தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கும் சிலம்பரசன்

Published By: Digital Desk 2

03 Feb, 2025 | 04:01 PM
image

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் தயாராகும் 50 ஆவது திரைப்படத்திற்கு 'எஸ் டி ஆர் 50 'என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.  அட்மான் சினி ஆர்ட்ஸ் எனும் புதிய பட நிறுவனத்தை தொடங்கி இதன் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார் சிலம்பரசன். இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகர் சிலம்பரசனின் 42 ஆவது பிறந்த நாளான இன்று அவருடைய நடிப்பில் உருவாகும் 50 ஆவது திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 'எஸ் டி ஆர் 50 ' எனும் இந்தத் திரைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்யும் அந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தை சிம்புவின் புதிய பட தயாரிப்பு நிறுவனமான அட்மான் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் சிலம்பரசனின் சிறிய வயது தோற்றம் - கையில் தீப்பந்தத்தைப் பிடித்து புன்னகையுடன் தோன்றுவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதனை அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சிலம்பரசன், '' அட்மான் சினி ஆர்ட்ஸ் எனும் பெயரில் தயாரிப்பாளராக புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கிறேன். எனக்கும், இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் இலட்சிய படைப்பான இந்த 50 ஆவது படத்துடன் இதனை தொடங்குவதை தவிர சிறந்த வழி எதுவுமில்லை. இந்தப் படைப்பில் நாங்கள் முழு மனதுடன் ஈடுபட்டிருக்கிறோம்'' என பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே நடிகர் சிலம்பரசன் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சரியான தருணத்தில் வருகை தந்து படப்பிடிப்பு பணிகளை திட்டமிட்டபடி நிறைவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right