சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்கள முன்றலில் கவனயீர்ப்புப்போராட்டம் ; எதேச்சதிகாரப்போக்கிலான ஆட்சிமுறையின் ஆரம்பம் எனவும் கோஷம்

Published By: Vishnu

07 Feb, 2025 | 03:59 AM
image

(நா.தனுஜா)

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுவிப்பதற்குப் பரிந்துரை செய்திருக்கும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக வியாழக்கிழமை (6) நடைபெற்ற கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தினால் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உடலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கமுடியும் என சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் செய்யப்பட்டிருக்கும் சிபாரிசு தொடர்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

அதன்படி சட்டமா அதிபரின் இந்நகர்வு தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியும், அவரைப் பதவி விலகுமாறு கோரியும் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள வளாகத்துக்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் இளம் ஊடவியலாளர் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன உள்ளடங்கலாக அச்சங்கத்தின் பிரதிநிதிகள், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா உள்ளடங்கலாக அவ்வமைப்பின் பிரதிநிதிகள், லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்ரமதுங்க, ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் 'சட்டமா அதிபரே, வீட்டுக்குச்செல்லுங்கள்', 'லசந்தவுக்கு நீதி', 'கொலை செய்யப்பட்ட மஹர சிறைக்கைதிகளுக்கு நீதி வழங்கு', 'நீதியுடன் விளையாடும் சட்டமா அதிபர்', 'சட்டமா அதிபர் மாத்திரமா பொறுப்புக்கூறவேண்டும்? ஜனாதிபதி பொறுப்புக்கூறத்தேவையில்லையா?', 'முறையின்றி செயற்படும் சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்', 'சிறைச்சாலை படுகொலையாளிகளுக்கு உயிர் கொடுத்த சட்டமா அதிபர் எமக்கு வேண்டாம்' என்பன உள்ளடங்கலாக சட்டமா அதிபர் தொடர்பில் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், நீதித்துறை சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளமையைப் பிரதிபலிக்கக்கூடிய கேலிச்சித்திரங்களையும் ஏந்தியிருந்தனர்.

 அதன்படி இக்கவனயீர்ப்புப்போராட்டத்தின் நோக்கம் குறித்துத் தெளிவுபடுத்திய இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் எம்.எப்.எம்.பஸீர், 'சட்டமா அதிபரால் விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட மூவருக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் உள்ளன. குறிப்பாக நீதிவானிடம் அளிக்கப்பட்ட இரண்டு ஒப்புதல் வாக்குமூலங்கள் உள்ளன.

எத்தனையோ அரசியல்கைதிகளுக்கு எதிராக ஒரேயொரு ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் வைத்து சட்டமா அதிபரால் மேல்நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு எதிராக சாட்சிகள் இருப்பதாக சட்டமா அதிபரால் கூறப்பட்ட நிலையில், தற்போது சாட்சிகள் இல்லை எனக்கூறுவது சட்டமா அதிபரின் நடவடிக்கை தொடர்பில் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

லசந்த படுகொலை வழக்கு, மஹர சிறைச்சாலை படுகொலை வழக்கு உள்ளிட்டவற்றில் சட்டமா அதிபர் தொடர்ந்து இவ்வாறு தான் செயற்பட்டுவருகிறார். இவ்வாறானதொரு பின்னணியில் வலுவான மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் தற்போதைய அரசாங்கம், அந்த ஆணைக்கு மதிப்பளித்து, சட்டமா அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்' என்றார்.

அதேவேளை சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான ஸ்ரீநாத் பெரேரா, தற்போது லசந்த விக்ரதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுவிப்பதற்கு சிபாரிசு செய்திருக்கும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, முன்னர் மஹர சிறைச்சாலையில் 11 பேர் கொல்லப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கடிதம் அனுப்பியிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

'இச்சம்பவங்களில் சட்டமா அதிபர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் மிகப்பாரதூரமானது என்பதுடன், அதற்கு அரசியல் ரீதியான கோணமொன்றும் உள்ளது. அவ்வாறிருக்கையில் இத்தகைய கடிதமொன்றை சட்டமா அதிபர் எதற்காக அனுப்பினார்? அவர் ஏதேனும் அரசியல் அழுத்தங்களால் அவ்வாறு செய்தாரா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எம்மத்தியில் எழுந்துள்ளன' எனக் குறிப்பிட்ட ஸ்ரீநாத் பெரேரா, இவ்வாறான செயற்பாடுகள் முடிவுக்குக்கொண்டுவரப்படும் வரை தாம் தொடர்ந்து போராடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று சட்டமா அதிபரின் நடவடிக்கையானது மக்களின் உரிமைகளைப் புறக்கணித்து, புதியதொரு எதேச்சதிகாரப்போக்கிலான ஆட்சியை நிறுவுவதற்கான ஆரம்பமாக அமைந்திருப்பதாகக் கரிசனை வெளியிட்ட சட்டத்தரணி தம்பையா ஜெயரட்ணராஜா, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழியிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பயணிப்பாராயின் வெகுவிரைவில் அவரும் ஆட்சியிழக்கவேண்டிய நிலையே ஏற்படும் என எச்சரித்தார். 

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்ரமதுங்க, செய்திகள் வாயிலாக மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்குத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தினார். 

அதனைத்தொடர்ந்து கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டமா அதிபரிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட வேளையில், பொலிஸார் அவர்களைத் தடுத்துநிறுத்தினர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையில் சொற்ப நேரம் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை அடுத்து, போராட்டக்காரர்கள் சார்பில் ஐவர் மாத்திரம் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் போராட்டக்காரர்களைச் சந்திப்பதற்கு சட்டமா அதிபர் விரும்பாத நிலையில், குறித்த மகஜர் அரச சட்டவாதி கனிஷ்க ராஜகருணாவிடம் கையளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12
news-image

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரிப்பதே தேசிய மக்கள்...

2025-03-18 17:28:27
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம் : பொது...

2025-03-18 17:24:12
news-image

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன...

2025-03-18 19:22:34