வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில் விகாஷ்னி சதாசிவத்தின் நாட்டியம்!

Published By: Digital Desk 7

07 Feb, 2025 | 10:25 AM
image

அபிலாஷனி லெட்சுமன் 

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

பாவம் எனப்படும் உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தும் தன்மையும் ராகமும் லயமும் அங்கங்களை வில்லென வளைக்கும் நடனமும் இணைந்தது தான் பரதநாட்டியம். இதைப் பிரதிபலிக்கும் அரங்கேற்றமே வாசுகி ஜெகதீஸ்வரனின் 150ஆவது அரங்கேற்றம் என்றால் அது மிகையல்ல. 

நாட்டிய கலா மந்திர் நடன கலாசாலையின்  ஸ்தாபக இயக்குநர் “கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் 150ஆவது அரங்கேற்றம் சதாசிவம் - கவிதா தம்பதியினரின் புதல்வியான  விகாஷ்னியினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த அரங்கேற்ற நிகழ்வில் “பொன்னியின் செல்வன் - 2” திரைப்படத்தில் மாதுளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இந்திய நடிகையும் பெங்களூர் “சித்கலா” நாட்டியப்பள்ளியின் நிறுவுனருமான குமாரி ஸ்ரீமா உபாத்யாயா பிரதம விருந்தினராகவும் தொழிலதிபர் ஏ.பி. ஜெயராஜா கெளரவ விருந்தினராகவும் பரதநாட்டியக் கலைஞரும் நடன இயக்குநருமான மதுரை ஆர்.முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும்  கலந்துகொண்டதோடு, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம். செந்தில்நாதன், இலங்கையின் பிரபல நடனக் கலைஞர்கள் உட்பட பலர் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான முதல் அரங்கேற்றத்தை “மோகனா” என்ற மாணவி 1980ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.

 வாசுகி ஜெகதீஸ்வரன் நாட்டிய கலா மந்திர் தயாரிப்புக்களாக  பல நாட்டியங்கள், அரங்கேற்ற நிகழ்வுகள், நாட்டிய சாஸ்திரிய நடன நிகழ்வுகளை நிகழ்த்திய ஒரு உன்னதமான கலைஞர் ஆவார்.

அரச நடன விருது வழங்கல் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக்கொண்ட வாசுகி ஜெகதீஸ்வரன் , இவ்வருடம்  150வது அரங்கேற்றத்தை நிகழ்த்தும் பெருமைக்குரியவராக திகழ்கிறார்.

அதனடிப்படையில், 'நாட்டிய கலா மந்திர்' நடன கலா நிலையத்தில் பயின்று அரங்கேற்றம் நிகழ்த்தும் 150ஆவது மாணவி என்ற பெருமைக்குரியவராக விகாஷ்னி சதாசிவம் விளங்குகிறார்.

இந்த ஆடல் அரங்குக்கு வாசுகி ஜெகதீஸ்வரன் நட்டுவாங்கம் நிகழ்த்தியதோடு, குரலிசைக் கலைஞராக “இசை முதுமணி” கலாநிதி அருணந்தி ஆருரன், “மிருதங்கம் லய விசாரத” ஸ்ரீ சண்முகலிங்கம் நாகராஜன், வயலின் “இசைக்கலைமணி” ஸ்ரீ.கேதீஸ்வரன் வேலதீபன், தாள தரங்கம் “விசாரத” ஸ்ரீ ரத்னம் ரத்னதுரை, புல்லாங்குழல் “விசாரத” ஸ்ரீ பிரியந்த தசநாயக்க மற்றும் வீணை “வீணை இசை கலைமணி” என்.எஸ் வகீஷன் ஆகியோர் அணிசேர் கலைஞர்களாக இசை பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

'நாட்டிய கலா மந்திர்' நடன கலா நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தன் குரு வாசுகி ஜெகதீஸ்வரனை போற்றும் வகையில் குழு நடனமொன்றை வழங்கியதோடு, “லய விசாரத” ஸ்ரீ சண்முகலிங்கம் நாகராஜனின் வழிகாட்டலின் கீழ் வாசுகி ஜெகதீஸ்வரனின் கலைப்பணியினை போற்றும் வகையில் அழகிய இசையமைப்புடனான பாடலுக்கு நாட்டிய நடனம் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, தன் குருவிடம் தான் கற்றுக்கொண்ட நாட்டியக் கலையினை அரங்கிலே அழகுற ஆற்றுகை செய்து ரசிகப்பெருமக்களின் மனதில் இடம்பிடித்த நாட்டிய மங்கை விகாஷ்னி, நாட்டிய உருப்படிகளை  அணிசேர் கலைஞர்களின் இசை பங்களிப்போடு அரங்கேற்றியமை சிறப்புக்குரியதாகும்.

அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் பரதக்கலை, தெய்வீகக் கலையாக போற்றப்படுகிறது. இதனடிப்படையில், புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம் , கீர்த்தனம், வர்ணம் ஆகிய நடன உருப்படிகளுக்கு தகுந்தாற்போல நால்வகை அபிநயச் சித்தரிப்புக்களுடன் நடனத்தை அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது.

 அழகிய அசைவுகளோடும் கதாபாத்திரங்களை தனித்தனியாக சித்திரித்து ஆடும் அரங்கேற்றத்தை அரங்கிலே காணக்கூடியதாக இருந்தது.

அத்தோடு, அரங்கிலே காணப்பட்ட பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் இறைவனை போற்றும் பக்தி பாடல்களான  “திருவிருத்தம், சிவ ஸ்துதி, கீர்த்தனம், பாரதியார் பாடல்” என்பவற்றுக்கு  நவரசங்களையும் முகபாவனையுடன் முன்னிறுத்தி ஆடல் அரங்கை முழுமையாக பயன்படுத்தி தன் ஆடற்கலையினை அரங்கேற்றியமை அருமையாக காணப்பட்டது.

சிவன், முருகன், கண்ணன் என பல கடவுளரின் திருவுருவங்களை ஆடை, அலங்காரங்கள், ஒப்பனை என்பவற்றோடு  ஆடற்கலையின் மூலம் பிரதிபலித்தமை சிறப்புறக் காணப்பட்டது.

அரங்கில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேடை அலங்காரங்கள், ஒலி, ஒளி அமைப்புக்கள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள் என்பன நாட்டிய மங்கையின் நடனத்தையும் அரங்கையும் மேலும் மெருகூட்டியது.

தனது எட்டு வயதிலிருந்து நாட்டியம் கற்றுக்கொண்டு தனது குருவின் மீது கொண்ட பக்தி மற்றும் கலையின் மீது கொண்ட ஈடுபாடு என்பவற்றை  தெளிவுபடுத்தும் ஆடலே இந்த அரங்கேற்றம் என்றால், அது பொய்யில்லை.

அரங்கிலே ஆடப்பட்ட “புஸ்பாஞ்சலி” முதல் “தில்லானா” வரையிலான உருப்படிகளுக்கு நடன மங்கை விகாஷ்னியினால் அரங்கிற்கு வழங்கப்பட்ட ஒவ்வோர் அசைவுகளும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் காணப்பட்டது.

பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்கிய நடனமாக “சிவ ஸ்துதி” பாடலுக்கான நடனத்தை குறிப்பிடலாம். நடனக்கலைக்கு நாயகனான பரம்பொருளை அரங்கிலே தோற்றுவித்த நடனம் என்றால் அது பொய்யில்லை. இசையமைப்பு, தாளக்கட்டுக்கள் என்பன ஒன்றித்து அரங்கை மளிரச் செய்தன.

நடன தாரகையின் ஒவ்வொரு அசைவும் பார்வையாளர்கள் தன்னை மறந்து கரகோசம் எழுப்பும் வண்ணம் காணப்பட்டது.

“பாரதியார் பாடல்” “கண்ணன்” பாடலுக்கான நடனத்தின் போதும் அழகிய ரச பாவனையோடு தன் ஆடலை எடுத்தியம்பினார். சிறு குழந்தையின் குறும்புத்தனம், வேகம், விவேகம் என்பன அவரது ஆடலில் தென்பட்டது.

நடனத்தை முழுமூச்சாக கொண்ட ஒரு கலைஞனால் மாத்திரமே இவ்வளவு அர்ப்பணிப்பு செய்து ஆடமுடியும். 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காணப்பட்ட அரங்கில்  அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்ப்பது என்றால் அது ஒரு கலைஞனால் மாத்திரம் முடியும். இதனை விகாஷ்னி மிக  அருமையாக அரங்கில் வெளிப்படுத்தினார்.

இத்தகைய பிரமிக்கத்தக்க அரங்கேற்றத்திற்கு  பிரதம விருந்தினராக வருகை தந்த  இந்திய நடிகையும் பெங்களூர் “சித்கலா” நாட்டியப்பள்ளியின் நிறுவுனருமான குமாரி ஸ்ரீமா உபாத்யாயா, சிறப்பு விருந்தினராக வருகை தந்த பரதநாட்டியக் கலைஞரும் நடன இயக்குநருமான மதுரை ஆர். முரளிதரன்  மற்றும் கெளரவ விருந்தினராக வருகை தந்த பிரபல தொழிலதிபர் ஏ.பி. ஜெயராஜா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு, கலை என்பது இசையோடு ஒன்றித்து இருப்பது. அந்த வகையில் அன்றைய அரங்கேற்றத்திற்கு இசைப் பங்களிப்பு வழங்கிய இசைக்குழுவும் கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களான இந்திய நடிகை குமாரி ஸ்ரீமா உபாத்யாயா, மதுரை ஆர். முரளிதரன், ஏ.பி. ஜெயராஜா ஆகியோர் உரையாற்றிய போது, நாட்டிய மேடையினை சிறப்பித்த நாட்டிய மங்கையினையும், நாட்டியக்கலையில் பல ஆண்டுகளாக சாதனை புரிந்துவரும் வாசுகி ஜெகதீஸ்வரனின்  150ஆவது அரங்கேற்றத்திற்கான வாழ்த்தினையும் தெரிவித்தனர்.

வாழ்வின் முதல் படிநிலையாக இந்த அரங்கேற்றத்தை குறிப்பிட்டு விகாஷ்னி மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்திய விருந்தினர்களான இந்திய நடிகை குமாரி ஸ்ரீமா உபாத்யாயா, குருவின் பணியினையும் போற்றி வணங்கினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று அரங்கேற்றத்தில் நான் பங்குகொண்டதை எண்ணி  உண்மையில் பெருமைப்படுகிறேன். விகாஷ்னியின் பரதநாட்டியத்தின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் அன்பைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. விகாஷ்னி இந்த புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைப்பதைப் பார்ப்பதில் உற்சாகமாக இருக்கிறது.  வாசுகி ஜெகதீஸ்வரனின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் பரதநாட்டிய உலகில் ஆழ்ந்த பங்களிப்பிற்கு ஒரு சான்றாக இந்த 150ஆவது அரங்கேற்றம் காணப்படுகின்றது.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், அவர் தனது 150ஆவது அரங்கேற்றத்தை நிகழ்த்துவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என  மேலும் தெரிவித்தார்.

நாட்டிய மங்கையினால் ஆடப்பட்ட “தில்லானா” உருப்படியின் மூலம் நடன மங்கையின் தாள, லய ஞானத்தினை அறிந்து கொள்ளமுடிந்தது.   தில்லான உருப்படியை விறுவிறுப்புடன் ஆடி இறுதியில் அரங்கத்தை மிளரச் செய்து தனது ஆடல் அரங்கேற்றத்தை மங்களத்துடன் நிறைவு செய்தார் விகாஷ்னி.

இந்நிகழ்வில் விகாஷ்னி தன் குரு வாசுகி ஜெகதீஸ்வரனின் கரங்களால் நாட்டிய டிப்ளோமா சான்றிதழினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25