ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள் : நீதிக்காக போராடும் ஊடகவியலாளரின் கதை

Published By: Priyatharshan

05 Feb, 2025 | 05:05 PM
image

வீ.பிரியதர்சன் 

“ எந்தவொரு செய்தியையும் விட உங்களது உயிர் மேலானது என்பதால் நீங்கள் உங்களது பாதுகாப்பை கருத்திலெடுக்க வேண்டும். எந்த விதத்திலும் உங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக நீங்கள் கருதினால் அலட்சியப்படுத்தாது, உங்களது பாதுகாப்பிற்காக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என ஊடவியலாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார் தாக்குதலுக்குள்ளாகி நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் ஊடகவியலாளரும் தற்போதைய அரசியல் விவகாரங்களுக்கான நெதர்லாந்து தூதரக அதிகாரியுமான நாமல் பெரேரா.

திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையாகவும் சிறந்த குடும்பத் தலைவராகவும் உள்ளார் நாமல் பெரேரே.

ஊடகவியலாளர் நாமல் பெரேரா கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி மாலை 6.10 மணியளவில் கொழும்பில் சனநடமாட்டமுள்ள பகுதியில் வைத்து தாக்குதல் சம்பவமொன்றுக்கு முகங்கொடுத்தார்.

தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாமல் பெரேரா விபரிக்கையில்,

“ இது ஒரு பெரிய கதை... 1975 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். தாக்குதல் நடக்கும் போது எனக்கு வயது 33. நான் பெற்றோருடன் தங்கியிருந்தேன். அப்போது நான் கிருல வீதியில் அமைந்துள்ள இலங்கை இதழியல் கல்லூரியில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். 

எனது நண்பர் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருந்தார். சம்பவ தினம் நான் எனது கடமையை முடித்துக்கொண்டு எனது நண்பரின் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சித்திரா வீதியில் நின்ற ஒரு நபர் எமது வாகனத்தை கண்காணிப்பதை நான் அவதானித்தேன். சிறிது தூரம் பயணித்து விட்டு காரை பின்நோக்கிச் செலுத்தி வந்து அந்த நபர் யாரென்று அருகில் சென்று அவதானித்த போது அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் நாம் போக வேண்டிய பாதையால் செல்லாது மாற்று வீதியான பைப் வீதியைப் பயன்படுத்தி வீட்டுக்கு செல்ல முற்பட்டோம். அப்போதும் எமது காரை மோட்டார் சைக்கிளில் இருவர் பின்தொடர்வதை அவதானித்தேன். ஆனால் நாங்கள் அவர்களுக்கு அருகில் செல்லாது அவர்களை திசைதிருப்பும் நோக்கில் பைப் வீதி வழியாக மீண்டும் சித்திரா வீதிக்குள் நுழைந்தோம். நாங்கள் அந்த வீதியால் அண்டர்சன் தொடர்மாடிக் குடியிருப்பு இருக்கும் பகுதிக்குச் சென்று நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லும் போது எம்மைப் பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டது.

சாலிக்கா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பாக் வீதிக்கு எமது வாகனத்தை செலுத்தி, லங்கா வைத்தியசாலைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தினோம். அந்த நேரத்தில் எமது வாகனத்திற்குப் பின்னால் ஒரு வெள்ளை வேன் வருவதை அவதானித்தோம். நாம் பேஸ் லைன் வீதி வழியாக கிருலப்பனை பக்கம் சென்றோம். அப்போதும் அந்த வெள்ளை வேன் எம்மைப் பின்தொடர்ந்தது.

வெள்ளை வேன் எம்மைப் பின்தொடர்வதால், பொல்ஹேன்கொட, எட்மன்டன் வீதியில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்குப் போவோமென்று எமது வாகனத்தைச் செலுத்திய எனது நண்பன் கூறினார். நாங்கள் நண்பரின் வீட்டுக்குச் செல்வதற்காக எமது வாகனத்தை திருப்பும் போது, வேகமாக வந்த வெள்ளை வேன் எங்களது காருக்கு முன்னால் வந்து குறுக்காக நிறுத்தப்பட்டது.

உனடியாக எனது நண்பன் எமது வாகனத்தை பின்பக்கமாக செலுத்தி பேஸ் லைன் வீதிக்கு சென்று மீண்டும் நாம் கிருல சந்திக்கு செல்ல முயன்றபோது குறித்த வெள்ளை வேன் வேகமாக எம்மை பின்தொடர்ந்து எமது வாகனத்திற்கு குறுக்காக மீண்டும் நிறுத்தியது. 

அதன்பின்னர் குறித்த வெள்ளை வேனில் இருந்த நபர்கள் பொல்லுகளுடன் எம்மை நோக்கி வந்து எமது வாகனத்தின் பின்பக்க கண்ணாடிகள், அருகில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொருக்கினார்கள். வாகனத்தின் கண்ணாடி உடைந்த பகுதியால் ஒரு நபர் என்னை இழுத்துச் செல்ல முயற்சித்தார். என்னை வெளியில் வருமாறு கத்தியபடி என்னை இழுத்தெடுத்து கடத்திச் செல்ல முயன்றார். நான் வாகனத்தின் கதவுகளை திறக்கவிடாது இழுத்துப் பிடித்தாவாறு அவரது தாக்குதலில் இருந்து தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

இந்தவேளையில் வெள்ளை வேனில் வந்தவர்களில் ஒருவர் எனது பின்தலையில் பொல்லால் தாக்கினார். இதன்போது வாகனத்தின் பின் கதவினூடாக மற்றுமொரு நபர் உள்ளே நுழைந்து என்னை வெளியில் இழுத்தார். எனினும் அந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.

இந்த சம்பவம் மாலை 6.10 மணியளவில் இடம்பெற்றதாலும் அந்த நேரம் மிகவும் சனநடமாட்டமுள்ள நேரம் என்பதாலும், பேஸ் லைன் வீதியில் இடம்பெற்றதாலும் அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட ஆரம்பிக்க மக்களும் அங்கு கூடத்தொடங்கினர். இதனால், என்னைத் தாக்க வந்த குழுவினர் அவர்களது முயற்சி கைகூடவில்லை என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

அவர்களால் எனது வாகனத்தில் நான் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு அருகில் இருந்த கதவை திறக்கவும் முடியவில்லை அதனால் என்னை அவர்களால் கடத்திச்செல்லவும் முடியவில்லை. அதனால் அவர்களின் முயற்சி தோல்வியடைய, அவர்கள் வந்த வாகனத்தில் ஏறி கிருலப்பனைப் பக்கமாகத் தப்பிச் சென்றார்கள். 

இந்த சம்பவத்தின் போது எனக்கும் எனது நண்பனுக்கும் பலத்த காயங்கள் எற்பட்டன. வீதியில் நின்றவர்கள் எமக்கு உதவினார்கள். அவர்கள் அருகில் இருந்த லங்கா வைத்தியசாலைக்கு எம்மை அழைத்துச் சென்று அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்கள்” என்று தனது உயிர் போய் மீண்டும் வந்த கதையை விபரித்தார் நாமல் பெரேரா. 

இரு சந்தேகநபர்களை அடையாளம் காட்டியும் விசாரணை தொடர்கிறது…….

“ கடந்த 2016 ஆம் ஆண்டு நான் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் என் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு சந்தேக நபர்களை அடையாளம் காட்டினேன். அந்த இருவரும் திரிபோலி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் ஆவர். இந்நிலையில் என் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில், என் மீதான தாக்குதல் சம்பவம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.  குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில், இலங்கையில் 4 ஊடகவியலாளர்கள் ( லசந்த விக்கிரமதுங்க, கீத் நொயார், உபாலி தென்னக்கோன் மற்றும் என் (நாமல் பெரேரா ) மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இராணுவ புலனாய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த இராணுவ புலனாய்வாளர்கள் திரிபோலி இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று தனது நீதிக்கான விசாரணை குறித்து குறிப்பிட்டார் நாமல் பெரேரா.

ஒரு மாதத்திற்கு முன் எனக்கு கிடைத்த தாக்குதலுக்கான சமிக்ஞை

” தாக்குதலுக்குள்ளாகும் போது எனது அலுவலகமான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள்கள் பெரும் சத்தத்துடன் போவதும் வருவதுமாக இருந்தது. ஆனாலும் நான் அது தொடர்பில் சற்று சந்தேகப்பட்டாலும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

என்னை தாக்குவார்கள் அல்லது என்னைக் கடத்திச் செல்வார்கள் என்பது தொடர்பில் எனக்கு தகவல் கிடைத்திருந்தது. என் மீது தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் கீத் நொயாரின் சம்பவம் தொடர்பில், எனது தொலைபேசி உரையாடல்களையும் கண்காணித்து, அது தொடர்பான தகவல்களையும் சிலர் சேகரிப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. எனவே என்மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. அதனால் என்மீதான தாக்குதலில் இருந்து இந்தளவுடன் நான் தப்பித்துக்கொண்டேன்.

என் மீதான தாக்குதலுக்கான காரணம்

நான் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் பணிபுரியும் காலத்தில் ராவய பத்திரிகைக்கு உள்நாட்டுப்போர் தொடர்பான கட்டுரைகளை எழுதினேன். வேறு சில ஊடகங்களுக்கும் நான் சுயாதீன ஊடகவியலாளனாக உள்நாட்டு யுத்தம் தொடர்பான கட்டுரைகளையும் எழுதி வந்தேன். இவ்வாறான நிலையிலேயே என் மீது தாக்குதல் இடம்பெற்றது. அந்தவகையில், என் மீதான தாக்குதலின் பின்னணிக்கு நான் பத்திரிகைகளுக்கு எழுதிய உள்நாட்டு யுத்தம் தொடர்பான கட்டுரைகளில் வெளியான தகவல்களே காரணம் என நான் நம்புகின்றேன். 

தாக்குதலால் நாட்டை விட்டுவெளியேறிய பின் மீண்டும் தாய் நாட்டுக்கு வந்த ஊடகவியளான் நான் ஒருவனே

“ தாக்குதலுக்குள்ளாகி லங்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்களின் பின்னர் அங்கிருந்து நான் நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று சுவீடன் நாட்டுக்கு பயணமானேன். சுவீடனில் நான் சுமார் ஒரு மாதங்கள் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்து சிங்கப்பபூருக்குச் சென்றேன். அங்கு நான் 2 மாதங்கள் தங்கியிந்தேன். இதன் பின்னர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் தொடர்பான கற்கைநெறியொன்றை கற்பதற்கான ஒரு புலமைப்பரிசில் எனக்கு கிடைத்தது. 

அமெரிக்காவில் நான் ஒரு வருடம் தங்கியிருந்தேன்.  இந்நிலையில், இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்த காலம். இதையடுத்து இலங்கையின் அரசியல் நிலைவரத்தில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் நான் நாட்டுக்கு வருவதற்கு தீர்மானித்தேன். இன்றைய நாளில் நான் ஒருவனே அச்சுறுத்தல், தாக்குதலால் நாட்டை விட்டுவெளியேறிய பின்னர் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்த ஊடகவியளான் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என்னைப் போல் பல ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதலையடுத்து நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்புக் கருதி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

இந்நிலையில்,  2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நான் மீண்டும் தாய் நாட்டுக்கு வருகை தந்தேன். இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன்.  இவ்வாறு கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியாக நியமனம் பெற்றேன்.

அங்கு நான் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினேன். 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை நெதர்லாந்து தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகராக கடமையாற்றுகின்றேன்” என்றார் நாமல் பெரேரா தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளானேன் அதிலிருந்து மீள நீண்டகாலம் தேவைப்பட்டது

“ என் மீதான தாக்குதல் சம்பவத்தால் நான் பாரிய அதிர்ச்சிக்கும் பெரும் மன அழுத்தத்திற்கும் உள்ளானேன். பீதி என்னை ஆட்கொண்டது. மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு எனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. எனது உயிருக்கான அச்சுறுத்தல் தொடர்பில் பெரும் பயம் ஏற்பட்டது. எனவே சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.

2012 ஆம் ஆண்டு நான் திருமணம் முடித்து எனக்கு தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர்.  ஆனால் மனதில் அச்ச உணர்வு என்பது காலத்திற்கு காலம் வந்துபோகும். குறிப்பாக ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தின் போது அச்ச உணர்வு அதிகரித்திருந்தது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் காலங்களில் மனதில் அச்ச உணர்வு ஆட்கொள்ளும். தற்போது நான் சாதாரண மனிதனாக வாழ்கின்றேன்.  அச்ச உணர்வுகளில் இருந்து நான் விடுபடுவதற்கரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை பெற்றுள்ளேன். அத்துடன் இராஜதந்திர தொடர்புகளுடன் கடமை செய்வதால் நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்கின்றேன்.

இந்த சம்பவத்தை மீண்டும் தற்போது பேசும் போது, அது ஒரு செய்தி மாத்திரமே. எனது உயிர் போய் மீண்டும் கிடைத்ததாகவே நான் அதை பார்க்கின்றேன். எனவே, எனது சம்பவத்தின் பின்னர் நான் ஊடகவியலார்களுக்கு கூறிக்கொள்வது, உங்களது பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். எந்தவொரு செய்தியையும் விட உங்களது உயிர் மேலானது என்பதால் நீங்கள் உங்களது பாதுகாப்பை கருத்திலெடுக்க வேண்டும். எந்த விதத்திலும் உங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக நீங்கள் கருதினால் அலட்சியப்படுத்தாது, உங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் உண்மையானவையெனக் கருதிக்கொண்டு உங்களது உயிரையும் சொத்துக்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அத்துடன் உங்களது பாதுகாப்பிற்காக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

இலங்கையில் கொல்லப்பட்ட, தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களுக்குள்ளான ஊடகவியலார்களுக்கான நீதி வெகு சீக்கிரத்தில் நிலைநாட்டப்பட வேண்டும். புதிய அரசாங்கத்தில் நிலுவைகளில் உள்ள பல வழக்குகளின் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதிக்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...

2025-03-16 15:25:50
news-image

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்

2025-03-16 14:51:10
news-image

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...

2025-03-16 15:03:08
news-image

ஈரான் மூலோபாயம்

2025-03-16 13:25:56
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே

2025-03-16 13:07:00
news-image

கிரிபத்கொடையில் கடத்தப்பட்ட சுகி ; என்னை...

2025-03-16 12:15:22
news-image

“காஸாவில் பாலியல் வன்முறை, இனப்படுகொலை நடவடிக்கைகள்”...

2025-03-16 11:54:02
news-image

லண்டனில் வறுக்கப்பட்ட ரணில்

2025-03-16 11:38:23