சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அம்லாவின் சதம் மற்றும் தாஹிரின் அதிரடி பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்க அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் நேற்று லண்டன் ஓவலில் நடந்த 3ஆவது லீக்கில் தென்னாபிரிக்கா-இலங்கை (பி பிரிவு) அணிகள் சந்தித்தன. காயத்தால் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆடவில்லை. அவருக்கு பதிலாக உபுல் தரங்க அணியை வழிநடத்தினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் தென்னாபிரிக்காவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இதன்படி ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க வீரர்கள் நிதானமாக ஆடினர்.

தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி கொக் 23 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். எனினும் 14 ஆவது ஓவரில் தான் அந்த அணி 50 ஓட்டங்களை கடந்தது.

2ஆவது விக்கெட்டுக்கு ஹசிம் அம்லாவும், பொப் டு பிளிஸ்சிஸ்சும் இணைந்து வலுவான அடித்தளம் ஏற்படுத்தினர். 

அவசரம் காட்டாமல் ஏதுவான பந்துகளை மட்டுமே இந்த ஜோடி பவுண்டரிக்கு விரட்டியது. பிளிஸ்சிஸ் 8 ஓட்டங்களுடன் இருந்த போது கொடுத்த சுபலமான பிடியெடுப்பு வாய்ப்பை மலிங்க வீணடித்தார்.

அதன் பிறகு 34ஆவது ஓவரில் தான் இந்த கூட்டணியை உடைக்க முடிந்தது. பிளிஸ்சிஸ் 75 ஓட்டங்களுடன் (70 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் (4 ஓட்டங்கள்) வந்த வேகத்தில் அரங்கு திரும்பினார்.

அம்லா சதம்

மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்லா தனது 25ஆவது சதத்தை நிறைவு செய்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் (103 ஓட்டங்கள் , 115 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். 

இதன் பின்னர் ஓட்ட எண்ணிக்கை  சற்று தளர்ந்தாலும், இறுதி கட்டத்தில் டுமினி ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களை குவித்தது. 

டுமினி 38 ஓட்டங்களுடன் (20 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். 

இலங்கை தரப்பில் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

2 ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பிய மலிங்கவின் பந்து வீச்சில் எந்த தாக்கமும் இல்லை. 10 ஓவர்களில் 57 ஓட்டங்களை வழங்கினாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.

இலங்கை தோல்வி

அடுத்து 300 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி அதிரடியான தொடக்கம் கண்டது. 10 ஓவர்களில் 87 ஓட்டங்களை கடந்தது.

 ஆனால் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் வருகைக்கு பிறகு இலங்கை அணி தடுமாறிப்போனது. அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டம் தென்னாபிரிக்கா பக்கம் திரும்ப வழிவகுத்தார்.

41.3 ஓவர்களுக்கு இலங்கை சகல விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. அணியில் உபுல் தரங்க 57 ஓட்டங்கiயும், குசல் ஜனித் பெரேரா 44 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற்றனர்.

போட்டியின் ஆட்டநாயகனா இம்ரான் தாஹிர் தெரிவு செய்யப்பட்டார்.