ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

Published By: Digital Desk 7

04 Feb, 2025 | 10:59 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

பாரம்பரியமாக நாட்டை ஆட்சிசெய்தவர்கள்  செயற்பட்ட பழைய வழிமுறைகளுக்கு சவால் விடுப்பதன் மூலமாக தனிப்பட்ட ஒருவரினால் கொண்டுவரக்ககூடிய  நல்ல மாற்றத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க காண்பித்துக் கொண்டிருக்கிறார். செய்தி ஊடகங்கள் மூலமும் யாழ்ப்பாணத்தில் உள்ள நம்பகமான கருத்துரையாளர்கள் மூலமும் அறியக்கூடியதாக இருந்த தகவல்களின்படி யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஜனாதிபதியின் கடந்தவாரத்தைய விஜயம் நாட்டின் இன ஐக்கியத்துக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியாக அமைந்திருக்கிறது. 

ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி தேர்தல்களின் பின்புலத்தில் நோக்கும்போது பொருத்தமான ஒரு நேரத்திலேயே  வடக்கிற்கான தனது விஜயத்தை அவர்  மேற்கொண்டார் என்று தோன்றுகிறது.

தமிழ் மக்களின் நாகரிகத்தின் அமைவிடமாக யாழ்ப்பாணம் வகிக்கும் முதன்மை இடம் காரணமாக ஜனாதிபதியின் விஜயத்தின் கவனக் குவிப்பு பாழ்ப்பாணம் மீதே இருந்தது. யாழ்ப்பாணத்துக்கு என்று ஒதுக்கிய நேரத்தை ஜனாதிபதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான  மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பயன்படுத்திக்  கொண்டார். 

சேனாதிராஜா பிராந்திய சுயாட்சி, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சமத்துவ உரிமைகளுக்கான தமிழர்களின் போராட்டத்தில் பல தசாப்தங்களாக முன்னரங்கத்தில் நின்றவர். 

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்று பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துமளவுக்கு ஜனாதிபதி நம்பிக்கையுடன் செயற்பட்டிருக்கிறார் 

வழமையாக ஜனாதிபதிகள் விஜயம் செய்யும் பகுதிகளின் கேந்திர இடங்களில்  மாத்திரமல்ல, யாழ்ப்பாணம் நோக்கிய வீதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அந்த வழமையான பாதுகாப்பு ஏற்பாடு எதையும் ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயத்தின்போது காணமுடியவில்லை. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு மிகவும் குறைவாக இருந்ததை யாழ்ப்பாண வாசிகள் அவதானித்தார்கள். கடந்த காலத்தில் ஜனாதிபதிகளின் விஜயங்களின்போது  வீதிகள் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் குடியிருப்பு பகுதிகளின் வீதிகளில் 24 மணிநேரமும் பாதுகாப்பு படையினர்  கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். 

குறைந்த மட்டத்திலான பாதுகாப்பு மக்களின் நல்லெண்ணத்தில் ஜனாதிபதிக்கு இருந்த நம்பிக்கையை வெளிக்காட்டியது.  மக்களுடன்  நெருக்கமாக கலந்து அவர்களைக் கட்டியணைத்து போட்டோக்களையும் அவர் எடுத்துக் கொண்டார்.

அன்றாட கவனம்

மக்கள் மத்தியில் உரையாற்றியபோது யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்தியைக் கொண்டு வருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். வீடுகளையும் தொழிற்சாலைகளையும் நிர்மூலம் செய்த கடுமையான மோதல்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்குவதற்கு முன்னதாக அங்கு ஒரு சில தொழிற்சாலைகளே இருந்தன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை,  பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை,  ஆனையிறவு உப்பளம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. 

இந்த தொழிற்சாலைகளை மீளக்கட்டியெழுப்புவதாக உறுதியளித்த ஜனாதிபதி வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கு பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய  பகுதிகளில் புதிய கைத்தொழில் வலயங்களை நிறுவப் போவதாகவும் அறிவித்தார். போர் காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்களை இந்த செயற்திட்டங்களில் முதலீடு செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாடு அனுபவித்த இனமோதலுக்கான காரணங்கள் தொடர்பான ஆய்வொன்றை முன்வைப்பதற்கும் வடக்கிற்கான தனது விஜயத்தை ஜனாதிபதி பயன்படுத்திக் கொண்டார். முன்னைய தலைமுறை அரசியல்வாதிகள் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு இனத்துவ தேசியவாதத்தைப் பயன்படுத்தியதன் விளைவாக  மக்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டு சமூகங்கள் ஒன்றை மற்றது அவநம்பிக்கையுடன் பார்க்கும் நிலை தோன்றியது என்று அவர் கூறினார். 

ஆனால் , தேசிய மக்கள் சக்தியை அதிகாரத்துக்கு  கொண்டுவந்த கடந்த பொதுத்தேர்தலில் உயர்வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த பாரம்பரிய அரசியல் தலைவர்களை மக்கள் நிராகரித்தனர். பதிலாக, இன, மத, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து அவர்கள்  தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். இது ஒரு புதிய நிகழ்வுப் போக்கு என்று ஜனாதிபதி தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது. இந்த இரு மாகாணங்களிலும் மக்கள்  தமிழ்த் தேசியவாத நிலைப்பாடுகளைக் கொண்ட   தமிழ் அரசியல் கட்சிகளுக்கே பாரம்பரியமாக வாக்களித்து வந்திருக்கிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் சுயாட்சியும் தமிழர்களுக்கு சமத்துவமும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே அந்த தமிழ்க்கட்சிகள் தேர்தல்களில் பிரசாரங்களைச் செய்து மக்களிடம் வாக்கு கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன. 

ஆனால், தேர்தல்களில் பெற்ற ஆணையை அந்த கட்சிகளினால் ஒருபோதுமே நிறைவேற்றக்கூடியதாக இருந்ததில்லை. அந்த நாட்களில் சில தமிழ்க்கட்சிகள் ஆளும் கட்சிகளுடன் உடன்படிக்கைகளைச் செய்துகொண்டன. ஆனால்,  பெரும்பாலும் அவை அரசாங்கங்களினால் ஏமாற்றப்பட்டதே வரலாறு. மக்களின் அன்றாட பிரச்சினைகளின் மீது ஜனாதிபதி செலுத்திய கவனம் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதற்கு மக்களைத் தூண்டுவதில் முக்கிய பங்கை வகிக்கும்.

ஜெனீவா தீர்மானம் 

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் ஆழ்ந்திருந்த தமிழ்த் தேசியவாதம் மற்றும் சுயாட்சிப் பிரச்சினைகளை ஜனாதிபதி திசாநாயக்க கையாளவில்லை என்ற போதிலும் கூட, யாழ்ப்பாண மக்கள் மீது நேர்மறையான ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தினார் எனாபது மிகவும் கவனிக்கத்தக்கது. எதிர்வரும் தேர்தல்களும் உள்ளூராட்சி மட்டத்திலானவை என்பதால் அவற்றில் தேசியப் பிரச்சினைகளின் முக்கியத்துவம் குறைவாகவே இருக்கும். உலகம் பூராவும் உள்ளூராட்சி தேர்தல்களில் உள்ளூர் மட்டப் பிரச்சினைகள் பற்றியதாகவே இருக்கும்.

அரச நிறுவனங்களில் நிலவும் 30,000 ஆயிரம் வெற்றிடங்களை வேலையற்ற பட்டதாரிகளைகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் நிரப்புவது குறித்து ஜனாதிபதி தனது பொதுக்கூட்ட உரைகளில் பேசினார். தமிழ்பேசும் பொலிசாரை நிமிப்பது குறித்தும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் குழாய்மூலமான குடிநீர்ப் பாவனையைப் பொறுத்தவரை வடபகுதி மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதை அவதானித்த ஜனாதிபதி நீர்விநியோகத் திட்டங்களை மேம்படுத்துவது பற்றியும்  பேசினார்.

தமிழ்த் தேசியவாதத்துக்கு  எந்த சலுகைகளைச் செய்தாலும் அதை சிங்களத் தேசியவாதத்தை தூண்டிவிடுவதற்கு தெற்கில் உள்ள தனது அரசியல் எதிரகள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை ஜனாதிபதி அறிவார்.ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஆளும் கட்சிகள் ஒன்றுடன் மற்றது ஒத்துழைத்துச் செயற்படுவதன் மூலம் மீட்சி பெறுவதில் நாட்டம் காட்டுகின்றன.

 சுயநல வேட்கை கொண்ட பாரம்பரிய உயர்வர்க்க அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த இனிமேலும் அனுமதிக்கப் போவதில்லை என்றும்  முன்னைய ஊழலுககாக அவர்கள் சட்டத்தின் முன்னால் பொறுப்புக்கூற வைக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி செய்த அறிவிப்புக்களினால் முன்னைய ஆளும் கட்சிகளுக்கு தற்போதைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் பற்றிய அக்கறை அதிகரித்திருக்கும்.

தேர்தல்களில் ஆதரவைப் பெறுவதற்கு போட்டி அரசியல் கட்சிகள் இனத்துவ தேசியவாதத்தை பயன்படுத்தின என்று யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கூறியது மிகவும் சரியானதே. ஆனால்,அதிகாரத்துக்கு வருவதற்கு இனத்துவ தேசியவாத அரசியல்வாதிகள் பயன்படுத்திய அடிப்படைப் பிரச்சினைகள் சகல சமூகங்களும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முறையில் கையாளப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

இலங்கையில் தற்போது போர் இல்லை என்றாலும்  போரின் முடிவுக்கு பினானரான காலப்பகுதியிலலேயே இன்னமும் நாடு இருக்கிறது. ஆனால், காணாமல் போனோர், நீண்டகாலச் சிறைக்கைதிகள், இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் தனியார் காணிகள், வடக்கு, கிழக்கில் தொடரும்  இராணுவத்தின் பெரியளவிலான  பிரசன்னம் ஆகியவற்றின் வடிவில் போருக்கான காரணங்களும் போரின் விளைவுகளும் தீர்க்கப்படாமல் இன்னமும் தொடருகின்றன.

இலங்கை போரின் முடிவுக்கு பினானரான ஒரு சமூகமாக இப்போது மாறவேண்டியது அவசியமாகும். அதற்கு தீர்க்கப்படாமல் தொடரும் போரின் விளைவான பிரச்சினைகளுக்கு தாமதமின்றி தீர்வுகளைக் காணவேண்டும். அதைப் பற்றியே ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உலிமைகள் பேரவையின் தொடர்ச்சியான தீர்மானங்கள் அமைந்திருக்கின்றன. கடந்த காலத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன  16 உடன்படிக்கைகளைச் செய்திருக்கிறது. ஆனால், எந்தவொரு அரசாங்கமும் அந்த உடன்படிக்கைகளை முடிவு வரை  நடைமுறைப்படுத்தியதில்லை.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுவான ஒரு நிலைக்கு கொண்டுவருவதற்காக தற்போதைய அரசாங்கம் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உறுதிப்பாட்டுடன் இருக்கிறது போன்று தெரிகிறது. இனமோதல் விடயத்தில் அரசியல் தீர்வைக் காண்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.  ஆனால், முன்னோக்கிச் செயற்பட்டு நிலைபேறான தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கான பலத்தை அல்லது நம்பிக்கை எந்த அரசாங்கமும் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் அந்த பலமும் நம்பிக்கையும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right