங்கம் அந்த சவாலை எதிர்கொள்வதற்கான பணிகளையே மேற்கொண்டுள்ளது” என்றும் அமைச்சரவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கின்றார்.
அமைச்சரின் இந்தக்கருத்தானது புதிய அரசியலமைப்புக்கான முயற்சி இப்போதைக்கு இடம்பெறப்போவதில்லை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் இந்த உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்படும். நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகளை மீளவும் முன்னெடுத்து சென்று அரசியல் தீர்வு காணப்படும். அதுவரையில் மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெட்டத்தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடத்தில் காணப்பட்டது. ஆனால், தற்போது அரசாங்கமானது இந்த விவகாரத்தில் முரண்பாடான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது அவர் புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் மூன்று ஆண்டு காலங்களில் மக்களின் அபிப்பிராயத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதி அமைச்சர் ஜனவரி மாதத்தில் புதிய அரசியல் யாப்புக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த அதேவேளை, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மூன்று ஆண்டுகளின் பின்னரே இதற்கான சாத்தியம் உள்ளது என்று கூறியிருந்தார். தற்போது அவர்தான் இப்போதைக்கு அரசியலமைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று விபரித்திருக்கின்றார். இதிலிருந்து புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கையில் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை என்பது புலனாகின்றது.
யுத்தத்தில் பெரும்பாதிப்புக்களை சந்தித்த தமிழ் மக்கள் தமது அன்றாட பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு தேசியமக்கள் சக்தி அரசாங்கமானது தீர்வு காணும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே கடந்த பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பெரும்பான்மையன வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் பதவியேற்றதுடன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண நடவடிக்கை எடுக்கும் என்று தமிழர்கள் நம்பியிருந்தனர். ஆனால், தற்போது அந்த நம்பிக்கைக்கு எதிர்மாறான செயற்பாட்டிலேயே அரசாங்கம் ஈடுபடுவதாக தெரிகின்றது.
உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு தற்போதைய அரசியல் சூழல் வாய்ப்பாகவே அமைந்திருக்கின்றது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் இன, மதவாதத்துக்கு மக்கள் ஆப்பு வைத்திருக்கின்றார்கள். இந்த இரண்டு தேர்தல்களிலும் பிரதான அரசியல்கட்சிகள் இனவாதத்தையோ மதவாதத்தையோ பரப்பியிருக்கவில்லை. சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியே பிரதான அரசியல் கட்சிகள் தேர்தலில் களமிறங்கியிருந்தன.
அதில் ஜே.வி.பி.யை பிரதான கட்சியாக கொண்ட தேசிய மக்கள் சக்தியாக இருக்கலாம், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கியமக்கள் சக்தியாக இருக்கலாம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியாக இருக்கலாம். எந்த கட்சியும் இன, மதவாதத்தைப் பரப்ப முயலவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு சகல இன மக்களும் ஆதரவு வழங்கியே ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளனர். தற்போதைய நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் அதற்கு சாதகமான சூழலே தெற்கில் காணப்படுகின்றது.
புதிய அரசாங்கமொன்று சகல இன மக்களினதும் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவது இலகுவான விடயமாக உள்ளது. ஆனாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்த தயாராக இல்லை என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு காலம் கடத்தப்படுவதானது அரசியல் தீர்வுக்கான மார்க்கத்தையே இல்லாமல் செய்துவிடும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.
1994ஆம்ஆண்டு சமாதான தேவதையாக சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக தெிவு செய்யப்பட்டிருந்தார் சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆட்சியில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்லாம் என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது. அன்றைய அரசாங்கமானது இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் வெண்தாமரை இயக்கத்தையும் ஆரம்பித்திருதது. ஆனாலும் அன்றைய அரசாங்கத்தில் அரசியல் தீர்வு சாத்தியமற்றுப்போனது.
இதேபோன்றுதான் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தன. நல்லாட்சி அரசாங்கத்தில் முதல் 100 நாட்களில் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டங்கள் அனைத்துமே வெற்றிபெற்றிருந்தன. ஆனால், அரசியல் தீர்வுக்கான முயற்சியானது அந்த 100நாள் திட்டத்தில் முன்னெடுக்கப்படவில்லை. அந்த அரசாங்கத்தில் காலம் பிந்தியே புதிய அரசியலமைப்புக்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அதனை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் காலம் பிந்தி அரசியலமைப்புக்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டதனால் அந்த பணி பூரணத்துவப்படுத்தப்படவில்லை. அரசியல் நெருக்கடி ஏற்பட்டதனால் இடைநடுவில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
தற்போதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரசியல் தீர்வைக் காண்பதற்கான நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது. ஆனால், அரசாங்கமானது இந்த முயற்சியை மேற்கொள்ளாது அதனை பிற்போடுவதானது அரசியல் தீர்வுக்கான முயற்சியை மழுங்கடிப்பதாகவே அமையப்போகின்றது.
எந்தவொரு அரசாங்கமும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் செயற்றிட்டங்களை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு குறுகிய காலத்துக்குள் செயற்றிட்டங்களை மேற்கொண்டால் அதற்கு பாரியளவில் எதிர்ப்புகள் ஏற்படாது. காலம் பிந்தப் பிந்த எதிர்புகள் அதிகரிப்பதாகவே அமையும். இதுதான் கடந்த கால வரலாற்றுப் பாடமாக அமைந்திருக்கின்றது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டுமானால் அரசியல் தீர்வுக்கான முன்முயற்சிகளை உடனடியாகவே ஆரம்பிக்கவேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியமைப்புக்கான முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடரவேண்டும். இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக்கட்சிகள் உட்பட சகல கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு செயயற்பட்டால் அரசியல் தீர்வு சாத்தியமாகும். இல்லையேல்அது வெறும் கானல் நீராகவே மாறும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM