நிருபமா சுப்பிரமணியன்
தெய்வப்புலவர் திருவள்ளுவரை கௌரவிக்குமுகமாக யாழ்ப்பாணம் கலாசார மையத்தை ' திருவள்ளுவர் கலாசாரம் மையம் ' என்று பெயர் மாற்றம் செய்வதாக ஜனவரி 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவொன்றைச் செய்து அறிவித்தது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இலங்கையின் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியும் கூட்டாக புதிய பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்தனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரும் இத்திய உயர்ஸ்தானிகரகத்தின் எக்ஸ் பதிவை மீள்பதிவு செய்து பெயர் மாற்றத்தை பாராட்டியிருந்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியும் அதைப் புகழ்ந்தார்.
இவ்வாறுதான் தொடங்கியது அயல்நாடுகளின் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாததாக புதுடில்லி எவ்வாறு மாறிவிட்டது என்பதையும் பாரதிய ஜனதா கட்சியின் உள்நாட்டு நிகழ்ச்சி நிரலினால் இந்திய வெளியுறவுக் கொள்கை நோக்கு எவ்வாறு மங்கலாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மீண்டும் ஒரு தடவை காண்பித்த நாடகம். அத்தகைய நோக்கின் விளைவாக புதுடில்லி அதன் நீண்டகால நண்பர்களையும் செல்வாக்கையும் இழப்பதுடன் பிராந்தியத்தில் செய்த நல்ல காரியத்தையும் கெடுத்துவிட்டது.
யாழ்ப்பாண கலாசார மையம் போரினால் அழிவுகளுக்கு உள்ளான வட இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒரு கோடி 20 இலட்சம் டொலர்கள் பெறுமதியான ஒரு தனித்துவமான கொடையாகும். 2011 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு 2021 ஆம் ஆண்டில் நிர்மாணித்து முடிக்கப்பட்ட நவீன கேட்போர் கூடம் ஒன்றுடன் கூடிய 11 மாடி கட்டிடமே யாழ்ப்பாணக் குடாநாட்டின் மிகவும் உயரமான ஒரேயொரு கட்டிடமாகும்.
யாழ்ப்பாணம் கலாசார மையத்தை நிருவகித்து பராமரிப்பதற்காக மாநகரசபையிடம் நிதி இருக்கவில்லை என்பதால் அதற்கான நிதியை ஐந்து வருடங்களுக்கு வழங்குவதற்கு இந்தியா இணங்கிக்கொண்டது. கலாசார மையம் 2023 ஆம் ஆண்டில் அன்றைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ' யாழ்ப்பாண மக்களிடம் ' முறைப்படி கையளிக்கப்பட்டது.
ஆகவே எங்கிருந்து திருவள்ளுவர் இங்கே வருகிறார்? சங்ககால தமிழ் தத்துவப் பலவரான திருவள்ளுவரை உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் போற்றி வணங்குகிறார்கள். தமிழ்நாட்டில் ஊடுருவுவதில் நாட்டம் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி அந்த மாநிலத்தில் திருவள்ளுவரை காவிமயப்படுத்த முயற்சிக்கின்றது.
2024 லோக்சபா தேர்தல்களில் பெரிய வெற்றியைப் வெற்றியைப் பெறும் நம்பிக்கையில் பாரதிய ஜனதா அதன் தேர்தல் அறிக்கையில் உலகளாவ திருவள்ளுவர் கலாசார மையங்களை நிறுவும் உறுதிமொழியையும் உள்ளடக்கியது. பாரத்தின் செழுமையான கலாசாரத்தை உலகிற்கு காட்டுவதும் ஜனநாயகத்தின் தாய் என்ற வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பாரத்தின் ஜனநாயக பாரம்பரியத்தை மேம்படுத்துவதுமே நோக்கம் என்றும் அதில் கூறப்பட்டது.
கடந்த வருடம் செப்டெம்பரில் சிங்கப்பூருக்கு விஜயம் செய்த மோடி முதலாவது திருவள்ளுவர் கலாசார மையத்தை இந்தியா அந்த நாட்டில் நிறுவும் என்று அங்குள்ள தமிழர்கள் மத்தியில் உறுதியளித்தார். பிரதமரின் அந்த அறிவிப்பை புகழ்ந்து முதலில் பாராட்டியவர்களில் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் கே. அண்ணாமலையும் ஒருவர். நிதிச்சிக்கல் ் மற்றும் காலவரிசை காரணமாகப் போலும் அந்த திட்டம் பிறகு மாற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் 2026 மே மாதத்தில் நடைபெறவிருக்கின்றன. அந்த குறுகிய காலப்பகுதியில் புதிதாக திருவள்ளுவர் கலாசார மையம் ஒன்றை நிர்மாணிப்பது சாத்தியமாகப் போவதில்லை. ஆனால், ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்ட கலாசார மையம் ஒன்று கைவசம் இருக்கிறது.
இவ்வாறு தான் வெளிநாட்டில் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைப்பது என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் முதலாவது இடமாக இலங்கையின் யாழ்ப்பாணம் மாறியது. இலங்கை பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் அதை " உடனடி நூடில்ஸ் போன்று உடனடி திருவள்ளுவர் காலாசார மையம் " என்று வர்ணித்தார். யாழ்ப்பாணம் கலாசார மையத்தின் பெயரை மாற்றும் தீர்மானம் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்குபுதுடில்லியில் இருந்து பிரதமர் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டது.
எதிர்ப்புக் கிளம்பியபோது புதுடில்லி அதிர்ச்சியடைந்தது. கலாசார மையத்துக்கு வைக்கப்பட்ட முதல் பெயர் ஆழ்ந்து ஆராயந்து தெரிவு செய்யப்பட்டது. இலங்கை தமிழ் சிறுபான்மையினத்தவர்கள் யாழ்ப்பாணத்தை தமிழ் வடக்கு, கிழக்கின் வரலாற்று மற்றும் கலாசாரத்தின் இதயமாக நோக்குகிறார்கள். 30 வருடகால உள்நாட்டுப் போரில் யாழ்ப்பாணம் பெரும்பாலும் நிர்மூலம் செய்யப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் இனமோதல் மூளுவதற்கு முன்னதாக சிங்களக் குண்டர்கள் யாழ்ப்பாண பொது நூலகத்தை தீவைத்துக் கொளுத்தினர். ஆயிரக்கணக்கான நூல்களும் கையெழுத்துப் பிரதிகளும் தீயில் பொசுங்கின.
இனப் போரின்போது பெருமளவு தமிழர்கள் நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தாலும், யாழ்ப்பாணம் தமிழ் அரசியலினதும் அடையாளத்தினதும் மையாமாக தொடர்ந்து நிலைத்திருக்கிறது. வானளாவ உயர்ந்து நிற்கும் கலாசார மையம் இலங்கையில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த தமிழ் கலாசாரத்தினதும் இனமோதலின் பாதிப்புக்களில் இருந்து மீட்சிபெற்று மீண்டும் அந்த உச்சத்தை மீண்டும் அடைவதில் தமிழச் சமூகம் கொண்டிருக்கும் திடசங்கற்பத்தினதும் ஒரு சின்னமாக விளங்குகிறது.
திடீரென்று செய்யப்பட்ட பெயர் மாற்றம் மக்களை சீற்றமடைய வைத்தது. யாழ்ப்பாணப் பிரதிநிதி எவருடனும் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருடனும் அல்லது ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் உள்ள தமிழரான இராமலிங்கம் சந்திரசேகருடனும் கூட பெயர் மாற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை.
பெயர் மாற்ற வைபவத்தில் கலந்து கொண்ட சந்திரசேகர் தனக்கு பெயர் மாற்றம் குறித்து முன்கூட்டியே தகவல் எதுவும் தெரியாது என்று தெரிவித்ததாக கூறப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போன்று மாற்றம் செய்யப்பட்ட பெயர்ப்பலகையில் ஆங்கிலத்துக்கும் சிங்களத்தக்கும் அடுத்ததாகவே தமிழ் இடம்பெற்றது.
தமிழ் அடையாளத்துக்கு யாழ்ப்பாணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முதலில் ஆத்திரத்துடன் அறிக்கை வெளியிட்ட முக்கியமான அரசியல்வாதி முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே ஆவார்.
மக்கள் மத்தியில் சீற்றம் அதகரிக்கவே தமிழர்களின் இரண்டாவது பழம்பெரும் அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி கலாசார மையத்தின் பெயர் மாற்றம் தொடர்பில் அதன் " "வேதனையை" வெளிப்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவருக்கு கடிதம் ஒன்றை எழுதியது. தாங்கள் எதிர்ப்பது திருவள்ளுவரை அல்ல என்று சுட்டிக்காட்டிய தமிழரசு கட்சி தமிழ் அடையாளத்தின் சின்னம் என்ற வகையில் யாழ்ப்பாணம் மதிப்புமிக்கது என்றும் அந்த பெயர் மீணடும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
யாழ்ப்பாணத்தில் தோன்றிய நிலைவரத்தை புதுடில்லியில் உள்ளோர் இறுதியில் விளங்கிக் கொண்டனர். என்றாலும், முற்றுமுழுதாக விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஒரு விட்டுக்கொடுப்பாக ' திருவள்ளுவர் கலாசார மையம், யாழ்ப்பாணம் ' என்று பெயரை வைக்கலாம் என்று கொழும்பில் உயர்ஸ்தானிகரகத்தின் இராஜதந்திரிகள் முதலில் யோசனை கூறினர்.
ஆனால், அவ்வாறு பெயரைப் பொறிப்பது யாழ்ப்பாணம் என்பது வெறுமனே கலாசார மையத்தின் விலாசம் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதாக அமையும் என்று தமிழ்த்தரப்பு ஆட்சேபித்தது. பிறகு அவர்கள் ' யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் ' என்று பெயரைப் பொறிப்பதற்கு இணங்கினார்கள். ஆனாலும், இந்தியாவின்' பெரிய அண்ணன் ' மனோபாவம் தொடர்பில் எரிச்சலுடனேயே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுடனான பொதுவான இனத்துவ மற்றும் கலாசாரப் பிணைப்புகளின் விளைவாக இந்தியாவுடன் வரலாற்று ரீதியாக நெருக்கமானவர்களாக இருந்துவரும் இலங்கை தமிழர்களை வசப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை செய்து வருகின்ற ஒரு நேரத்தில் கலாசார மையம் தொடர்பான சர்ச்சை தோன்றியது கவனிக்கத்தக்கது.
தமிழ்த் தீவாரவாதத்துக்கு ஆதரவளிப்பதற்கு எடுத்த தவறான ஒரு தீர்மானம் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்துக்காக அரசியலமைப்பு திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு தலையீடு செய்தது உட்பட இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கான பேராட்டத்தை இந்தியா ஆதரித்தது.
ஆனால், உறவுமுறை சுமுகமானதாக இருக்கவில்லை. சிங்கள அரசியல் சமுதாயத்தின் மீதான சீனாவின் செல்வாக்கு தொடர்பிலான கரிசனையின் விளைவாக கொழும்புடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்காக புதுடில்லி தமிழர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதனால் தமிழர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள். இலங்கை கடற்பரப்பில் பெருமளவில் இழுவைப் படகுகளை பயன்படுத்தி தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவது யாழ்ப்பாணத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் கடுமையாக இருப்பதற்கு காரணமான இன்னொரு பிரச்சினையாகும்.
இந்திய குடியரசு தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றிய துணைத் தூதுவர் ' எந்த நேரத்திலும் இலங்கை தமிழ் மக்கள் கதவைத் தட்டக்கூடிய ஒரு நட்புநாடு இந்தியா' என்று கூறினார்.
தமிழ் மக்களுடன் நிற்பதற்காக இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் இந்தியா சென்றது என்று கூறிய அவர் ' தமிழ் மக்கள் தங்களது நண்பர்கள் யார், தங்களுக்கு எதிரானவர்கள் யார் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். சில தீர்மானங்கள் வேறுபாடுகளை தோற்றுவித்திருந்தன என்ற போதிலும், யாழ்ப்பாண துணைத்தூதரகம் மக்களின் நலன்களையும் நல்வாழ்வையுமே மனதிற்கொண்டிருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
( டெக்கான் ஹெரால்ட்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM