19 இன் கீழ் மகளிர் ரி - 20 உலகக் கிண்ண இறுதி ஆட்டம் : சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் குறிக்கோளுடன் தென் ஆபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா

31 Jan, 2025 | 10:03 PM
image

(நெவில் அன்தனி)

மலேசியாவின் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் குறிக்கோளுடன் தென் ஆபிரிக்காவை நடப்பு சம்பியன் இந்தியா சந்திக்கிறது.

இந்த இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி  ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்தாடிய ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்று முதலாவது சம்பியனாகியிருந்தது.

இப்போது அங்குரார்ப்பண அத்தியாயத்தை முன்னின்று நடத்திய தென் ஆபிரிக்காவை இறுதிப் போட்டியில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன்  இந்தியா   களம் இறங்கவுள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக இருப்பதால், இறுதிப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட்களால் இந்தியாவும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் தென் ஆபிரிக்காவும் வெற்றிகொண்டு இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இந்தியா முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் 2 போட்டிகளிலும் அரை இறுதிப் போட்டியிலுமாக தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றது.

தென் அபிரிக்கா முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டியிலும் அரை இறுதிப் போட்டியிலுமாக 5 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்த இரண்டு அணிகளில் இந்தியா சகலதுறைகளிலும் பலம்வாய்ந்த அணியாகத் தென்படுவதால் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா கடும் சவாலை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீராங்கனைகளே அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதிகூடிய விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ட்ரிஷா கொங்காடி 6 போட்டிகளில் ஆட்டம் இழக்காத ஒரு சதம் உட்பட 265 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் தமிழக வீராங்கனை குணாலன் கமலினி 2 அரைச் சதங்களுடன் 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்மா 5 போட்டிகளில் 15 விக்கெட்களையும் ஆயுஷி ஷுக்லா 6 போட்டிகளில் 12 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

முதலாவது போட்டியில் விளையாடாமல் இருந்த வைஷ்ணவி, மற்றொரு சுழல்பந்துவீச்சாளர் காயமுற்றதால் இரண்டாவது போட்டியில் விளையாடினார். அப் போட்டியில் 5 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

இந்த நால்வருடன் ஏனைய வீராங்கனைகளும் இந்தியாவை மீண்டும் உலக சம்பியனாக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளனர்.

தென் ஆபிரிக்க அணியில் ஜெம்மா போத்தா (86 ஓட்டங்கள்), கேலா ரினேக் (10 விக்கெட்கள்) ஆகிய இருவரே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் ஓரளவு பிரகாசித்துள்ளனர்.

அணிகள் விபரம்

இந்தியா: குணாலன் கமலினி, ட்ரிஷா கொங்காடி, சானிக்கா சோல்கே, நிக்கி ப்ரசாத் (தலைவி), ஈஷ்வரி அவாசரே, மிதிலா வினோத், ஆயுஷி ஷுக்லா, வி.ஜே. ஜோஷித்தா, ஷப்னம், பாருணிக்கா சிசோடியா, வைஷ்ணவி ஷர்மா.

தென் ஆபிரிக்கா: ஜெம்மா போத்தா, சிமோன் லௌரென்ஸ், ஃபே கௌலிங், கேலா ரினேக் (தலைவி), கராபோ மெசோ, மியெக் வென் வூர்ஸ்ட், செஷ்னி நாயுடு, ஏஷ்லி வன் வைக், லுயண்டா நிசூஸா, மோனாலிசா லெகோடி, நிதாபிசெங் நினி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27