(ஸ்டெப்னி கொட்பிறி)
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற 26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2023/24 நிதியாண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக ஜனாதிபதியினால் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நாம் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்தாலும், மீண்டும் எழுச்சியடைவதற்கு முயற்சிப்போம். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும்.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கான அத்திவாரமாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. எனவே, இலங்கையின் ஏற்றுமதித் துறையை மேலும் வலுவூட்டி உலகளாவிய சந்தையில் சிறந்த இடத்தை பிடிப்பதற்கு நாம் ஒரு கூட்டாக முயற்சி செய்வோம்.
எதிர்காலத்தில் “ made in srilanka” என்ற தரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம். நம்பிக்கையை இழக்காமல் ஒற்றுமையாக செயற்பட்டால் மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும். இலங்கையின் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கு பல்வேறு உத்திகள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து தொழில்துறைகளிலும் உள்ள புதிய மற்றும் பழைமையான பொருட்களை உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்த அரசாங்கம் ஆதரவளிக்கும். கைத்தொழில் துறையில் மேலும் தனித்து நிற்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம். இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் பங்களிப்புடன் இதனை நாம் முன்னெடுப்போம்.
எனவே, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதித் துறையை அபிவிருத்தி செய்து மீண்டும் எழுச்சி பெற அனைத்து ஏற்றுமதியாளர்களையும் நான் அழைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இது தொடர்பில் தெரிவிக்கையில்,
ஏனைய நாடுகளிலிருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நிலைமையில் நாம் இருக்கின்றோம். எதிர்காலத்தில் இந்த நிலைமை மாற வேண்டும். இலங்கையின் தரம் உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
இலங்கையின் அதிகபட்ச ஏற்றுமதி வருமானத்திற்குப் பங்களிப்பு செய்யும் அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். இலங்கையின் விவசாயத் துறையையும் மேம்படுத்த வேண்டும்.
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நாம் அனைவரும் ஒரு சமூகமாக இணைந்து இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை வலுவூட்டுவோம் என தெரிவித்தார்.
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் ;
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் என்பது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த விருதுகள் 25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
இலங்கையின் ஏற்றுமதி துறை மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பை வழங்கிய இலங்கையின் ஏற்றுமதியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், 2023/24 நிதியாண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர்களை அங்கீகரித்து, 14 விருதுகள் மற்றும் 51 துறைசார்ந்த விருதுகளை உள்ளடக்கிய இரண்டு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
சந்தைப் பல்வகைப்படுத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் , ஏற்றுமதி வளர்ச்சி, அதிகபட்ச ஏற்றுமதி வருமானம், நிறுவனங்களின் சமூக பொறுப்பு ஆகியவற்றிற்கு அதிக பங்களிப்பை வழங்கிய இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்படும்.
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளைப் பெறுபவர்களுக்குக் கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன்போது வழங்கப்பட்ட இலச்சினைகளை, மூன்று வருட காலத்திற்கு சந்தைப்படுத்தல் சாதனமாகப் பயன்படுத்த முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM