விலை உறுதிப்பாடு என்பது பொருளாதாரமொன்றில் விலை மட்டங்கள் பொதுவாக பாரிய மற்றும் அடிக்கடியான மாற்றங்களைப் பதிவுசெய்யாததொரு நிலைமையாகும். வேறு வார்த்தையில் கூறுவதாயின், பணவீக்கம் தொடர்ந்தும் நிலையாகவும் ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான மட்டத்திலும் காணப்படுகின்ற நிலைமையொன்றாகும்.
விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதானது நீடித்துநிலைத்திருக்கும் வளர்ச்சிக்கும் பொருளாதார சுபீட்சத்திற்குமான முன்தேவைப்பாடொன்றாகுமெனப் பொருளியலாளர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றனர். இவ்வனுமானத்திற்குப் பின்னாலுள்ள நியாயப்படுத்தலை அறிந்துகொள்வது முக்கியமாகும். விலை உறுதிப்பாடானது வெறுமனே பணவீக்கமின்மை அல்லது பணவீக்கத்தின் தாழ்ந்தளவிலான மட்டத்தினைக் குறிப்பதில்லை.
பணவீக்கமானது அதிகளவு வேறுபடாமலும் தொடர்ந்தும் கணிக்கத்தக்கதாகவுமிருந்து, சிறந்த திட்டமிடலிற்கு வசதியளிக்கின்ற நிலைமையொன்றினையே இது குறிக்கின்றது. பொதுவாக, உயர்ந்தளவிலான பணவீக்க மட்டங்களில் உயர்ந்தளவிலான விலை உறுதிப்பாடின்மையொன்றினைப் பொதுவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கும். விலைகள் மிகவும் தளம்பல் மிக்கவையாகக் காணப்படுகின்றன எனக் கருதலாம். அவ்வாறாயின், வியாபாரங்கள் செலவு மாறுபடும்தன்மையினைக் கருத்திற்கொள்வதற்கு அதிகளவிலான தொகைகளைச் சேர்க்க வேண்டித் தேவைப்படலாமென்பதனால் உகந்த விலையிடலுடன் அவற்றின் தீர்மானங்களை திட்டமிட முடியாதென்பதுடன் இது தாழ்ந்தளவிலான கேள்வியினைத் தோற்றுவித்து, உயர்ந்தளவிலான வியாபார முறிவடைதல்களுக்கும் தொழிலின்மைக்கும் வழிவகுக்கக்கூடும்.
குடியிருப்பாளர்கள் செலவிடத்தக்க வருமானத்தின் அதிகளவிலான பாகத்தினை அத்தியாவசியப் பொருட்களுக்கு ஒதுக்கவேண்டியிருப்பதனால் அவர்களால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறைவானதாயமையுமென்பதுடன் விலைகளின் அதிகரிப்புக்கள் மற்றும் தளம்பலின் காரணமாகத் தேவைப்படுகின்ற வருவாய்கள் உயர்ந்தளவிலானதாயிருக்க வேண்டும். மேலும், திரிபடைந்த சந்தை சமிக்ஞைகள் காரணமாக மூலவளங்களை ஒதுக்கீடு செய்தல் வினைத்திறனற்றதாக அமையலாம்.
மேலும், ஏழ்மையிலுள்ளவர்களும் நிலையான வருமானம் ஈட்டுவோரும் தமது கொள்வனவு சக்தியில் பாரியளவிலான வீழ்ச்சியொன்றினை எதிர்கொள்வதனால் சமூக – பொருளாதார சமத்துவம் சீர்குலையும். அரசாங்கத்தினால் இச்சமூக ஏற்றத்தாழ்வுக்குத் தீர்வளிப்பது கடினமானதாக அமையலாம். ஏனெனில் விலைத் தளம்பலானது மிகவும் தேவைப்படும் தரப்பினரை இலக்கிடுவதனைக் கடினமாக்கி, உதவிகளின் செயற்றிறன் வாய்ந்த தன்மையினைக் குறைத்து, ஊழலுக்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கின்றது.
விலை உறுதிப்பாடின்மை சர்வதேச போட்டித் தன்மையை இழத்தல், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக்கான அச்சுறுத்தல் போன்ற பல மேலதிக பக்கங்களிலிருந்தும் பொருளாதாரத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடும். பொருளாதார சுபீட்சத்தினை அடைவது விலையுறுதிப்பாடின்றி சாத்தியமற்றது என்பதை இவ்வாறான பல்வேறு வாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
பொதுவாக விலை உறுதிப்பாட்டினைப் பேணுகின்ற பொறுப்பு பணவீக்கத்தைச் சாத்தியமானளவு குறைவான மட்டங்களில் வைத்திருக்க விரும்புகின்ற மத்திய வங்கிகள் மீது பொறுப்புச் சாட்டப்படுகின்றது. இவை எதேச்சையான பணச்சுருக்கத்தின் தொடர்ச்சியினைத் தடுப்பதற்கான வசதியினை வழங்குகின்றன. பல அபிவிருத்தியடைந்த நாடுகள் சுயாதீனமான மத்திய வங்கியினைக் கொண்டிருந்து, நீண்டகால பொருளதார இலக்குகள் மீது கவனச் செலுத்துவதற்கு அவற்றைச் இயலச்செய்துள்ளன. அத்துடன் விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதில் இது முக்கிய காரணியொன்றாக இருந்துவருகின்றது. எனினும், அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளில் மத்திய வங்கிகளின் சுயாதீனம் குறிப்பிடத்தக்களவு மாறுபடலாம்.
எது எவ்வாறிருப்பினும் அண்மைய ஆண்டுகளில் அநேகமாக அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகள் நீண்டகால பொருளாதார இலக்குகளை ஊக்குவிக்கும் பொருட்டு சுயாதீனமான மத்திய வங்கிகளைத் தாபித்துள்ளன. மேலும், பிரதானமாக ஒட்டுமொத்த பணவீக்கத்தினைத் தீர்மானிப்பதற்கு நிருவாக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட விலைகள் முக்கியமானதாக காணப்படுகின்றபோது நாணய மற்றும் அரசிறைக்கொள்கை என்பவற்றுக்கிடையிலான ஆரோக்கியமான ஒருங்கிணைப்பானது மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றன.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில், நுகர்வோர் கூடையில் உணவு மற்றும் வலுவுடன் தொடர்புடைய பொருட்களின் பாரியளவிலான பங்கின் காரணமாக விலை உறுதிப்பாட்டினை அடைதல் சவால்மிக்கதாகக் காணப்படுகின்றது. இதன் விளைவாக அந்நாடுகளின் பணவீக்கம் வழங்கல் தொடர்புபட்ட முட்டுக்கட்டைகள் மற்றும் உலகளாவிய பண்ட அதிர்வுகள் என்பவற்றுக்கு அவ்வப்போது உட்படக்கூடியதாகக் காணப்படுகின்றன. மேலும், இந்நாடுகளில் விலை உறுதிப்பாட்டினை எய்துவது என்பது நாணயக் கொள்கையின் வினைத்திறனை மட்டுப்படுத்துகின்ற நிதியியல் துறையின் மட்டுப்படுத்தப்பட்ட விரிவாக்கத்தின் வடிவத்தில் ஒரு சில சந்தைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பாரிய தனியுரிமைச் சக்திக்கு வழிவகுக்கின்ற குறைவான போட்டிமிக்க சந்தைகள்; பணவீக்க எதிர்பார்க்கையினை நிலைநிறுத்துவதைத் தீவிரமாகப் பாதிக்கின்ற நீண்டகால நிறுவனசார் பலவீனங்கள் என்பன மூலம் மேலும் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றன.
உயர்வான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய வங்கிகளின் முயற்சிகள் பொருளாதாரத்தை ஓரளவிற்குச் சுருங்கச் செய்வதனைத் தேவைப்படுத்துவதனால் அவற்றின் நடவடிக்கைகள் உறுதிப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் இடையிலான விட்டுக்கொடுப்பொன்றை உள்ளார்ந்தமாகக் கொண்டிருக்கின்றன.
வெறுமனே நாணயக் கொள்கை மாத்திரம் நீண்டகால பொருளாதார வளர்ச்சியினை விளைவிக்காத அதேவேளை விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதென்பது அதிகரித்த நீண்டகால முதலீடுகள், கொள்வனவுச் சக்தியினைப் பாதுகாத்தல், வலிமைப்படுத்தப்பட்ட நிதியியல் உறுதிப்பாடு என்பன ஊடாக நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இதன் பயனாக, நிலைபெறத்தக்க வளர்ச்சிக்கான முன்தேவைப்பாடுகளாக விளங்குகின்ற மூலதனம் கட்டியெழுப்பப்படுவதற்கும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்குமான சந்தர்ப்பம் உருவாக்கப்படுகின்றது. ஆகையினால் பணவீக்கத்தினை நிலைநிறுத்துவதற்கு குறுகிய காலத்திற்கு வளர்ச்சியினை விட்டுக்கொடுப்பதன் மூலம் மத்திய வங்கி நடவடிக்கைகள் நீண்டகால பொருளாதார சுபீட்சத்தினை ஊக்குவித்து இதன் ஊடாக சமூக நலனோம்புகையை மேம்படச் செய்கின்றன.
இலங்கையில் உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினை அடைந்து பேணும் கடப்பாடு இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகும். 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம் இயற்றப்பட்டதுடன் அதிகரித்த பகிரங்கப் பொறுப்புக்கூறலுடன் தொழிற்பாட்டுச் சுயாதீனத்தன்மை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. பணவீக்க இலக்கினைக் குறிப்பிட்டு நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையில் கைசாத்திடப்படும் நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையின் வாயிலாக மத்திய வங்கி அடையவேண்டிய கடமைப்பொறுப்பு அரசாங்கத்துடனான ஒப்பந்தமொன்றில் நிர்ணயிக்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கிச் சட்டம் மத்திய வங்கியின் சுயதீனத்தினை மேம்படுத்துவது மாத்திரமின்றி அதன் பகிரங்க பொறுப்புக்கூறலையும் வெளிப்படைத் தன்மையையும் அதிகரித்து வலிமையானதும் இணங்கக்கூடியதும் நெகிழ்வுமிக்கதுமான நிறுவனம் ஒன்றுக்கான வழியையும் அமைக்கின்றது. பொருளாதாரத்திற்கான 2024க்கான நோபல் பரிசை வென்றெடுத்த Daron Acemoglu, Simon Johnson மற்றும் James A. Robinson போன்ற புகழ்பெற்ற பல புத்திஜீவிகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஒரு தேசத்தின் வெற்றிக்கு வலிமையான நிறுவனங்களே முக்கியமாக பங்களிக்கின்றன. அதற்கமைய இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தை இயற்றியமை இலங்கையின் பொருளாதார வரலாற்றில் இன்றியமையாத மைல்கல்லொன்றாகும்.
விலை உறுதிப்பாடானது நிலையான வளர்ச்சியையும் பொருளாதாரச் சுபீட்சத்தையும் வசதிப்படுத்துவது போன்று விலை உறுதிப்பாடின்மை சமூக - அரசியல் குழப்பங்களுடன் இணைக்கப்படுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கக்கூடும். இலங்கை 2022 பொருளாதார நெருக்கடியின் போது இத்தகைய எதிர்விளைவுகளை நேரடியாக அனுபவித்தது. பல்வேறு நாடுகளினதும் பொருளாதார வரலாறுகளை நோக்கும்போது இன்னும் தீவிரமான பல நிகழ்வுகளின் உதாரணங்களைக் காணலாம். எனவே விலை உறுதிப்பாட்டினைப் பேணுவது பொருளாதார நல்வாழ்வுக்கு மாத்திரமின்றி ஆரோக்கிமான சமூக-அரசியல் சூழலுக்கும் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும். அதற்கமைய விலை உறுதிப்பாடு என்பது ஆரோக்கியமான பொருளாதாரமொன்றுக்கு மிகவும் அத்தியவாசியமாக விளங்குகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM