வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டுக்காயங்களுடன் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னக்குளத்தில் வசித்த 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 5 மணிக்கு வவுனியா நகர்பகுதிக்கு சென்றதாக கூறி பஸ்ஸில் சென்ற இவர் இரவு சுமார் 9 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தனது கடையின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது முச்சக்கர வண்டியை எடுத்து விடும்படியும் தான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

நீண்டநேரமாகியும் தனது கணவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் இரவு 10 மணியளவில் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டபோது தொலைபேசி இயங்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை செட்டிகுளம்  - பூவரசங்குளம் வீதியில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் சென்றவர்கள் வீதியோரத்தில் சடலம் கிடப்பதை கண்டு செட்டிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.