(டேனியல் மேரி)
மாணவர்கள் விளையாட்டுக்களில் பங்குகொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில், எந்த வகை விளையாட்டை எடுத்துக் கொண்டாலும், அது கூட்டுச் செயற்பாடு, நேர்மை, உறுதி, ஒழுக்கம் போன்ற வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்பிக்கும். இவை நாம் முன்னோக்கிச் செல்ல துணையாக இருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்தார்.
கொழும்பு - கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் கல்வி கற்று, தற்போது இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு கல்லூரி சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப்பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (7) காலை 8 மணியளவில் கொழும்பு - கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் நடைபெற்றது.
முதன்மை நிகழ்வாக இராணுவத் தளபதியினால் தேசியக் கொடி மற்றும் பாடசாலை கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றல், செப வழிபாடுகளுடன் பாராட்டு விழா ஆரம்பமானது.
அதனையடுத்து, புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரர் கலாநிதி புபுது இராஜபக்ஷவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
அடுத்ததாக, 89ஆம் ஆண்டில் உயர்கல்வி கற்ற மாணவக் குழுவின் பிரதித் தலைவரும் கல்லூரி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினருமான ஸ்ரீயால் டி சில்வாவினால் நினைவுக் காணொளியொன்றும் காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை இராணுவத்தின் பிரதானி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார உரையாற்றுகையில்,
“புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் இருந்து இதுவரையில் 6 மாணவர்கள் இராணுவ அதிகாரிகளாக கடமையாற்றியுள்ளனர். எந்த பாடசாலையும் படைக்காத சாதனையை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி படைத்துள்ளது. எங்கள் பாடசாலை சாதனையை ஏனைய பாடசாலைகளால் முறியடிக்க முடியாது என சவால் விடுக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர், கல்லூரியின் சிரேஷ்ட மாணவத் தலைவரால் பாடசாலையின் புகழ் குறித்தும், தங்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு குறித்தும் உரை நிகழ்த்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, உரையாற்றிய பாராட்டு விழா நாயகனும் இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ,
எனக்கு இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி. எனது நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். நாங்கள் இந்த இடத்தை அடைந்த பாதை மிகவும் கடினமானது. முதலில், எனது தோள் மீது நம்பிக்கையை வைத்து எனக்கு இந்த பொறுப்பை கொடுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் இந்த பாடசாலைக்கு வரும்போது பொறுப்பில்லாத விளையாட்டுப் பையனாகத் தான் இருந்தேன். ஆனால், இப்போது இலங்கை இராணுவப்படையின் தளபதியாக இருக்கிறேன்.
மேலும், எனது ஆசிரியர்கள், சிரேஷ்ட, கனிஷ்ட மாணவர்களான நீங்கள், எனக்கு வகுப்பறையில் பாடங்களை மாத்திரம் கற்பிக்கவில்லை. வாழ்க்கையின் பாடங்களையும் கற்பித்துள்ளீர்கள். அதனாலேயே என்னால் முன்னோக்கி பயணிக்க முடிந்தது. கல்லூரியில் தலைமைத்துவ பொறுப்புக்களை வழங்கிய அருட்சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
மேலும், மாணவர்கள் விளையாட்டுக்களில் பங்குகொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில், எந்த வகை விளையாட்டை எடுத்துக்கொண்டாலும், அது கூட்டுச் செயற்பாடு, நேர்மை, உறுதி, ஒழுக்கம் போன்ற வாழ்க்கைக்கு தேவையானவற்றை கற்பிக்கிறது. இவை நாம் முன்னோக்கிச் செல்ல துணையாக இருக்கும்.
மாணவர்களே! சிக்கல்கள் உங்களைத் தொந்தரவு செய்யும் வரை ஒருபோதும் பிரச்சினையில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், நீங்கள் பிரச்சினைகளில் ஈடுபடும்போது உங்கள் பிரச்சினையை நீங்கள் இரட்டிப்பாக்குகிறீர்கள் என இலங்கை இராணுவத் தளபதி மாணவர்களுக்கு தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்ப கட்டடத்துக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி செய்வதாகவும் தனது உரையின்போது அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவின்போது, கல்லூரி மாணவர்களால் கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன், இராணுவத் தளபதிக்கும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கும் கல்லூரி நிர்வாகத்தால் கௌரவிப்பளிக்கப்பட்டது. இதன் நினைவாக கல்லூரி வளாகத்தில் இராணுவத் தளபதியால் மரக்கன்றும் நடப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்சகோதரர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM