சாதனை படைத்து வரும் சத்யராஜ், ஜெய், யோகி பாபு இணைந்து மிரட்டும் 'பேபி & பேபி' பட முன்னோட்டம்

Published By: Digital Desk 2

03 Feb, 2025 | 03:41 PM
image

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகராகவும், பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராகவும் திகழும் 'புரட்சித் தமிழன்' சத்யராஜ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' பேபி & பேபி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' பேபி & பேபி ' எனும் திரைப்படத்தில் சத்யராஜ், ஜெய், யோகி பாபு ,கீர்த்தனா, சாய் தன்யா , பிரக்யா நாக்ரா , இளவரசு, ஸ்ரீமன் ,ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆர் ஜே விக்னேஷ் காந்த், தங்கதுரை, ராமர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் டி. பி. சாரதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை யுவராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. யுவராஜ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு வெளியிட்டார். இதற்காக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.

அந்த தருணத்தில் படத்தின் இயக்குநர் பிரதாப் பேசுகையில், '' பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராத தருணத்தில் அறிமுகமாகும் ஒரு குழந்தையால் ஏற்படும் கலாட்டாவும், கொமடியும் தான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த கதையை எழுதியவுடன் யோகி பாபுவிடம் தான் முதலில் சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. அதன் பிறகு தயாரிப்பாளர் யுவராஜை சந்தித்து கதையை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு படத்தில் இந்தந்த கதாபாத்திரத்திற்கு இவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என தயாரிப்பாளர் தான் ஆலோசனை வழங்கினார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

இதனிடையே 'ராஜா ராணி' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சத்யராஜ், ஜெய் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பதும் , குழந்தையை மையப்படுத்திய குடும்ப திரைப்படம் என்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதும் இதன் காரணத்தினாலேயே இப்படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்