தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தனது ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தில், ஊழல்/ துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக அக்கறை காட்ட வேண்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுற்றுச் சூழல், அரச நிர்வாகம், தனிநபர்களின் பழக்கவழக்கங்கள் அல்லது அணுகுமுறைகள், இலங்கை வாழ் சமூகங்களின் வாழ்க்கை முறை என பல விடயங்கள் அடங்கியுள்ளதாயினும், ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்களின் அதிகரிப்புகள் காரணமாக மேற்கூறிய சகல அம்சங்களிலும், வளர்ச்சி போக்கையோ அல்லது அபிவிருத்தியையோ எதிர்ப்பார்க்க முடியாது எனலாம்.
தூய்மையான இலங்கை திட்டத்துக்கு , ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் நிச்சயம் ஆதரவளிக்க மாட்டர் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டிய அவசியமில்லை. ஊழலை தமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்ட அரச நிறுவனங்களின் சில பணியாளர்கள், உயர் அதிகாரிகள் அரசாங்கத்தின் இத்திட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ கட்டாயம் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதை ஒரு வெறுப்புணர்வோடும் அக்கறையின்றியுமே அவர்கள் முன்னெடுப்பர் என்று கூறலாம். ‘தூய்மையான இலங்கை’ வேலைத்திட்டம் தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டங்களில் சில அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பாக உள்ள அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லையென்பது முக்கிய விடயம்.
அது குறித்து அரசாங்கம் உரிய வகையில் அவர்களிடம் விளக்கங்களை கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையென்பது தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் காலங்களில், தேசிய மக்கள் சக்தியானது ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்களின் பிரதான காரணகர்த்தாக்களாக அரசியல்வாதிகளே இருப்பதாகவும் அவர்களை பாராளுமன்றத்திலிருந்து ‘சுத்தப்படுத்தும்’ பணியை மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தது. ஆனால் அரசியல்வாதிகள் ஊழல்களில் ஈடுபடுவதற்கு பிரதான சூத்திரதாரிகளாக இருப்பவர்கள் சில அரச அதிகாரிகள் என்பதையும் தேசிய மக்கள் சக்தி அறிந்தே இருந்தது.
ஆனால் பெரும்பான்மையோடு புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்ததும் உடனடியாக குறித்த அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் தேசிய மக்கள் சக்தியால் எடுக்க முடியாமல் போனது. தற்போது க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக அதை செயற்படுத்த முயற்சி செய்தாலும் சில அதிகாரிகள் அரசாங்கத்துக்கு தலைவலிகளாகவே உள்ளனர்.
அரச யந்திரம் சிறப்பாக செயற்பட அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். ஆனால் அவர்களில் பெரும்பான்மையானோர் தற்போதைய அரசாங்கத்துக்கு பல வழிகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்த முயல்வது போன்று தெரிகின்றது. இவர்கள் அனைவருமே கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் துஷ்பிரயோகங்களுக்கு துணை போனவர்கள் என்பது முக்கிய விடயம்.
மறுபக்கம் பாதாள உலக கோஷ்டியினரின் அடாவடித்தனங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் அரசாங்கம் உள்ளது. நாட்டில் பல்வேறு குழுக்களிடம் உள்ள சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இதை உணர்த்தி நிற்கின்றன.
தமது பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சு அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச அதிகாரிகளின் ஊழல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தி மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குதல், மற்றும் குற்றச் சம்பவங்களிலிருந்து மக்களை பாதுகாத்தல் என்ற இந்த இரண்டு பாரிய பணிகளும் தேசிய மக்கள் சக்தியின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் சவால் மிக்கதாகவுள்ளது. அடுத்த ஐந்து வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்தாலும் கூட மேற்கூறிய இரண்டு விடயங்களில் கால்வாசியான அளவுக்குக் கூட அரசாங்கத்தால் வெற்றியை ருசிக்க முடியாது என்று தான் கூற வேண்டும்.
எல்லாத் துறைகளிலும் புரையோடிப் போயுள்ள ஊழல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்குரிய பொறிமுறைகளை உருவாக்குவதில் அநுர அரசாங்கம் இன்னும் பின்னிற்கின்றது.
முன்னாள் அமைச்சர்கள் , அவர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நெருக்கமான அரசியல்வாதிகளின் கடந்த கால ஊழல் செயற்பாடுகளை காரணங் காட்டி கைதுகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம், அதன் மூலம் தனக்கு நெருக்கடிகளை கொடுத்து வரும் அரச அதிகாரிகளை பணிய வைக்கலாம் என்று நினைக்கின்றதோ தெரியவில்லை.
பாராளுமன்றத்தை சுத்தப்படுத்த மக்களின் ஆணையை கோரி நின்ற ஜனாதிபதி அநுர அதில் வெற்றி பெற்றார். ஆனால் பாராளுமன்றத்துக்கு வெளியே தான் சுத்தப்படுத்த வேண்டிய விடயங்கள் மலையளவுக்கு உயர்ந்து நிற்கின்றன. இதை ஜனாதிபதி எவ்வாறு கையாளப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM