(நெவில் அன்தனி)
சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என கருதப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாடரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதலாவது வோர்ன் - முரளிதரன் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
முதல் இரண்டு தினங்கள் தட்டையாகக் காட்சிகொடுத்த ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா கணிசமான ஓட்டங்களைக் குவித்தது. ஆனால், இலங்கை துடுப்பெடுத்தாடியபோது நிலைமை மாறி ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்ப, அவுஸ்திரேலியா 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மாலை மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் இன்னும் 7 விக்கெட்கள் மீதமிருக்க அவுஸ்திரேலியாவை விட 610 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது. பலோ ஒன்னை தவிர்ப்பதாக இருந்தால் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் மேலும் 410 ஓட்டங்ளைப் பெறவேண்டும். அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது.
ஓஷத பெர்னாண்டோ (7), திமுத் கருணாரட்ன (7), ஏஞ்சலோ மெத்யூஸ் (8) ஆகிய மூவரே ஆட்டம் இழந்தவர்களாவர்.
கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருப்பதுடன் அவர்கள் இருவரும் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் ஆட்டமிழக்காமல் இருக்கவேண்டும்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், மெத்யூ குணேமான், நேதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்தது.
தனது துடுப்பாட்டத்தை 104 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த ஸ்டீவன் ஸ்மித் 251 பந்துகளில் 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 141 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ஸ்டீவன் ஸ்மித் 3ஆவது விக்கெட்டில் கவாஜாவுடன் 266 ஓட்டங்களைப் பகிர்ந் து அணியை பலமான நிலையில் இட்டார்.
மறுபக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய உஸ்மான் கவாஜா, 352 பந்துகளில் 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 232 ஓட்டங்களைக் குவித்தார்.
இதன் மூலம் இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது அவுஸ்திரேலியர் என்ற வரலாற்றுச் சாதனையை கவாஜா நிலைநாட்டினார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கவாஜா ஆட்டம் இழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் அவுஸ்திரேலியா தனது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. இதனால் கவாஜாவால் இரட்டைச் சதத்தை பெறமுடியாமல் போனது.
ஆனால், காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இரட்டைச் சதம் குவித்து அந்தக் குறையை கவாஜா நிவர்த்திசெய்துகொண்டார்.
இதேவேளை, உஸ்மான் கவாஜா, ஜொஷ் இங்லிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.
அறிமுக வீரரான போதிலும் அனுவம்வாய்ந்தவர்போல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜொஷ் இங்லிஸ் 94 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 102 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டம் இழந்தார்.
அவரது மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுநர் அடம் வோக்ஸ் 2015இல் அறிமுக வீரராக டெஸ்ட் சதம் குவித்த பின்னர் அறிமுகப் போட்டியில் சதம் குவித்த அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை இங்லிஸ் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் மைக்கல் க்ளார்க், ஷோன் மார்ஷ் ஆகியோருக்குப் பின்னர் ஆசிய மண்ணில் அறிமுக வீரராக சதம் குவித்த மூன்றாவது அவுஸ்திரேலிய வீரரானார் ஜொஷ் இங்லிஸ்.
ஜொஷ் இங்லிஸ் சதம் குவித்தபோது அவரது பெற்றோரும் காலி சர்வதேச அரங்கில் போட்டியை இரசித்துக்கொண்டிருந்தனர்.
பெற்றோர் முன்னிலையில் சதம் குவிக்க கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இன்னிங்ஸ் நிறைவில் இங்லிஸ் கூறினார்.
அதன் பின்னர் அலெக்ஸ் கேரி, போ வெப்ஸ்டர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
போ வெப்ஸ்டர் 23 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டபொது, அலெக்ஸ் கேரி 46 ஓட்டங்களுடனும் மிச்செல் ஸ்டார்க் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 182 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 193 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இப் போட்டியில் அசித்த பெர்னாண்டோ, நிஷான் பீரிஸ், ப்ரபாத் ஜயசூரிய, ஜெவ்றி வெண்டசே ஆகிய நான்கு பந்துவீச்சாளர்ளை மாத்திரமே இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தினார். அவரது இந்த செயல் இரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிருப்தியையும் தோற்றுவித்தது.
61 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ள தனஞ்சய டி சில்வா ஏன் தன்னை பந்துவீச்சில் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்ற கேள்வியை எழவைத்துள்ளது.
பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸையும் அவர் பயன்படுத்தவில்லை.
குறைந்தது பத்து ஓவர்களாவது இருவரும் பந்துவீசியிருக்கலாம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் அபிப்பிரயாமாகும்.
எதிரணி பலமான நிலையில் இருக்கும்போது சில துணிச்சலான தீர்மானங்களை அணித் தலைவர் எடுக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாராணமாக விளங்கியவர்கள் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா ஆகியோராவர்.
அதேபோன்று தனஞ்சய டி சில்வாவும் எதிர்காலத்தில் துணிச்சலுடன் செயற்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM