குழந்தை வரம் பெறவேண்டும் என்பதற்காக 7 மாதமான குழந்தையை மந்திரவாதி கடத்தி சென்று நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள செராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டத்தின் சாய்டா கிராமத்தில், சுபாஷ் என்பவரின் 7 மாத பெண் குழந்தையை, அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு குழந்தை இல்லை என்பதற்காக கடத்தி சென்று நரபலி கொடுத்த மந்திரவாதி மற்றும் குறித்த பக்கத்து வீட்டுக்காரர் என்போரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் கடந்த மாதம் கடத்தப்பட்ட 7 மாத குழந்தையை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை காணாமல் போன தினங்களில் குறித்த மந்திரவாதி மற்றும் பக்கத்துக்கு வீட்டுக்காரரான பதோய் என்போர் ஊரில் இல்லாமையை சந்தேகித்த பொலிஸார், மேற்கொண்ட தீவிர விசாரணையை தொடர்ந்து மந்திரவாதி குழந்தையை நரபலி கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பதோயின் வீட்டிலிருந்து குழந்தையை பலி கொடுக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, குழந்தையின் உடலை அருகிலுள்ள சுடுகாட்டிலிருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுவருவதாக குறித்த பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.