இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

Published By: Digital Desk 7

04 Feb, 2025 | 01:34 PM
image

எம்.டி. லூசியஸ்

ஒரு நாட்டின் இராணுவ பலம் என்பது ஒரு மனிதனின் இதயத்தை போன்றது என்றே கூறலாம். ஏனெனில் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு அவர்களிடமே உள்ளது.

உலகத்தில் உள்ள வல்லரசு நாடுகள் தமது இராணுவ பலத்தை வைத்தே ஏனைய நாடுகளை விடவும் தாம் பலம்பொருந்திய நாடு என்பதை நிருபித்து வருகின்றன.

இதற்காகவே ஒவ்வொரு நாடும் வருடத்தில் ஒரு முறையாவது, தமது இராணுவ பலத்தை ஏனைய நாடுகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் பிரமாண்ட நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.

இதன்போது அந்நாட்டின் இராணுவ படையணிகளையும், இராணுவ தளவாடங்களையும் அணிவகுத்து நிற்பதை காண முடியும்.

குறிப்பாக ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் இராணுவ வீரர்கள் தமது உயிரை துச்சமென கருதி நாட்டுக்காகவே உயிரை தியாகம் செய்வார்கள்.  

ஒரு சில நாடுகளில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை அடக்கி நாட்டை அவர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெக்கின்றனர்.

இவ்வாறு உயிரையையே தியாகம் செய்து நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர்களை ஒரு சில நாடுகளே போற்றி பாதுகாத்து வருவதோடு அவர்களுக்கென உயரிய மரியாதையும், கௌவரத்தையும் வழங்கி வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவை பற்றி அறிந்துகொள்வோம் என்ற நிகழ்ச்சியில் நாம் சென்று பார்வையிட்ட முக்கிய இடமாக இந்தியாவின் தேசிய போர் நினைவிடம் காணப்படுகின்றது.

இந்த தேசிய போர் நினைவிடம் அந்நாட்டு இராணுவர் வீரர்களை எந்தளவுக்கு போற்றி பாதுகாக்கின்றது என்பதை மிகவும் அழகாக பரைசாற்றுகின்றது.

குறிப்பாக ஒரு சில நாடுகளில் இராணுவ வீரர்கள் காண்களை சுத்தம் செய்யவும், வீதிகளை துப்பர செய்யவும், அரசியல்வாதிகளின் எடுபிடி வேலைகளை செய்யவுமே நிர்பந்திக்கப்படுவார்கள்.

ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இராணுவ வீரர்களுக்கு மிக உயரிய கௌரவம் வழங்கப்பட்டு வருகின்றது என்பதை இதன்மூலம் கண்கூடாக காணமுடிகின்றது.

குறிப்பாக டெல்லியில் காணப்படும் தேசிய போர் நினைவிடமானது ஒவ்வொரு இராணுவ வீரரின் பெருமையும் கூறும் முக்கிய தலமாக உள்ளது.

தேசிய போர் நினைவுச்சின்னம் என்பது இந்திய பாதுகாப்புப் படைகளை கௌரவிப்பதற்காக புது டில்லியில் இந்தியா வாயிலின் அருகே இந்திய அரசு கட்டிய நினைவுச்சின்னமாகும்.

இந்த நினைவுச்சின்னம் 40 ஏக்கர் நிலப்பரப்பில் எழில்கொஞ்சம் இயற்கையுடன் ஒன்றித்து காணப்படுகின்றது.

1947-48 இந்திய-பாக்கிஸ்தான் போர், 1961 (கோவாபடையெடுப்பு), 1962 (சீனப்போர்), இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், 1987 (சியாச்சின்), 1987-88 (இலங்கை), 1999 (கார்கில்) மற்றும் பிற ஆயுத மோதல்களின் போது தியாகிகளான ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் 'ஆபரேஷன் ரக்சக்' போன்ற செயல்பாடுகள் நினைவுச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

இதன் அருகிலுள்ள இளவரசி பூங்கா பகுதியில் ஒரு தேசிய போர் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள்ளது. இளவரசி பூங்கா இந்தியா நுழைவாயிலுக்கு வடக்கே 14 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இந்தியா கேட்டுக்கு மிக அருகில் காணப்படும் இந்த தேசிய போர் நினைவிடமானது 2019 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹென்டனியால் இந்தியா கேட்டுக்கு அருகில் போர் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு அமைச்சரவையில் கட்டுமாணத்திற்கான அனுமதி பெறப்பட்டது.

இதன் கட்டமைப்பிற்காக உலகளாவிய வடிவமைப்பு போட்டி 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன் முடிவு 2017 ஏப்ரல் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. சென்னை கட்டடக்கலை நிறுவனமான வெபே வடிவமைப்பு என்ற நிறுவனம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. அதன்படி கட்டடக்கலை வடிவமைப்பின் கருத்துருவாக்கம் மற்றும் திட்டத்தின் கட்டுமானத்தை ஒருங்கிணைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது.

தேசிய போர் நினைவுச்சின்னத்தின் பிரதான கட்டிடக் கலைஞர் சென்னை வீபே வடிவமைப்பு ஆய்வகத்தின் யோகேஷ் சந்திரகாசன் என்பவராவார்.

யுத்த நினைவுச்சின்னம் நாம் மரணத்தை துக்கப்படுத்தாத இடமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே, வீரர்களின் வாழ்க்கையை கொண்டாடுங்கள். அவர்கள் செய்த தியாகங்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என இந்த நினைவிடத்தை வடிவமைத்த சந்திரகாசன் தெரிவித்துள்ளார்.

போர் நினைவு மற்றும் அருங்காட்சியகத்தின் கட்டுமானத்திற்கு  70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதன் கட்டுமாணப் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் பெப்ரவரி 25 ஆம் திகதி பாரத பிரதமர் நரேந்திர மோடியால் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த போர் நினைவு சின்னமானது, ரக்சக் சக்ரா, தியாக் சக்ரா, வீர்டா சக்ரா, அமர் சக்ரா என நான்கு அடிப்படையிலான சக்கரங்களை கொண்டுள்ளது.

இந்த நினைவிடத்தில் முதல் சுற்றுவட்டமான 'ரக்சக் சக்ரா" மரங்கள் நாட்டப்பட்டு காணப்படுகின்றது. அதாவது 'ரக்சக்" என்பது பாதுகாப்பை குறிக்கின்றது. நாட்டை தற்போது பாதுகாக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்த 'ரக்சக் சக்ரா" எனும் இந்த முதல் சுற்றுவட்டம் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவதாக காணப்படும் 'தியாக் சக்ரா" போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 'தியாக்" என்பது தியாகத்தை குறிக்கின்றது. போரில் உயிர்நீத்த வீர்களின் பெயர்கள் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.  1947 முதல் தற்போதுவரை நாட்டுக்காக உயிர்நீத்த 25,942 இராணுவ வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதேநேரம் "வீர்டா சக்ரா" என்பது வீரர்களின் வீரத்தை குறிப்பதாக உள்ளது. உயிருக்கு அஞ்சாமல் எதிரிகளை எதிர்த்து போரிட்ட வீரர்களின் போர் தொடர்பான காட்சிகள் இந்த வட்டத்தில் காணப்படுகின்றன.

இதேபோன்று மத்தியில் காணப்படும் முக்கிய சுற்று வட்டமாக 'அமர் சக்ரா" காணப்படுகின்றது. 'அமர்" என்பது நீடுழி வாழ்க என்பதன் பொருளாகும். தனது தாய் நாட்டுக்காக தமது உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு இராணுவ வீரர்களையும் நாடு என்றென்றும் மறக்காது என்பதற்காக அனையா சுடரை கொண்ட கம்பம் அமைக்கப்பட்டு அர்ப்பணிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல ஏக்கரில் காணப்படும் இந்த போர் நினைவிடமானது ஒவ்வொரு அங்குலமும் உயிர் நீத்த இராணுவ வீரரின் பெருமையை எடுத்து கூறுவதாக உள்ளது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு நாளும் அவர்களின் உறவுகளால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்படுகின்றது.

எனவே இந்த இடம் ஒருவித அமைதியையும் உணர்வையும் தழும்பிய நிலையில் காணப்படுகின்றது.

(முற்றும்..)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right