சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பது சிறப்பு வாய்ந்தது - திமுத் கருணாரட்ன

Published By: Vishnu

05 Feb, 2025 | 08:26 PM
image

(நெவில் அன்தனி)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்ற காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் 100ஆவது டெஸ்டைப் பூர்த்திசெய்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளது சிறப்புவாய்ந்தது எனவும் ஓய்வுக்குப் பின்னர் பயிற்றுநராக செயற்படவுள்ளதாகவும் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் திமுத் கருணரட்ன தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுக்கவுள்ளதாக 36 வயதான திமுத் கருணாரட்ன உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்தார்.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று பகல் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுடனான சந்திபின்போது அவர் இதனை வெளியிட்டார்.

காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது திமுத் கருணாட்னவின் 100ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகவும் அமைவது சிறப்பம்சமாகும்.

'டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அறிமுகமான அதே காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எனக்கு விடைகொடுக்கும் அரங்காக அமையவுள்ளது சிறப்பான ஒரு விடயமாகும். அது மட்டுமல்லாமல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எனது 100ஆவது டெஸ்ட் பொட்டியாகும். எனவே 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் குவித்து விடைபெறவேண்டும் என விரும்புகிறேன்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஓய்வுக்குப் பின்னர் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என வினவியபோது,

'எனக்கென்று சில தனிப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. ஓய்வுக்குப் பின்னர் பயிற்றுநராக வரவேண்டும் என்பதே எனது விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும். எனவே, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும்   நான் அவுஸ்திரேலியா சென்று அங்கு பயிற்றுநர்களுக்கான இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பாடநெறிகளை பின்பற்றவுள்ளேன். இந்தப் பாடநெறிகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளேன். சில வேளைகளில் வெளிநாட்டில் வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்று பயிற்சி அளிப்பேன்' என திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.

'காலியில் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் நான் ஓய்வுபெறவுள்ளேன் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்திருந்தேன். அத்துடன் மூத்த வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்தேன்' என்றார் அவர்.

'மூத்த வீரர்களான நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் ஓய்வுபெறாமல் தனித்தனியாக (வெவ்வேறு நேரங்களில்) ஓய்வு பெறுவதே அணிக்கு சிறந்தது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். உண்மையில் நாங்கள் இந்த வருடம் ஆரம்பமாகவுள்ள 2025 - 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர்வரை விளையாட எண்ணியிருந்தேம். ஆனால், இந்த டெஸ்டுடன் நான் ஓய்வு பெற தீர்மானித்தேன்' என திமுத் கருணாரட்ன மேலும் குறிப்பிட்டார்.

தற்போதைய ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023-25 நிறைவு பெற்றதும் ஓய்வுபெற உள்ளதாக திமுத் கருணாரட்ன ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி பருவத்தில் விளையாடுவதற்கு மூன்று அல்லது நான்கு இளம் வீரர்கள் வரிசையில் தயாராக இருக்கின்றனர். எனவே திறமைசாளிகளான அவர்களுக்கு இலங்கை அணியில் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்' எனவும் ஊடகவியலாளர்களிடம் திமுத் கருணாரட்ன கூறினார்.

தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற அதிசிறந்த சதங்கள் குறித்து அவர் நினைவுகூர்ந்தார்.

'நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச்சில் (2014) நான் பெற்ற முதலாவது டெஸ்ட் சதம் (152 ஓட்டங்கள்), இந்தியாவுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் (2017) பெற்ற சதம் (141 ஓட்டங்கள்), மீண்டும் இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் (2022) பெற்ற சதம் (107 ஓட்டங்கள்) ஆகியவை எனது மிகச் சிறந்த சதங்களாக கருதுகிறேன்' என்றார் அவர்.

சனத் ஜயசூரிய (110 டெஸ்ட்கள்), முத்தையா முரளிதரன் (132), சமிந்த வாஸ் (111), குமார் சங்கக்கார (134), மஹேல ஜயவர்தன (149), ஏஞ்சலோ மெத்யூஸ் (117) ஆகியோரைத் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிளைப் பூர்த்திசெய்யவுள்ள 7ஆவது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் திமுத் கருணாரட்ன ஆவார்.

நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2012இல் நடைபெற்ற போட்டியில் விளையாடியதன் மூலம் டெஸ்ட் அறிமுகம் பெற்ற திமுத் கருணாரட்னவுக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

பதில் வீரராக அணிக்கு அழைக்கப்பட்ட திமுத், முதல் இன்னிங்ஸில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். ஆனால், மூத்தவர்களின் ஆலோசனைகள், ஊக்கப்படுத்தல்களின் உதவியுடன் 2ஆவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்தார்.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள திமுத் கருணாரட்ன 30 போட்டிகளில் அணித் தலைவராக விளையாடியிருந்தார்.

அவரது தலைமையில் இலங்கை 12 வெற்றிகளை ஈட்டியதுடன் 12 தோல்விகளைத் தழுவியது. 6 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக (2 - 0) கைபற்றியது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கிடைத்த மகத்தான வெற்றியாக கருதுவதாக அவர் ஒரு சமயம் குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00