(நா.தனுஜா)
நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கான கருத்தடைக்கு முன்னரான தடுப்பூசி வழங்கலின் ஊடாக விசர்நாய்க்கடி நோயினால் (ரேபிஸ்) மனிதர்கள் மத்தியில் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கணிசமானளவினால் வீழ்ச்சியடைந்திருப்பதாக விலங்குகள் நலன் கூட்டிணைவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி சமித் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
விசர்நாய்க்கடி மற்றும் தெருநாய்க்கடி போன்றவற்றால் பெரும் எண்ணிக்கையானோர் பாதிக்கப்படுவதாகக் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுவரும் பின்னணியில், இதன் உண்மைத்தன்மை குறித்துத் தெளிவுபடுத்தியிருக்கும் சமித் நாணயக்கார,
'அண்மையில் நாய்க்கடியின் விளைவாக 6500 பேர் பதுளை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தியொன்று வெளியாகியிருந்தது. இருப்பினும் இவ்வாறான சம்பவங்களில் 90 சதவீதமானவை வீட்டில் வளர்க்கப்படும் நாய்களினாலேயே இடம்பெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெருநாய்களால் தாம் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதாகவும், எனவே இவ்விடயத்துக்கு மாவட்ட மட்டத்திலேயே தீர்வுகாணவிருப்பதாகவும் குறித்தவொரு மாவட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையினால் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரியவாறு ஆராயாமல், பொருத்தமற்ற உடனடித் தீர்மானங்களை எடுத்துவிடுவார்களோ என்றும், அதன்விளைவாகப் பெரும் பாதிப்பு ஏற்படுமோ என்றும் நாம் அஞ்சுகிறோம்.
2007 ஆம் ஆண்டு நாய்க்கடியினால் 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இருப்பினும் 2024 இல் நாய்க்கடியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆகக் குறைவடைந்திருக்கிறது.
அதேவேளை நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிடுவதாகவும் செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. ஆனால் உண்மையில் 2007 ஆம் ஆண்டிலும், 2024 ஆம் ஆண்டிலும் அதற்கு ஏற்பட்டிருக்கும் செலவு 600 மில்லியன் ரூபா மாத்திரமேயாகும்.
ஆனால் அக்காலப்பகுதியில் 150 ரூபாவாக இருந்த டொலர் ஒன்றின் பெறுமதி இப்போது 300 ரூபா வரை உயர்வடைந்திருக்கிறது. மருந்துப்பொருட்களின் விலைகள் முன்னரை விடவும் இரு மடங்கினால் அதிகரித்திருக்கின்றன. தற்போதைய தரவுகளின் பிரகாரம் 60 சதவீதமான நாய்களுக்குக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், 80 சதவீதமான நாய்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் எமது சகல முயற்சிகளையும் பயனற்றுப்போகச்செய்யும் விதமாக சமூகப்பொறுப்பற்ற பலர் தாம் வீட்டில் வளர்க்கும் நாய்களைத் தெருவில் விட்டுச்செல்கிறார்கள். எனவே தற்போது நடைமுறையிலிருக்கும் ரேபிஸ் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதன் ஊடாகவும், விலங்குகள் நலன்பேண் சட்டமூலத்தின் ஊடாகவுமே தீவிர கரிசனைக்குரிய இந்நெருக்கடிக்கு உரியவாறு தீர்வுகாணமுடியும்' எனவும் கலாநிதி சமித் நாயணக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விசர்நாய்க்கடி நோய் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறு எட்டப்படாமைக்கு போதிய எண்ணிக்கையான மிருக வைத்தியர்கள் இன்மையே பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள விலங்கு நல செயற்பாட்டாளர் சம்பா பெர்னாண்டோ, ஆகவே இச்செயற்திட்டம் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM