கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

07 Feb, 2025 | 07:09 PM
image

மெய்வெளி நாடக குழுவினரின் புதிய நாடகம் 'கனவுத்தேசம்' அரங்கேற இருப்பதாக முகநூல்வழியாக அறிந்திருந்தேன். நாடக ஒத்திகை தொடர்பான துணுக்கு காணொளியை பார்த்ததில் இருந்து எப்படியாவது சென்று பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். அனலைதீவு மக்களின் கலைமாலை நிகழ்விலேயே சாம் பிரதீபனின் நெறியாள்கையில் கனவுத் தேசம் நாடகம் பெப்ரவரி 01ஆம் திகதி சனிக்கிழமை மேடையேற்றப்பட்டது. 

தேசங்களைக் கடந்து புலம்பெயர்தல் என்பது விதியாகிப் போன சூழலில் ஈழத்தமிழ் இனத்தின் கலாசார, சமூக, வாழ்வியல் அடையாள வேர்களைத் தொலைத்துழலும்  அந்தர நிலையில், அரங்கும் நாடகமும் திறந்த உரையாடலுக்கு வழிகாட்டவல்லன  என்பதனை மெய்வெளி அரங்க இயக்கத்தின் கனவுத்தேசம் வெளிப்படுத்தியிருந்தது.

நாடகம் தொடங்குவதற்கு முன்பே,  நடிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே  தூண்டுதலுக்கும் துலங்குதலுக்குமான தயார்ப்படுதலை ஏற்படுத்தியிருந்தார் நாடக நெறியாளர் சாம் பிரதீபன். பார்வையாளர்களின் பார்வையையும், சிந்தனையையும் நாடகத்திற்குள் குவியப்படுத்த;  அரங்கின் திறந்திருந்த கதவுகள் மூடப்பட்டும், ஒளிர்ந்த விளக்குகள் அணைக்கப்பட்டும், நடந்து திரிந்தவர்கள் இருக்கைகளில் அமர்ந்தும் நாடகத்தினை ஆரம்பிப்பதற்காக பார்வையாளர்களையும் அரங்கச்சூழலையும்   சாம் பிரதீபன் நெறிப்படுத்தியிருந்தமை சற்று ஆச்சரியத்தை தந்திருந்தது.

மேடையின்  வலதுபக்கம்  மலைபோன்ற உயரமான ஒன்றின் மேலே சில நாட்டுக் கோடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. இசை மேலெழ இடது பக்கத்தில் இருந்து  சிவப்பு நிற உடைகளுடன் நிலத்தில் இருந்து அரக்கி அரக்கி எட்டு நடிகர்கள்  அந்த உயரமான பகுதியை நோக்கியவாறு வந்தார்கள். எந்த நாடகத்திலும் ஆரம்பத்தை பார்வையின் மேல்நிலைத்தளத்தில் நடிகர்களைப் பார்த்து பழகிய கண்களுக்கு,  நடிகர்கள் கீழ்த் தளநிலையில் மேடைக்குள் நுழைந்ததமை ஆர்வத்தை அதிகப்படுத்தியது. யார் இவர்கள்?  எதைத் தேடி வேகமாக போகிறார்கள் என்ற என் மனக் கேள்விக்கு கனவுத் தேசம் பதில் சொல்லியிருந்தது.  கண்டங்களைக் கடந்துள்ள தேசங்களைப் பற்றி கனவோடு ஓடும் இந்த எண்மர், பரதேசிக் கோலத்தில் வந்த மர்ம மனிதர், கனவுத் தேசத்தில் வாழும் மூவர், தாய்மண்ணில் மூவர் என 15 நடிகர்களுமே முழு நாடகத்தையும் உயிர்போடு நகர்த்திச் சென்றிருந்தார்கள். தற்போதைய தலைமுறையின் வெளிநாடு சென்றால் தான் மோட்சம் என்ற  கனவுலகத்திற்கும் யதார்த்திற்கும் இடையேயான கோட்டை வரைந்து தேசத்தவர்களோடும், தேசம் கடந்தவர்களோடும் பேசுவதை இந்த நாடகம் நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணர்த்தியது. ஈழச்சமூகத்தின் சமகாலச் சிக்கலை  இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய  வசன ஆக்கம், அடிக்கடி ஆழ உணரச்செய்த ' இது எங்கள் சனம் சேர்ந்து இசைக்கின்ற பாடல்' என்னும்  பாடல், நெஞ்சுருக வைக்கும் பாடலுக்கான குரல், காட்சி மாற்றங்களை உணரச்செய்த பொருத்தமான இசை, நொடியேனும் தொய்வில்லாத துடிப்பான நடிப்பு, என ஒரு நல்ல நாடகத்தைப் பார்த்த திருப்தியைத் தந்திருந்தது கனவுத் தேசம்.

ஒவ்வொரு வார்தைகளுமே அநாவசியம் அல்லது அலட்டல் என்று தவிர்த்து விட முடியாத ஆழச்சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்திருந்தமை நாடகப் பிரதியின் நேர்த்தியைக் காட்டி நின்றது. சாதாரண வசனங்கள் போல புரிந்தாலும்  சொற்களின் கட்டமைப்பு சந்தங்களாய் விழுந்தமை நாடக ஆசிரியர் ஒரு கவிஞராகவும் இருப்பதால் அமைந்ததோ என  எண்ணத் தோன்றியது. பா நாடகத்திற்குரிய பண்புகளையும், மோடியான நடிப்பையும்  நவீன நாடக உத்திகளையும் கொண்டதாக நாடகம் நகர்ந்திருந்தது.

இவற்றைக் கடந்து, இளம் நடிகர்கள் பதின்ம வயதினர் என நினைக்கிறேன்; தெளிவான தமிழ் உச்சரிப்போடும்,  பொருள் உணர்ந்த நடிப்பு வெளிப்படுத்தலோடும், உற்சாகமான ஈடுபாட்டோடும், நாடகம் முழுவதுமே பாத்திரங்களின் நிலையை காத்திரமாக வெளிப்படுத்தி இருந்தார்கள். லண்டன் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கதைத்தால் இப்படித்தான் என சமரசம் செய்து கொள்ளத் தேவை ஏற்படாத வகையில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தமை பாராட்டப்பட வேண்டியதே. இவர்கள் தொடர்ச்சியாக மெய்வெளி நாடகப் பயிற்சி பெறும் மாணவர்கள் என்பதனை நாடக முடிவில் தெரிந்து கொண்டேன். சரியான முறையில் அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு  அவர்களின் நடிப்பு சாட்சியம் சொன்னது.

நாடகம் வழங்குதலில் மெய்வெளி அரங்கக்குழுவினர் முழுத் திறனைக் காட்டி இருந்தாலும், மேடையின் அளவும், ஒளியமைப்பும்  திருப்தியை அளிக்கவில்லை.  நடிகர்கள் சுதந்திரமாக நடிப்பதற்கு போதிய இடம் இன்மையும், மேடையில் போதிய ஒளியேற்றமும் இன்றி நடிகர்களின் வெளிப்பாடுகளை துல்லியமாக பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் வீட்டுக்குச்சென்று நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நாடகத்தை மீண்டும் தேடிப்பார்தேன் என்பதனையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். மெய்வெளி நாடக குழுவினருக்கு பாராட்டுதலைத் தெரிவிப்பதோடு நல்ல நாடகத்தை பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனலை மாலை நிகழ்ச்சிக் விழாக் குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்தே ஆக வேண்டும். காலத்தின் தேவை  உணர்ந்த நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தலில்  சமூக அக்கறையை காணமுடிந்தது.

புலம்பெயர் தேசங்களில் கனதியான பாடுபொருளை  எந்த தயக்கமும் இன்றி, கருத்தாழத்தோடு சரியாக நகர்த்தி சமூகத்தின் சிந்தனைப் புலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காத்திரமான  நாடகங்களை சாம் பிரதீபனும் மெய்வெளி குழுவினரும் படைத்து வருவது பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல சகலரும் பார்க்க வேண்டிய காலத்தின் கண்ணாடியும் என்பதனைச் சொல்லக் கட்மைப்பட்டுள்ளேன். மெய்வெளிக் குழுவினரின் அடுத்த நாடகத்திற்கான என் எதிர்பார்பின் ஆர்வத்தை தூண்டி சென்றிருக்கிறது கனவுத்தேசம்.

கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்!

- நாமகன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தில்ஷா - மோஹித்ஷால் சகோதரர்களின் வீணை,...

2025-03-14 16:37:54
news-image

மகத்தில் தேர் ஏறும் மகமாயி  

2025-03-13 11:01:51
news-image

ஓவியர் மாற்கு மாஸ்டர் பற்றி சில...

2025-03-11 12:24:46
news-image

தந்தையின் 10ஆவது ஆண்டு நினைவுநாளில் சமர்ப்பணமான...

2025-03-05 13:37:38
news-image

எனக்கு கர்நாடக இசையை கற்பித்து நல்லிணக்கத்தை...

2025-02-22 11:52:08
news-image

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுமை அம்பாள்...

2025-02-22 11:53:38
news-image

வடக்கில் கலைத்துறையில் சாதித்து வரும் இளைஞன் 

2025-02-21 19:24:07
news-image

“நாட்டிய கலா மந்திர்” நடனக் கலாசாலை...

2025-02-20 14:39:18
news-image

தைப்பூசத் திருநாளில் கமலஹார சித்திரத்தேரில் வலம்...

2025-02-11 10:28:27
news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15