பெப்ரவரி 5 ஆம் திகதியன்று நடைபெற்ற புது டில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி 50 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை கைப்பற்றுகிறது.
70 தொகுதிகள் கொண்ட புது டில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் திகதியன்று பொது தேர்தல் நடைபெற்றது. அறுபது சதவீதத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நடைபெற்றது என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது.
பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சிக்கும், தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னிலை நிலவரங்கள் தொடர்ந்து வெளியான பிறகு ஆம் ஆத்மி கட்சியை விட பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 36 இடங்களுக்கு மேலாக பாஜக முன்னணி பெற்றது. மதியம் மூன்று மணி அளவிலான நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி 50 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வமான தகவலின் அடிப்படையில் மதியம் மூன்று மணி வரையிலான நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்தக் கட்சி 25 இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. அத்துடன் ஆம் ஆத்மி கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 12 இடங்களில் முன்னிலை வகித்து வருவதாகவும் உத்தியோகபூர்வமாக தெரிவித்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புது டில்லி சட்டப்பேரவைக்கு போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி அடைந்திருக்கிறார். அவரை எதிர்த்து புது டில்லியின் முன்னாள் முதல்வரான பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த சாகிப் சிங் வர்மாவின் புதல்வரான பர்வேஷ் சிங் வர்மா போட்டியிட்டார். புது டில்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை சந்தித்து இருப்பதால் அக்கட்சியினர் மட்டும் இல்லாமல் இந்தியா கூட்டணியைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் முழக்கமான 'மோடியின் உத்திரவாதம்' நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற்றது போல் புது டில்லி சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றியை பெற்றிருக்கிறது என அக்கட்சியினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக புது டில்லி மாநில பாரதிய ஜனதா கட்சி எக்ஸ் தளத்தின் பதிவிட்டிருப்பதாவது,
''டில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி மோடிஜியின் உத்தரவாதத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலித்திருக்கிறது.
வெற்றிகரமான பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி என்பதை டெல்லி மக்கள் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். மோடியின் உத்தரவாதம் என்பது நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான உத்திரவாதமாகும்.
இந்த வெற்றியில் பாஜகவின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான திரு ஜே பி நட்டா, மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆகியோரின் வலுவான பணி பாணியில் பொதுமக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் தெளிவாக தெரிகிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு டில்லி மக்களின் மகத்தான ஆதரவிற்கும், தொண்டர்களின் தனித்துவமான அர்ப்பணிப்பு மற்றும் அயராத கடின உழைப்பிற்கும் சான்றாகும். பாரதிய ஜனதா கட்சிக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த அனைத்து டெல்லி மக்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதனிடையே 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புது டில்லியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி இருப்பதால் அக்கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாகமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
''வளர்ச்சி வெல்லும்! நல்லாட்சி வெல்லும்! சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி அளித்த டில்லி மக்களுக்கு தலைவணங்குகிறேன். டில்லியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பாஜக அரசு உறுதி செய்யும். தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாஜகவினர் மேலும் தீவிரமாக உழைத்து டில்லி மக்களுக்காக சேவை செய்வோம்'' என குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்தல் தோல்வி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
''மக்களின் முடிவை ஏற்கிறேன். தேர்தல் தோல்வியை ஏற்கிறேன். பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறேன்'' என பதிவிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM