ராமேஸ்வரம்  அருகே இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட நான்கு  கோடி இந்திய ரூபா மதிப்பிலான  தங்கத்துடன் இருவரை கைதுசெய்துள்ள இந்திய மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அதிகாரிகள் பிரதான சந்தேக நபரைத் தேடிவருகின்றனர்.

 

இலங்கையிலிருந்து  தனுஷ்கோடி ஊடாக தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய சுங்கத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து  மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த இரண்டுநாட்களாக சுங்கத்துறை, மத்திய உளவுத்துறையினர் கியூ பிரிவு கடலோரக்காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர சோதணையில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு பாம்பன் தெற்குவாடி பகுதியில் நாட்டுப்படகில் வந்த  7.5 கிலோ தங்கத்தை சென்னையை சேர்ந்த அலி என்பவரிடம் இருந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவுசெய்து கைது செய்தனர்.  

இதனையடுத்து அவரிடம்  இரவு முழுவதும் நடத்திய விசாரணையையடுத்து நேற்று பகல் 3 மணியளவில் பாம்பன் குந்துகால் துறைமுகத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த இரத்தினம் மற்றும் ராமநாதன் என்பவர்களை சோதணை செய்த போது இருசக்கர வாகனத்தில் மறைத்துவைத்திருந்த ஏழு கிலோ தங்கத்தையும் இருசக்கர வாகனத்தையும்  பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் மூவரையும்  ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவகம் கொன்டு சென்று வழக்குப் பதிவு செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் 24 மணி நேரமும்  பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து படகு மூலம்  ஒரே நாளில் சுமார் நான்கு கோடி தங்கம் கடத்தி வரப்பட்டு  பறிமுதல் செய்யப்பட்டது.  உள்ளுர் பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் ராமநாதபுரம் கடலோப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.