சோனியா அகர்வால் நடிக்கும் 'வில் (WILL) ' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 7

05 Feb, 2025 | 05:25 PM
image

வண்ணத்திரை -சின்னத்திரை -டிஜிட்டல் திரை -என மூன்று திரை ரசிகர்களிடத்திலும் பிரபலமான நட்சத்திர நடிகை சோனியா அகர்வால் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வில்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'டெஸ்லா ' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வில் ' எனும் திரைப்படத்தில் சோனியா அகர்வால்  கதையை வழி நடத்தி செல்லும்  முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் விக்ராந்த் சிறப்பு தோற்றத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

டி .எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். இவர் நடிகை சோனியா அகர்வாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' சட்டத்தரணியாக பணியாற்றி வரும் நான் எம்முடைய தொழில் சார்ந்த அனுபவத்தில் சந்தித்த வழக்கை மையமாக வைத்து இப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இருக்கிறேன்.

உயில் ஒன்றை மையப்படுத்தி உறவு  சிக்கல்களையும் , பெண்ணின் தியாகத்தையும் உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக 'வில்' தயாராகி இருக்கிறது.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் தொடர்பான அதிகாரப்பூர்வமான விவரங்கள் வெளியிடப்படும்'' என்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற 'டெஸ்லா' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் கலைக்குமார் எழுத, பின்னணிப் பாடகி ரோஷிணி மற்றும் பின்னணி பாடகர் கிறிஸ்டோபர் ஸ்டான்லி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் அமைந்திருக்கும் இந்த பாடல் ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சோனியா அகர்வால் -விக்ராந்த்- உண்மையான வழக்கு -நீதிமன்ற விசாரணை நடைமுறை - சட்டத்தரணியின் இயக்கம் - என பல்வேறு சுவாரசியமான அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் 'வில் ' திரைப்படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்